ADDED : மார் 01, 2024 01:06 PM

தாயும் சேயும்
என்முன் அமர்ந்திருந்தவளுக்கு 45 வயதிருக்கும். அழகாக இருந்தாள். நாங்கள் சென்னையில் ஒரு பெரிய உணவகத்தில் இருந்தோம். “நான் மாலினி. ஒரு பெரிய கம்பெனில ஜெனரல் மேனேஜரா இருக்கேன்”
அது பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனம்.
“எங்க கம்பெனியோட அடுத்தத் தலைவரத் தேர்ந்தெடுக்கப் போறாங்க. எனக்கும் இன்னொரு ஜெனரல் மேனேஜரான பிரியாவுக்கும்தான் போட்டி. எங்க ரெண்டு பேரையும் நெறையத் தரம் இண்டர்வியூ பண்ணிட்டாங்க. இன்னிக்கு சாயங்காலம் முடிவ அறிவிக்கப் போறாங்க”
இதில் நான் எங்கே வந்தேன்?
“எனக்காக நீங்க பச்சைப்புடவைக்காரிகிட்ட வேண்டிக்கணும். எங்க கம்பெனி தலைவர் பதவி சாதாரணம் இல்ல. பல லட்ச ரூபாய் சம்பளம். சொகுசு காரு. மாசத்துக்கு ஒருதரம் வெளிநாட்டுப் பயணம். ஆனால் பொறுப்புகளும் ஜாஸ்தி”
“உங்களோட போட்டி போடற பிரியா எப்படி?”
“சுமார் ரகம்தான். இத்தனைக்கும் அவகிட்ட இருக்கற மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர் எல்லாம் பெரிய கில்லாடிங்க. அதனாலதான் அவ வண்டி ஓடிக்கிட்டிருக்கு. எனக்குக் கீழ வேலை பாக்கறது எல்லாம் வெறும் ஏப்பை சாப்பைங்க. இதுவரை கம்பெனியோட செலவக் குறைக்கவும் வருமானத்தப் பெருக்கவும் 33 யோசனை சொல்லிருக்கேன். பிரியா மூணு சொல்லியிருந்தா ஜாஸ்தி”
“அப்ப உங்களுக்குத்தானே அந்த பதவி?”
“பிரியா எங்க எம்.டி.,க்குச் சொந்தம். இது பிரைவேட் கம்பெனி சார். கேட்க ஆள் கிடையாது. எம்.டி.,கிட்ட போய் பிரியா, “மாமா எனக்கே அந்தப் பதவியக் கொடுத்திருங்க”ன்னு சொன்னா உடனே கொடுத்திருவாங்க. எனக்குப் பச்சைப்புடவைக்காரிதான் ஆதரவு”
“உங்களுக்காக நிச்சயம் வேண்டிக்கறேம்மா”
மாலினி கிளம்பிச் சென்றாள்.
மாலினி அந்தக் கம்பெனிக்குத் தலைவியாக வேண்டும் என பிரார்த்தித்தேன். மணிக்கட்டில் சுள்ளென அடி விழுந்தது. அழுக்கு துணியுடன் மேஜை துடைக்கும் பெண் நின்றிருந்தாள்.
“அடுத்தவர் கர்மக் கணக்கில் மூக்கை நுழைக்காதே என சொல்லியிருக்கேனே. அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும் என்பதோடு நிறுத்திக் கொள். மாலினிக்குப் பதவி கொடு, ஷாலினிக்குப் பணம் கொடு எனக் கேட்காதே”
அவளது காலைத் தொட்டு வணங்கினேன்.
“மன்னியுங்கள்! உணர்ச்சிவசப்பட்டு...”
“மாலினிக்குப் பதவி கிடைக்காது. நாளை உன்னைப் பார்க்க வருவாள். என்னைக் கன்னாப் பின்னாவென திட்டுவாள்”
“உங்களைத் திட்டினால் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது”
“ஆற்றாமையில் திட்டத்தான் செய்வாள். நானே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. நீ ஏன் பொங்குகிறாய்?”
“நான் என்ன செய்யவேண்டும்?”
“உன்மூலம் அவளுக்கு உண்மையை உணர வைக்கிறேன். அதன் மூலம் அவளை உயர வைக்கிறேன்”
“ திட்டுபவரையும் துாக்கி விட நினைக்கிறீர்களே...''
“அவள் என் குழந்தையடா. மாலினி பக்குவப்படவேண்டும் என்பதற்காகவே இந்த நாடகம்”
மறுநாள் மாலை ஐந்து மணிக்கு மாலினியிடமிருந்து அழைப்பு வந்தது.
“நேத்துப் பாத்த ஓட்டல்ல இரவு ஏழு மணிக்குச் சந்திக்கலாம்” பதில் சொல்லும் முன்பே இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மாலினி கூச்சலிடுவாள் என கணித்து உணவகத்தின் ஒதுக்குப்புறமாக இருந்த மேஜையைத் தேர்ந்தெடுத்தேன். குறித்த நேரத்தில் வந்தவள் கொதித்து எழுந்தாள்.
“பச்சைப்புடவைக்காரி தெய்வமே இல்ல, சார். அவளப் பத்தி எழுதாதீங்க. உங்கள மாதிரி ஆளுங்க அவளக் கருணைக்கடல்ன்னு பில்டப் தர்றீங்க. அவ ராட்சசி. அவள...''
“தயவு செஞ்சு நடந்ததை சொல்லுங்க”
அடுத்த சில நிமிடம் மவுனம் நிலவியது.
