ADDED : மார் 01, 2024 01:05 PM

காஞ்சிபுரம் தேனம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தார் காஞ்சி மஹாபெரியவர். கேரளாவைச் சேர்ந்த மூதாட்டி ஒருவரை கைத்தாங்கலாக இரு இளைஞர்கள் அழைத்து வந்தனர்.
''ஏன் இவரை அழைத்து வருகிறீர்கள்'' என மடத்தின் சிப்பந்திகள் கேட்டனர். அவர்களில் ஒருவர் இந்த மூதாட்டிக்கு பார்வை போய்விட்டது. வைத்தியம் பார்த்தும் பலன் கிடைக்கவில்லை. ஆனால் பார்வை இல்லையே என்ற மனக்குறை பாட்டிக்கு நீங்கவில்லை. இவரது ஜாதகத்தை ஆய்வு செய்த ஜோதிடர் ஒருவர், 'முன்னோர் சாபமே காரணம். பரிகாரமாக புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்யுங்கள்' என்றார். அதன்படி பல கோயில்களுக்கு சென்றோம். கடைசியாக வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதரை தரிசித்தோம். அங்கு பக்தர் ஒருவர் இந்த பிரச்னையை கேட்டு விட்டு, 'கடவுளின் அருளை குருநாதரின் மூலமாக பெற முடியும். உடனே காஞ்சிபுரம் சென்று மஹாபெரியவரை தரிசியுங்கள்' என்றார். அதைக் கேட்டுத்தான் இங்கு வந்தோம்'' என்றார்.
மஹாபெரியவரிடம் அவர்களை அழைத்துச் சென்றனர். பாட்டியை உற்று நோக்கிய மஹாபெரியவர் அருகில் நின்ற சிப்பந்தியிடம், 'டார்ச் லைட்டை எடுத்துட்டு வா' என்றார்.
அதை அவர் கொடுத்ததும் தன் முகத்தை நோக்கி லைட்டை அடித்தார். தவவலிமையால் பிரகாசிக்கும் சுவாமிகளின் முகம் டார்ச் வெளிச்சத்தில் இன்னும் ஜொலித்தது. இதைப் பார்த்த மூதாட்டி 'மஹாபெரியவரின் முகம் பளிச்சென்று என் கண்ணுக்குத் தெரிகிறதே' என மகிழ்ந்தார். இதைக் கேட்டு இளைஞர்களும் மகிழ்ந்தனர். அவர்களுக்கு குங்குமப் பிரசாதம் தரப்பட்டது. குருவருளின் மகிமையால் விதியின் கொடுமை நீங்கியதை எண்ணி மனநிறைவுடன் அவர்கள் புறப்பட்டனர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.