sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 26

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 26

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 26

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 26


ADDED : பிப் 23, 2024 11:55 AM

Google News

ADDED : பிப் 23, 2024 11:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நண்பனே... நண்பனே…

'உலக இலக்கியங்களில் விலங்குகளும், பறவைகளும் இடம் பெற்றிருக்கின்றன. ஆனால் கம்பன் விவரித்தது போன்ற ஓர் அற்புதத்தை உலக இலக்கியங்களில் மட்டுமல்ல... மூல நுாலான வால்மீகி ராமாயணத்திலும் காண இயலவில்லை. ஜடாயு என்ற பறவையை ஒப்பற்ற முறையில் உருவாக்கி, 'உயிர் புகழ்க்கு விற்ற சடாயு' என்று பேசுமாறு அப்பாத்திரத்தை அமைத்திருக்கிறான் கம்பன்' என்கிறார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம். அந்த ஜடாயுவை நாம் சந்திக்கப் போகிறோம்.

பல முடிகளை ஒன்றாக இணைத்து பின்னிய ஜடை போன்ற வாழ்நாளைக் கொண்டவன் என்றும், தன் சிறகில் உயிரைக் கொண்டவர் என்றும் ஜடாயு என்பதற்குப் பொருள் கொள்ளலாம்.

சூரியனின் தேரோட்டியான அருணனின் மகன் ஜடாயு. இவரது அண்ணன் சம்பாதி. ஒருமுறை சகோதரர் இருவரும் தம் தந்தை அருணனைக் காண சூரியனை நோக்கிப் பறந்து சென்றனர். அப்போது வெப்பம் தாக்கவே சம்பாதி தன் தம்பி ஜடாயுக்கு மேலாகப் பறந்து அவனுக்கு நிழல் கொடுத்தான். ஆனால் சூரியனின் தாக்குதலுக்கு ஆட்பட்டு அவனது சிறகுகள் தீய்ந்து போகவே சம்பாதி கீழே விழுந்தான். ஆனாலும் தம்பியைக் காப்பாற்றியதால் மகிழ்ச்சி அடைந்தான்.

இந்த சம்பாதிக்கு பின்னாளில் ராமநாம ஜபத்தால் தீய்ந்த சிறகுகள் வளர்ந்தன. அப்போது ராமனின் மகிமையை உணர்ந்து நெகிழ்ந்தவன் இவன்.

தசரதனின் நெருங்கிய நண்பன் ஜடாயு. ஒரு சமயம் தசரதன் காட்டில் வேட்டையாடச் சென்ற போது களைப்பு மேலிட ஓய்வெடுத்தார். அப்போது அவரைத் தீண்ட வந்த பாம்பைக் கொன்று அவரது உயிரைக் காத்தார் ஜடாயு.

பல ருசியான கனிகளைப் பறித்து வந்து அவருக்குக் கொடுத்து அவரது பசி, களைப்பை போக்கினார். அன்று முதல் இருவரும் நண்பர்களாயினர்.

இந்திரனுக்காக, அவன் சார்பில் சம்பராசுரனுடன் போரிட்டார் தசரதன். அப்போது ரதத்தை கைகேயி செலுத்தினாள் என்றாலும் தசரதனுக்கு ஒரு கேடயமாக நின்று சம்பாசுரனை எதிர்த்தவர் ஜடாயு. அதே போல சனியுடன் போரிட நேர்ந்த போது சனியின் தாக்குதலால் நிலைகுலைந்து தசரதன் விழ, அவரைத் தாங்கி நின்று காத்தவர் ஜடாயு.

இவரே திரேதாயுகத்தில் கழுகு வடிவில் திருக்கழுக்குன்றத்தில் சிவனை பூஜித்தார் என்றும், அதே போல வைத்தீஸ்வரன் கோவிலிலும் சிவனை வழிபட்டதால் அத்தலம் புள்ளிருக்கு வேளூர் (கழுகுப் பறவையாகிய புள் வழிபட்ட தலம்) என்றும் பெயர் பெற்றது.

