ADDED : மார் 08, 2024 03:10 PM

சோக சாட்சியாகிய சுமந்திரன்
ராமாயண பாத்திரங்களில் பரிதாபத்துக்கு உரியவன் என்றால் அது சுமந்திரனாகத்தான் இருக்கும்! ஆமாம், ராமனைச் சோதித்த சோக சம்பவங்கள் சிலவற்றிற்கு இவன் எதுவும் செய்ய இயலாதவனாக, மவுன சாட்சியாக மட்டுமே நிற்க வேண்டியிருந்தது!
சுமந்திரன் என்றால் அறிவுரைகளையும், தக்க யோசனைகளையும் வழங்குபவன் என பொருள். தசரதனின் முதல் அமைச்சனாக திகழ்ந்தவன். சிறந்த தேரோட்டியும் கூட.
ராமனுக்கு முடிசூட்ட தசரதன் விரும்பினார். ஆனால் அரசவை எவ்வாறு எதிர்கொள்ளுமோ எனத் தயங்கினார். அமைச்சர்களின் கருத்தை கேட்டு அவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் செயல்பட வேண்டும் என்ற அரசியல் நாகரிகத்தால் ஏற்பட்டதே அத்தயக்கம்.
இதைக் குறிப்பால் உணர்ந்தான் சுமந்திரன். அந்த யோசனையை சபையில் அறிவிக்குமாறு தசரதனை ஊக்குவித்தான். அதன்படி அறிவித்தபோது அந்தப் பதவிக்கு ராமன் எல்லாவகையிலும் தகுதியானவன், அதிகாரம், ஆற்றல், சூட்சுமம் எல்லாவற்றையும் தாண்டி அவன் மனிதநேயம் மிக்கவன் என்ற அவனுடைய நற்குணங்களை விவரித்துச் சொன்னான். ராஜகுரு வசிஷ்டர் உடனே அந்தக் கருத்துக்கு ஒப்புதல் தந்தார். தசரதன் மகிழ்ச்சி கொண்டார். சுமந்திரனை அனுப்பி ராமனை சபைக்கு அழைத்து வர பணித்தார்.
ராமனின் மாளிகைக்குச் சென்று விவரம் சொல்லி, தேரில் அவனை ஏற்றிக் கொண்டு தசரதனிடம் வந்தான். உடன் லட்சுமணன். தந்தையாரைச் சந்தித்த ராமன் அவர் தனக்கு அரசப் பதவி அளிப்பதாகச் சொன்னபோது சலனம் இன்றி சாதாரணமாக அதை ஏற்றுக் கொண்டான். கூடவே இருந்த சுமந்திரன் ராமனின் எளிமை கண்டு பிரமித்தான் பாராட்டினான்.
ஆனால் மறுநாள் மாலையில் கைகேயி, தந்திரத்தால் தசரதனின் எண்ணம் ஈடேற முடியாதபடி தடுத்துவிட்டாள். இந்த விவரம் அறியாத வசிஷ்டர், ராம பட்டாபிஷேகம் பற்றி ஆலோசிக்க தசரதரை அழைத்து வருமாறு சுமந்திரனிடம் தெரிவித்தார். உடனே சென்ற சுமந்திரன், மன்னரான தசரதர் கைகேயியின் மாளிகையில் இருப்பதை தெரிந்து கொண்டு அங்கு சென்றான். அதற்கு முன் தான் சற்றும் பார்த்திராத வகையில் கைகேயி தலைவிரி கோலமாக, அணிகலன்கள் சிதறிக் கிடக்க, கோபத்துடன், ''ராமனை அழைத்து வா'' எனக் கட்டளையிட்டபோது அதிர்ந்து போனான் சுமந்திரன். என்ன நடக்கிறது இங்கே?' என தவித்தான். ஆனாலும் ராஜமாதாவின் ஆணைப்படி ராமனை அழைத்து வந்தான்.
