
தங்களின் பெருமையை நிலைநாட்ட சில பணக்காரர்கள் நன்கொடை அளிப்பதாக காஞ்சி மஹாபெரியவரிடம் புலம்பினார் பக்தர் ஒருவர்.
''இருக்கட்டுமே...பெருமைக்காக என்றாலும் நல்ல விஷயத்திற்கு யார் பணம் தருகிறார்கள்? தர்மம் செய்யும் எண்ணம் சிலருக்குத் தானே இருக்கு? ஆனால் உண்மையான பக்தர்களை கடவுள் ஏற்கத் தவறியதில்லை. அவர்களுக்கு பெருமை சேர்க்கிறார் என்பதற்கு தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் பற்றிய கதை ஒன்றை சொல்கிறேன்'' என்றார்.
''தஞ்சை பெரிய கோயிலை ராஜராஜச்சோழன் கட்டத் தொடங்கினார். சிற்பிகள் பணியில் ஈடுபட்டனர். சிற்பிகளின் தாகம் தணிய அவ்வப்போது மோர் தந்து உதவினாள் ஏழைப்பாட்டி ஒருத்தி. திருப்பணியில் தானும் பங்களிக்க வேண்டும் என்பது அவளின் விருப்பம். அரைக்கும் கல் ஒன்று அவளின் வீட்டில் இருந்தது. நீண்டகாலம் மருந்து அரைத்ததால் அது வழுவழுப்பாக மாறியிருந்தது. பிரதான சிற்பியிடம் அதைக் கொடுத்து, ''என்னோட உபயமாக இதை வைத்துக் கொள்ளுங்கள்'' என்றார். அவரும் கூம்பு மாதிரி செதுக்கி கோபுரக் கலசத்தின் மேற்பகுதியில் வைத்தார்.
கோயில் திருப்பணி முடிந்து கும்பாபிஷேகத்திற்கு நல்ல நாள் குறித்த போது, ''சிவபெருமானே! நாடாளும் மன்னனாகிய நான் கட்டிய கோயிலின் கோபுர நிழலில் ஆனந்தமாக இருக்கிறீரா'' என மனதிற்குள் பெருமிதமாக கேட்டான் ராஜராஜன்.
பதிலளிக்கும் விதமாக அன்றிரவு, ''மன்னவா... என் பக்தை பாட்டியம்மா கொடுத்த நிழலில் ஆனந்தமாக இருக்கிறேன்'' என்றார் கனவில் தோன்றிய சிவன்.
திகைத்துப் போன மன்னன்,'' கோபுரத்தை அமைக்க பாட்டி யாராவது உதவி செய்தார்களா?'' என விசாரித்தான். மோர் கொடுத்த பாட்டி மூலம் கல் ஒன்று வந்த விபரத்தை தலைமை சிற்பி தெரிவித்தார். கோயிலுக்கு வரவழைத்த மன்னன் கோபுர வாசலிலேயே பாட்டியின் காலில் விழுந்து வணங்கினான்.
யார் உண்மையான பக்தர், அவரது பக்தி எப்படிப்பட்டது என்பதை கடவுள் நன்கறிவார். அவர் ஏழை, பணக்காரன் என்ற பேதம் பார்ப்பதில்லை என்றார் மஹாபெரியவர்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.