தந்தை தசரதனின் ஆணைப்படி கானகம் வந்த ராமன், லட்சுமணன், சீதை மூவரும் அங்கே அகத்திய முனிவரைக் கண்டனர். அவரது வழிகாட்டுதலின்படி பஞ்சவடி நோக்கிச் சென்றனர். வழியில் பிரசரவணம் என்ற மலை மீது ஜடாயு அமர்ந்திருப்பதைக் கண்டனர். பிரமாண்ட உருவினராக, அந்த மலையையே தன் சிறகுகளால் மூடியபடி அமர்ந்திருந்த அவரைப் பார்த்து வியந்ததோடு சந்தேகமும் கொண்டனர் ராம சகோதரர்கள். விராதன் போன்று யாரேனும் அரக்கனாக இருக்கலாமோ? தங்களைக் குறுக்கிடும் இன்னொரு பிரச்னையோ மலை மீது அமர்ந்திருப்பது?

இம்மூவரையும் கண்ட ஜடாயுவும் கூரிய பார்வையால் அளந்தார். ஆண்கள் இருவர் மரவுரி, ஜடாமுடி தரித்திருக்கிறார்கள். ஆனால் இருவரும் கையில் வில்லேந்தியுள்ளனர் வைத்திருக்கிறார்கள்,

முதுகில் அம்பறாத்துாணி தொங்குகிறது. உடன் வந்திருக்கும் பெண்ணும் எளிமையாக காட்சியளிக்கிறாள். இவர்கள் தேவர்கள் போன்றவர்கள், ஆபத்தானவர்கள் அல்லர்...

'இனியவர்களே, நீங்கள் யார்?' என்று அவர்களைப் பார்த்துக் கேட்டார் ஜடாயு.

ஜடாயுவின் மென்மையான பேச்சால் சந்தேகம் தெளிந்த ராமன், 'நான் ராமன், தசரதனின் மைந்தன், இவன் என் தம்பி, லட்சுமணன், இவள் என் மனைவி, சீதை' என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டான்.

உடனே பெருமகிழ்ச்சி அடைந்தார் ஜடாயு. 'ஆஹா என் இனிய நண்பன் தசரதனின் மைந்தர்களா நீங்கள்! அவரையே பார்த்தாற்போல இருக்கிறது. மிகவும் சந்தோஷம். சரி, ஐயன் தசரதன் நலமா?'

ராமனின் கண்களில் நீர் துளிர்த்தது. 'தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி அதனால் அவர் மண்ணுலகு நீத்தார்' என்று தழுதழுத்த குரலில் கூறினான்.

அதைக் கேட்டு ஜடாயு துயருற்றார். 'அடடா, என் இனிய நண்பா, உன்னை இழந்தேனே! சம்பாசுரனை அழித்த போது என் உதவியைப் பெரிதாகக் கருதி, 'நான் உடல், நீ உயிர்' என்று உன்னோடு என்னைச் சேர்த்துக் கொண்டாயே! நீ உலகை நீத்ததை அறிந்தும் நான் உயிர் நீங்காமல் இருக்கிறேனே!' என புலம்பினார். பிறகு மனம் தெளிந்து, 'அதுசரி, மாமன்னர் மரணித்த பிறகு நீங்கள் ஏன் கானகம் வந்தீர்கள்? யாரேனும் தேவரோ, அரக்கரோ, நாகரோ அல்லது வேறு எவரோ உங்களுக்குத் துன்பம் இழைக்க அதனால் இவ்வாறு வர வேண்டியிருந்ததோ? அப்படியானால் சொல்லுங்கள், உங்களை இந்நிலைக்கு ஆளாக்கியவன் யாராக இருந்தாலும் அவனைக் கூறு போட்டு, உங்களைக் காப்பேன்' என்று கோபத்துடன் பேசினார்.