தாமரை முகத்தினனாய் வந்த ராமனிடம், ''உன்னை பதினான்கு ஆண்டுகள் காடேகச் சொன்னார் உன் தந்தை'' என கடுமையாகக் குறிப்பிட்டாள் கைகேயி. அதைக் கேட்டு ராமன் சலனமற்றிருந்தானே தவிர சுமந்திரன்தான் அனலில் இட்டப் புழுவாகத் தவித்தான். என்ன கொடுமை இது! நேற்று பட்டாபிஷேகத் தகவல், இன்று துறவுத் தகவல்! ராமன் புன்னகை மாறாத, நிமிர்ந்த தலையுடன் வெளியேற, கைகேயியின் மூர்க்கத்தனம் கண்டு தலை குனிந்தபடி சுமந்திரனும் அங்கிருந்து அகன்றான்.
ஆனால் ராமன், லட்சுமணன், சீதை மூவரையும் காட்டில் கொண்டுவிட வேண்டிய துர்பாக்கியம் தனக்கு நேரும் என சுமந்திரன் எதிர்பார்க்கவே இல்லை. அதே சமயம் தேரில் அவர்கள் அரண்மனையை விட்டு வெளியேறிய விஷயம் கேள்விப்பட்ட மக்கள் அனைவரும் தொடர்ந்து வந்ததை அவன் எதிர்பார்த்தான்! காட்டில் வெகு தொலைவு சென்ற பிறகும் அவர்கள் பின் தொடர்வதைக் கண்ட ராமன் வருந்தினான்.
சூரியன் மறைந்து இருள் சூழ்ந்தது. தேர் நின்றது. சரி, இனி ராமன் தங்களை விட்டு நீங்க மாட்டான் என நினைத்த மக்கள், மறுநாள் காலையில் அவனுடன் அயோத்தி திரும்பலாம் என்ற நிம்மதியுடன் ஆங்காங்கே புல்வெளிகளிலும், தரையில் உறங்க ஆரம்பித்தனர்.
இதைப் பார்த்த ராமன்,''இதுவே சமயம். எங்கள் மூவரைப் பற்றி கவலைப் படாதீர்கள். ஆனால் இந்த மக்கள் எங்களுடன் வருவார்களானால், பலவித தொல்லைகளுக்கு ஆளாகக் கூடும். ஆகவே தேரைத் திருப்பி அயோத்தி நோக்கிச் சென்று விடுங்கள். படுத்திருக்கும் யாருடைய கவனத்தையும் ஈர்க்காமல், ஓசையின்றி தேரைச் செலுத்தக்கூடிய உங்களுடைய ஆற்றல் எனக்குத் தெரியும். ஆகவே புறப்படுங்கள். மக்களும், இரவோடு இரவாக நான் அரண்மனைக்குப் போய்விட்டேன் எனக் கருதி அவர்களும் அயோத்திக்கு மீள்வார்கள்''என்று யோசனை சொன்னான்.
அதைக் கேட்டுப் பெரிதும் வருந்தினான் சுமந்திரன். பிறகு மனம் தெளிந்து, இதுவும் அரச கட்டளைதானே என உணர்ந்து சம்மதித்தான். ஆனாலும், ''அண்ணலே நீங்கள் இல்லாமல் நான் மட்டும் அயோத்தி திரும்பினேன் என்றால் அங்குள்ளவர்கள் பெரிதும் வேதனை கொள்வார்களே! எல்லோரும் உங்களை கானகத்தில் எங்கே கொண்டு சேர்த்தேன் எனக் கேட்பார்களே, அவர்களுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? இதோ நம்மைப் பின் தொடர்ந்து வந்திருக்கிறார்களே, இந்த மக்களும் ஏன், நானும்கூட தங்களைக் காட்டுக்குச் செல்லாதபடித் தடுத்து, திரும்ப அழைத்து வந்து விடுவேன் என்று ஆவலுடன் காத்திருக்கும் மன்னன் தசரதனின் உயிரை, நான் அளிக்கும் பதில் எளிதில் பறித்து விடுமே''
'நால்திசை மாந்தரும் நகர மாக்களும்
தேற்றினர், கொணர்வர் என் சிறுவன் தன்னை
என்று
ஆற்றின அரசனை ஐய வெய்ய என்
கூற்று உறழ் சொல்லினால் கொலை
செய்வேன்கொலோ?
