sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அசுர வதம் - 19

/

அசுர வதம் - 19

அசுர வதம் - 19

அசுர வதம் - 19


ADDED : மார் 01, 2024 01:07 PM

Google News

ADDED : மார் 01, 2024 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தானாசுரன் வதம்

தம்பகிரி என்னும் மலைநாட்டை ஆட்சி செய்தான் தம்பன் எனும் அசுரன். சூரியனுக்குச் சமமான ஆற்றலுடன் ஆண்மகன் பிறக்க வேண்டும் என வேள்வி நடத்தினான். சூரியனும் அவனுக்கு வரமளித்தார். அதனைத் தொடர்ந்து தம்பனின் மனைவி சுரை கருவுற்றாள். ஆனால் அக்குழந்தை பிறந்த போது உரிய வளர்ச்சியின்றி உள்ளங்கை அளவே இருந்ததால் பெற்றோர் புறக்கணித்தனர். அதனால் அரண்மனைச் செவிலியர்கள் பராமரித்தனர். தானான் என அழைக்கப்பட்ட அக்குழந்தை, இளைஞனாக வளர்ந்ததும் பெற்றோர் மீது கோபம் கொண்டான்.

தந்தையைக் கொன்றான். தாயை சிறையில் அடைத்தான். அந்நாட்டின் மன்னராகப் பொறுப்பேற்ற பின் தான் மட்டும் அழிவே இல்லாமல் வாழ ஆசைப்பட்டான். அதற்காகச் சூரியனை வேண்டி தவமிருந்தான். காட்சியளித்த சூரியனிடம் இறக்கக் கூடாது என வரம் கேட்டான்.

“உலகில் பிறந்தால் இறந்தாக வேண்டும். இந்த வரத்தை யாராலும் தர இயலாது. வேறொரு பயனுள்ள வரத்தைக் கேள்” என்றார். உடனே அவன், “என் உடல் ஆயிரம் கவசங்களால் பாதுகாக்கப்பட வேண்டும். பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்த ஒருவன் என்னுடன் போர் புரிந்து வெற்றி கொண்டால், அவன் ஆயிரம் கவசங்களில் இருந்து ஒன்றை அறுத்து எறியலாம். இப்படி

ஆயிரம் கவசங்களையும், என் குண்டலங்களையும் அறுத்த பிறகே என் உயிர் நீங்க வேண்டும்” என வித்தியாசமான வரத்தைக் கேட்டான்.

சூரியனும் அதைக் கொடுத்து மறைந்தான். ஆயிரம் கவசங்கள் கொண்ட அவன் 'சகஸ்ர கவசன்' (சகஸ்ரம் - ஆயிரம்) எனப்பட்டான். தனக்கு அழிவு வராது என கருதியதால் அசுரக் குணங்கள் அவனிடம் அதிகரித்தன. காடுகளில் தவம் புரியும் முனிவர்கள், துறவிகளைக் கொடூரமாகத் தாக்கிக் காயப்படுத்தி விரட்டியடித்தான். தாக்குதலுக்குப் பயந்த முனிவர்கள், திருமாலிடம் தங்களைக் காக்குமாறு வேண்டினர். அவரும் காப்பதாக உறுதியளித்தார்.

இதற்கிடையே தட்சப் பிரஜாபதியின் மகளும், தர்மாவின் மனைவியுமான அஹிம்சா என்பவள் முனிவர்களைத் தவம் செய்ய விடாமல் தடுக்கும் சகஸ்ர கவசனைக் கொல்வதற்கான குழந்தை தனக்குப் பிறக்க வேண்டும் எனத் திருமாலை வேண்டினாள்.

திருமாலும் அஹிம்சாவிற்கு நரன், நாராயணன் என்னும் பெயர்களோடு இரட்டைக் குழந்தைகளாகப் பிறந்தார். பெரியவர்களாக வளர்ந்த அவர்களின் உடல்கள் இரண்டாக இருந்த போதும், இருவரின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றாக இருந்தன.

குருகுலக் கல்வியுடன் அனைத்துப் போர்ப் பயிற்சிகளிலும் தேர்ச்சி பெற்றனர். தங்கள் தாயின் விருப்பத்திற்கேற்ப சகஸ்ர கவசனைக் கொல்ல முடிவு செய்த அவர்கள், அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினர். நரன் பன்னிரண்டு ஆண்டு தவம் செய்தான். பின்னர் நாராயணனுடன் சேர்ந்து போரிட்டு அவனை வென்று, அவனுடைய ஆயிரம் கவசங்களில் ஒன்றை அறுத்தெறிந்தான்.

இப்படியே நரனும் நாராயணனும் சேர்ந்து சகஸ்ர கவசனிடம் போரிட்டு அவனது ஆயிரம் கவசங்களில் 999 கவசங்களை அறுத்தனர். இன்னும் ஒரு கவசத்தை மட்டும் அறுத்தால் அவனைக் கொன்று விடலாம் என கருதினர்.