ராமன் லட்சுமணனை நோக்க, அவன் ஜடாயுவுக்கு பதிலளித்தான். தசரதன் தன் மனைவி கைகேயிக்கு அளித்த வரங்களின் காரணமாக வனம் புக நேர்ந்ததை விரிவாக எடுத்துரைத்தான். அதைக் கேட்டு நெடுமூச்செறிந்த ஜடாயு, 'நான் இன்னும் உயிர் நீங்காமலிருக்கிறேனே. நட்புக்கு நல்லதோர் இலக்கணமாக நான் விளங்காதிருக்கிறேனே. இப்போதே தீ மூட்டுகிறேன். அதில் குதித்து என் நட்பின் மேன்மையை காட்டுகிறேன். என் இறுதிச் சடங்கையும் நீங்களே செய்து என்னை உங்கள் தந்தையாருடன் சேர்த்து வைப்பீராக' என விரக்தியுடன் சொன்னார்.

உடனே ராமன், 'பெருந்தகையே, எங்களைக் காக்க வேண்டிய எங்கள் தந்தையார், தன் வாய்மையிலிருந்து வழுவாதிருக்க உயிர் துறந்தார். அந்தத் துயரம் எங்களை வருத்தியபடி இருக்க, இங்கே எங்களுடைய தந்தையைப் போன்ற நீங்களும் உயிர் பிரிவதாகச் சொல்வது மேலும் வருத்துகிறது. அவ்வாறு சொல்லாதீர்கள்' என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டான்.

'செல்வங்களே, சந்தர்ப்பவசத்தால் நீங்கள் உங்கள் நாட்டை விட்டு வந்தீர்கள். மீண்டும் உங்கள் நாட்டிற்குத் திரும்பும் காலம்வரை இந்தக் காட்டிலேயே என்னுடன் தங்கி விடுங்கள். நான் உங்களுக்கு எல்லா வகையிலும் பாதுகாவலாக இருப்பேன்' என தசரத நட்புக்கு மெருகூட்ட விரும்பினார் ஜடாயு.

'கேட்டு உவந்தனன் கேழ் கிளர் மௌலியான்

தோட்டி அலங்கலினீர் துறந்தீர் வள

நாட்டு நீர் இனி நண்ணுதல்காறும் இக்

காட்டில் வைகுதிர் காக்குவென் யான் என்றான்

-கம்பர்

'தங்கள் அன்புக்கும், ஆசிக்கும் நன்றி, பெருந்தகையே! அகத்தியரின் யோசனைப்படி நாங்கள் வசிப்பதற்கு உகந்த இடமான பஞ்சவடியை நோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. அனுமதியுங்கள்' என்று கேட்டுக்கொண்டான் ராமன்.

'அப்படியே ஆகட்டும்' என்ற ஜடாயு அவர்களை நடந்து செல்ல விட்டு அவர்களுக்கு மேலே பரந்து விரிந்த சிறகுகால் நிழல் தந்தபடி கூடவே மெல்லப் பறந்தார்.

பஞ்சவடியை அடைந்ததும் விடை பெற்றுக் கொண்டார் ஜடாயு. போகுமுன் என்னவோ தோன்ற சீதையிடம், 'அம்மா... நீ உன் கணவரின் துயரில் பங்கேற்று, அரசபோக வாழ்வைத் துறந்து, அவருடன் காடேகியிருக்கிறாயே, உன் பத்தினித் தன்மை, தியாகத்தை எவ்வளவு போற்றினாலும் தகும். பதினான்கு ஆண்டுகளும் இருவரும் இணை பிரியாதிருந்து அயோத்தி மீள்வீர்களாக' என்று நெஞ்சு விம்ம சொன்னார் ஜடாயு.

ஆனால் விரைவில் இதே சீதையைக் காக்கத் தான் பெருமுயற்சி எடுக்க வேண்டியிருக்கும் என்பதையும், உயிரையும் பணயம் வைக்க நேரும் என்பதையும் ஜடாயு அப்போதைக்கு உணரவில்லைதான். தன் நண்பன் தசரதன் மரணித்த செய்தி கேட்டுத் தானும் உயிர் நீங்க விரும்பிய அந்த உத்தமன், நண்பனின் மருமகளைக் காக்க முயன்று அதனால் இறந்துபட, அதனால் மேலுலகம் சென்று நண்பனை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்தான்.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us