“தலைவி பதவிக்கு நான் லாயக்கில்லன்னு சொல்லிட்டாங்க சார். சொந்தக்காரங்கன்னு வந்துட்டா படிப்பு, புத்திசாலித்தனம் எதுவும் எடுபடாது. நான் பிரின்ஸ்டன் யூனிவர்சிடி எம்.பி.ஏ., அவள் எம்.ஏ., படித்தவள். எனக்கு அவளை விட அஞ்சு வருஷம் அனுபவம் ஜாஸ்தி. இந்த கம்பெனிக்கு எத்தனை கோடி சம்பாதிச்சிக் கொடுத்திருக்கேன் தெரியுமா”
புலம்பியபடி போனாள் மாலினி. அது முடிந்ததும் அழுகை தொடங்கியது.
சில நிமிடம் கழித்து மென்மையான குரலில் மாலினியைக் கேட்டேன்.“உங்க கீழ வேலை பாக்கறவங்கள, மேனேஜர், அசிஸ்டெண்ட் மேனேஜர், உங்க பி ஏ., இவங்களை எப்படி நடத்துவீங்க மாலினி?”
“பெத்த அம்மா மாதிரி பாசத்தோட நடத்துவேன், என் பி.ஏ.,வோட அப்பாக்குத் திடீர்னு ஹார்ட் அட்டாக் வந்திருச்சி. என் பணம் லட்ச ரூபாயக் கொடுத்தேன். சென்னை மேனேஜர் இளங்கோவோட பொண்ணு கல்யாணத்துக்கு உதவி செஞ்சேன். வேலையில கண்டிப்பா இருப்பேன். மத்த விஷயங்கள்ல அன்பாத்தான் நடத்துவேன்”
“அன்பா நடத்தினா மட்டும் போதாதும்மா. நேர்மையும் வேணும்ல?”
“என்ன உளறுறீங்க?”
“நீங்க வழக்கமா உங்க கம்பெனி சரக்கை சென்னைத் துறைமுகத்துலருந்துதான் ஏத்துமதி செய்வீங்க. அதுக்குப் பதிலா துாத்துக்குடியில் இருந்து பண்ணினா செலவு மிச்சமாகும்னு அசிஸ்டெண்ட் மேனேஜர் ரகு ஐடியா கொடுத்தாரு. அது சரிப்படாதுன்னு அவர்கிட்டச் சொல்லிட்டு எம்.டி.,யிடம் போய் அதே ஐடியாவ நீங்களாச் சொல்ற மாதிரி சொன்னீங்க. எம்.டி., உங்களப் பாராட்டி லட்ச ரூபாய் பரிசு கொடுத்தாரு.
அத அப்படியே அமுக்கிட்டீங்க. உங்க மேனேஜர் வத்சலா பேக்கிங் முறைய மாத்தினா செலவு குறையும்னு சொன்னாங்க. அதை உங்க ஐடியான்னு சொல்லி பரிசு வாங்கிக்கிட்டீங்க.
“கீழ வேல பாக்கறவங்கள பெத்த தாய் மாதிரி பாத்துக்கற லட்சணம் இதுதானா? தன் குழந்தை கிறுக்கினாலும் இது என் குழந்தை வரைஞ்ச ஓவியமாக்கும்னு பெருமைப்படுவா தாய். ஆனா நீங்க குழந்தைங்க வரைஞ்ச ஓவியத்த நான் வரைஞ்சதுன்னு சொன்னீங்க”
“இதுக்கும் தலைவர் பதவிக்கும் என்ன... சம்பந்தம்''
“உங்க தலைமைய ஊழியர்கள் ஏத்துக்கிட்டாத்தானே கம்பெனி நல்லா நடக்கும்? உங்க கீழே வேல பாக்கறவங்களையும் பிரியாவின் கீழ வேல பாக்கறவங்களையும் ரகசியமா விசாரிச்சிருக்காங்க. அப்போ உங்க வண்டவாளம் தெரிஞ்சி போச்சு. பிரியாகிட்ட வேலை பாக்கறவங்க அவளுக்காக உயிரையே தரத் தயாரா இருக்கறதாச் சொன்னாங்க. பிரியாவத் தலைவி ஆக்கிட்டாங்க”
சத்தம் வராமல் அழுதாள் மாலினி.
“நீங்க இன்னிக்குப் பச்சைப்புடவைக்காரிய வாய்க்கு வந்தபடி திட்டப்போறீங்கன்னு அவளுக்கு நேத்தே தெரியும். அவளுக்குத் தெரியாம எதுவும் நடக்குமா என்ன? அவ எவ்வளவு திட்டினாலும் பதிலுக்கு திட்டக் கூடாது. நடந்ததை அவளுக்குப் புரியவைன்னு சொன்னா பச்சைப்புடவைக்காரி.
“அவ மீது ஏன் இவ்வளவு பாசம்னு கேட்டேன்.
“நான் தாய்; அவ என் குழந்தைன்னு சொன்ன பச்சைப்புடவைக்காரிய ராட்சசின்னு திட்டறீங்க? நல்லா இருங்க”
பெரிதாக அழத் தொடங்கினாள் மாலினி. நான் மெதுவாக நழுவினேன்.
வாசலில் பெருக்கிக் கொண்டிருந்த பணியாளர் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.
“அவளைத் திருத்திவிட்டாயே”
“நீங்கள் பேசினீர்கள்; நான் வாயசைத்தேன்”
“உனக்கு என்ன வேண்டும்?”
“ஒருமுறை கேட்டு வாங்கிக் கட்டிக்கொண்டது போதாதா?”
“என்ன வேண்டும்?”
“அல்லல்படுவோர் நெஞ்சமெல்லாம் அன்பால் என்றும் நிறையட்டும்”
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com