-கம்பர்
என்று அரற்றி தரையில் புரண்டு அழுதான் சுமந்திரன்.
அவனை ராமன் ஆற்றுப்படுத்த, அதனால் தற்காலிகமாக மனம் தெளிந்த சுமந்திரன், ''அங்குள்ளோர்க்கு நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?'' என்று ராமனைப் பார்த்துக் கேட்டான். ''ஆமாம், வாய்மையைக் காக்க அருமையான புத்திரனையும் கானகத்துக்கு அனுப்பிய, ஹரிச்சந்திர மாமன்னன் வழிவந்த, என் தந்தையார் ஓர் உதாரணமாகத் திகழ்கிறார், அவருக்கு என் வணக்கங்களைத் தெரிவியுங்கள்'' என்ற ராமன் தொடர்ந்தான்.
''வசிஷ்ட மாமுனிக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தம்பி பரதனிடம் என் பிரிவு குறித்து வருத்தம் கொள்ளாமல் வசிஷ்டரின் வழிகாட்டுதலில் அரசாட்சி புரிய நான் விரும்பியதாகவும், எனக்குக் கொடுமை இழைத்துவிட்டதாகக் கருதி அவன் தாய் கைகேயி மீது அனாவசியமாகக் காழ்ப்புணர்வு கொள்ள வேண்டாம் என நான் அறிவுறுத்தியதாகச் சொல்லுங்கள். தாயார்கள் கோசலை, கைகேயி, சுமித்திரை மூவருக்கும் என் நமஸ்காரங்கள்''
அதைக் கேட்டு நெகிழ்ந்து கண்ணீர் பெருக்கிய சுமந்திரன், சீதையைப் பார்த்துக் கேட்க, ''மாமன்னருக்கும் என் மாமியார்களுக்கும் என் நமஸ்காரங்களைத் தெரிவியுங்கள்'' என்று சொல்லிவிட்டு, பிறகு வெள்ளந்தியாக, ''நான் வளர்த்து வந்த பறவைகளான நாகணவாய், கிளியை பத்திரமாகப் பாதுகாக்குமாறு என் சகோதரிகளிடம் சொல்லுங்கள்'' எனக் கேட்டுக் கொண்டாள்.
இப்படி ஒரு அப்பாவிப் பெண்ணுக்கு கானக வாசம் என்பதுதான் எத்தனை பெரிய தண்டனை எனக் குமுறி அழுதான் சுமந்திரன். பிறகு லட்சுமணனிடம் கேட்க, அவனோ வெகுண்டெழுந்தான். ''உனக்கே அரியாசனம் என்று அண்ணனுக்கு வாக்களித்து விட்டு பிறகு ஏற்க முடியாத காரணத்தைச் சொல்லி அதை மறுத்த, சத்தியம் தவறிய மன்னனுக்குத் தெரிவிக்க என்ன இருக்கிறது? இங்கே கானகத்தில் ராமன் காய்கள், கனிகளை உண்டு பசியாற அங்கே அந்த மன்னன் ருசியான, சிறந்த உணவுவகைகளை உண்கிறானே, அவன் நன்றாகவே வாழட்டும். அவன் உடலில் இன்னமும் உயிர் தங்கியிருப்பதே கேவலம்''
இதைக் கேட்டு பதறிப் போன ராமன், லட்சுமணனை அரவணைத்துக் கட்டுப்படுத்தினான். அவனுடைய இந்தப் பண்பைக் கண்டு வியந்து நின்றான் சுமந்திரன்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695