ADDED : மார் 31, 2024 09:09 AM

தொண்டன் சம்புமாலி
சீதையைத் தேடி இலங்கைக்கு வந்த அனுமன் அசோக வனத்தில் அவள் இருப்பதைத் தெரிந்து கொண்டான்.
அவளைச் சந்தித்ததும், 'ராமன் வந்து மீட்பான்' என ஆறுதல் அளித்தான். சீதை சிறைப்பட்டதைக் கண்டு பொறுக்காமல் இலங்கை நகரையே அழிக்கும் அளவுக்குக் கோபம் கொண்டான். அங்கிருந்த மரங்களை எல்லாம் அடித்து ஒடித்தான்.
குரங்கு ஒன்று இலங்கையைச் சின்னாபின்னமாக்கி, எதிர்ப்படும் அரக்கர்களை எல்லாம் தாக்குகிறது எனக் கண்டவர்கள் ராவணனிடம் அடைக்கலம் புகுந்தனர்.
கொதித்துப் போன ராவணன் தலைமை அமைச்சனான பிரகத்தனுடைய மகன் சம்புமாலியை அழைத்து, ''படையுடன் சென்று அந்த குரங்கைக் கயிற்றால் கட்டி இழுத்து வா.
அப்போது தான் என் கோபம் தணியும்'' என உத்தரவிட்டான்.
''மன்னா... தங்களின் எண்ணத்தை இப்போதே நிறைவேற்றுவேன்'' எனச் சொல்லி விட்டு, படைகளைத் திரட்டினான் சம்புமாலி. தன் தந்தையைப் போல தானும் ராவணனிடம் பணிபுரிவதை எண்ணி மகிழ்ந்தான். ஒருவருக்கு யாரேனும் தக்க சமயத்தில் உதவி செய்தால், அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரும் அவருக்கு நன்றிக்கடன் செலுத்துவார்கள் இல்லையா... அதுபோல சம்புமாலியும் பரம்பரை விசுவாசியாக இருந்தான். ராவணன் இட்ட கட்டளைகளை நிறைவேற்றுவது அவனது கடமையாக இருந்தது. தலைவன் தீயவனே ஆனாலும் நிரந்தர தொண்டர்கள் இருப்பது போல! அற்ப ஆதாயத்திற்காக அடிமைகள் அநீதிக்குத் துணை போவது என்பது எல்லா காலத்திலும் இருந்திருக்கிறது.
அனுமன் உண்டாக்கிய சேதத்தைப் பார்த்து, அந்த மதிப்பீட்டில் அவனது பலத்தை ஊகித்தான் சம்புமாலி. மாயக்கலையில் வல்லவர்களான தேர்ப்படை, யானைப் படை, குதிரைப் படை, காலாட்படைகள் புடைசூழ அனுமனை நெருங்கினான். பாதை எங்கும் அரக்கர்கள் பிணங்களாக கிடப்பதையும், அடிபட்ட குதிரைகள், யானைகளையும் கடந்து செல்வது கடினமாக இருப்பதைக் கண்டான். தலை நிமிர்ந்த சம்புமாலி, வானோங்கி உயர்ந்திருந்த அனுமனைக் கண்டு திகைத்தான்.
நெற்றியில் துலங்கிய திருநாமம் அவனது முன் படையாகவும், உடம்பில் உள்ள ரோமம் ஒவ்வொன்றும் படை வீரராகவும், கைகள் இரண்டும் இருபுறங்களிலும் அரணாக நிற்கும் சேனை போலும், முந்திச் செல்லும் படைகளுக்கெல்லாம் பின்னால் வந்து இறுதிகட்ட தாக்குதலை செய்யும் கூழைப்படை போல வாலும் தோன்றியதைக் கண்டு பிரமித்தான். ஆனாலும் கர்ம வீரனாக படைகளுடன் முன்னேறினான்.
அனுமனின் சாதுர்யத்தை அவனால் எளிதாக ஊகிக்க முடியவில்லை; எந்த திசையில் இருந்து எப்படி தாக்குவான் என ஊகிக்க இயலவில்லை.
இரும்புத் தடி ஒன்றை சுழற்றியபடி எல்லா திசைகளிலும் எதிரிகளைத் தாக்கினான். அனுமனின் எந்த முயற்சியும் வீணாகப் போகவில்லை. நுாற்றுக்கணக்கில் அரக்கர்கள், குதிரைகள், யானைகள், தேர்கள் எல்லாம் அழிந்தன.
கடைசியாக தனியாளாக நின்ற சம்புமாலி தேரில் ஏறி அனுமனை நோக்கி விரைந்தான். அவனது பலவீன நிலையைக் கண்ட அனுமன் இரக்கப்பட்டான். '' உன்னிடம் வில், அம்பு என ஒரே ஒரு ஆயுதத்தை மட்டுமே உள்ளது. உன் படை அனைத்தும் அழிந்து விட்டன. தனியனாக நிற்கும் நிலையில் ஒருவனைக் கொல்வது அறம் ஆகாது. ஆகவே தப்பித்து ஓடு'' என சலுகை அளித்தான்.
ஆனால் சம்புமாலி பின்வாங்கவில்லை. ராவணனின் விசுவாசியாக இருக்க வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான்.
அனுமனிடம், '' பரவாயில்லையே! என் மீது இரக்கம் காட்டினாயே. விரைவில் மரிப்பேன் எனக் கருதி விட்டாயா... இப்போது என் பலத்தை பார்'' என்று வில்லில் இருந்து அம்புகளை ஏவினான். அவை ஒவ்வொன்றும் நுாறாகப் பெருகி அனுமனை நோக்கிப் பாய்ந்தன.
'நன்று நன்று உன் கருணை என்னா நெருப்பு
நக நக்கான்
பொன்றுவாரின் ஒருவன் என்றாய் போலும்
எனைஎன்னா
வன் திண்சிலையின் வயிரக் காலால் வடித்
திண் சுடர் வாளி
ஒன்று பத்து நுாறு நுாறாயிரமும்
உதைப்பித்தான்
-கம்பர்
ஆனால் அனுமனோ சிரித்தபடி,
''நீ வில்லை வைத்துக் கொண்டு, எந்த ஆயுதமும் ஏந்தாத ஒருவனுடன் போரிடவே தகுதி பெற்றுள்ளாய். என்னிடம் இரும்புத் தடி உள்ளது. இதை வைத்து உன் அம்புகளை நான் தடுப்பேன்'' எனக் கர்ஜித்தபடி தடியால் அம்புகளைச் சிதறடித்தான். பின்னர் சம்புமாலியின் தேர் மீது பாய்ந்து வில்லைப் பறித்து எறிந்தான். அவனது கழுத்தை நெறித்துக் கொன்றான்.
தீயவனுக்குத் துணை போனவன் முடிவில் அழிவான் என்பதற்கு உதாரணமாக சம்புமாலி பரிதாபமாக இறந்தான்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695