அப்போது பிரளயம் ஏற்படவே அனைத்தும் அழியத் தொடங்கின. சகஸ்ர கவசன், நரன், நாராயணன் உள்ளிட்ட அனைவரும் அழிந்தனர். மீண்டும் உலகம் தோன்றியது. அதில் பல நுாறாண்டுகளுக்குப் பிறகு சகஸ்ர கவசன் வசுசேனனாகப் பிறந்தான். அவனுடைய உடலில், முந்தையப் பிறவியில் மீதமிருந்த ஒரு கவசம் சேர்ந்தே இருந்தது. மீதமிருந்த ஒரு கவசத்தை அவனிடமிருந்து அகற்றி அவனைக் கொல்வதற்காக இப்பிறவியில் நரன் அர்ச்சுனனாகவும், நாராயணன் கிருஷ்ணனாகவும் பிறந்தனர்.

வசுசேனன் உடலோடு இயற்கையாகவே ஒட்டியிருந்த கவசத்தை இந்திரன் தானமாகப் பெற்றுச் சென்றான். அதன் பிறகே அவன் 'அறுப்பவன்' என்று பொருள் தரும் விதமாக 'கர்ணன்' என்ற புதிய பெயரைப் பெற்றான்.

அதன் பிறகு நடைபெற்ற மகாபாரதப் போரில் அர்ச்சுனன், கிருஷ்ணர் உதவியோடு கர்ணனைக் கொன்றான். தானாசுரன் எனும் சகஸ்ர கவசனை வதம் செய்வதற்கு ஒரு பிரளயம் முடிந்து மறு பிரளயம் வரை நீண்ட காலம் தேவைப்பட்டது.

கர்ணன் செய்தது தானமா?

கர்ணனிடம் யாசகம் கேட்பதற்காக அந்தணர் வடிவில் வந்த இந்திரன் கவசக் குண்டலத்தைக் கேட்டான். வந்திருப்பது இந்திரன் என தெரிந்து கொண்டான் கர்ணன்.

“உங்களுடைய விருப்பத்தை நிச்சயம் நிறைவேற்றுவேன். ஆனால் ஏன் கவசத்தை மட்டும் கேட்கிறீர்கள். உங்களுடைய மரபு வழியினர் மொத்தமும் வாழ்வதற்குரிய செல்வத்தை என்னால் தர முடியும்' என்பது போன்ற ஆறுதல் வார்த்தைகளைக் கூறி இந்திரனைத் திசை திருப்ப முயற்சித்தான் கர்ணன். ஆனால் இந்திரனின் உறுதியைக் கண்ட பின், “நீங்கள் இந்திரன் என்பதை அறிவேன், பாண்டவருக்கு உதவ வந்த தாங்கள், எனக்கு வரமளிக்கவும் முன்வந்தால் என் கவசக் குண்டலத்தைத் தருகிறேன்' என ஒரு ஒப்பந்தத்தை முன்வைத்தான். எதிரியைக் கொல்லும் வலிமை பெற்ற 'சக்தி' என்னும் அஸ்திரத்தை வேண்டினான். அதற்கு இந்திரனும் சம்மதித்தான். கர்ணன் தன் கவசம் குண்டலத்தை அளித்து 'சக்தி' அஸ்திரத்தைப் பெற்றான். இச்செயல் போற்றத்தக்கது என்றாலும் ஏதேனும் ஒன்றை வேண்டி அதற்காகத் தானமளிப்பது முறையா? இது வணிக நடவடிக்கை போலாகுமே.

தற்பெருமைக்காக செய்யப்படும் தானங்கள் உயர்ந்தது அல்ல என பகவத் கீதை வலியுறுத்துகிறது.



பிரளயம்

பிரளயம் என்பது அழிவு. ஆனால் இங்கு பிரளயம் என்றால் கால அளவைக் குறிப்பதாகும். தமிழில் கற்பம் எனப்படும் பிரளயம் நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.

1. நித்திய பிரளயம்: அவரவர் பிறப்பு மற்றும் இறப்பு. இந்த நிகழ்வு தினம் தினம் நடந்து வருவதைக் குறிக்கிறது.

2. அவாந்தர பிரளயம்: ஆயிரம் சதுர்யுகம் முடிவதைப் பிரம்மாவுக்கு ஒரு பகல் முடியும் என்பர். (சதுர்யுகம் - 129 (தேவ வருஷம்) - 43 லட்சத்து 21,000 (மனுஷ வருஷம்)) அது முடியும் போது, புஹு, புவஹா, சுவஹா என்னும் மூன்று உலகங்கள் அழியும்.

நான்கு உலகங்கள் மீதமிருக்கும். மீண்டும் அவருக்கு நான்கு சதுர்யுகங்கள் முடிந்தால் அவருக்கு இரவு முடிந்து விடும். அப்போது மீண்டும் உலகங்களைச் தோற்றுவிப்பார்.

3. பிராக்கிரத பிரளயம்: பிரம்மாவின் காலம் முடிந்ததும் எல்லாப் பிரம்மாக்களும் அழிந்து மூல பிரக்ருதியுடன் ஒட்டிக் கொள்வர். எதுவுமே இருக்காது.

4. ஆத்யந்திக பிரளயம்: ஒரு ஜீவாத்மா மோட்சம் அடைந்த பின், அது மீண்டும் பூமியில் பிறப்பதில்லை. அதை ஆத்யந்திக பிரளயம் என்பர்.

-தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us