
பல வருடங்களுக்கு முன்பு ஒருமுறை மஹாராஷ்டிரா மாநிலம் சதாராவில் காஞ்சி மஹாபெரியவர் ஒரு வருடம் தங்கியிருந்தார். வெளியூர் செல்லும் போது தமிழக உணவு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். ஆனால் சதாராவில் இந்த பிரச்னை ஏற்படாது. ஏனெனில் அங்குள்ள ரஜதாத்ரி ஓட்டலில் நம் உணவு கிடைத்தது. அதன் உரிமையாளர் சாமண்ணா.
ஒருமுறை நண்பரின் வற்புறுத்தலால் மஹாபெரியவரை தரிசித்த சாமண்ணா, நாளடைவில் பக்தராக மாறினார். காணிக்கையாக ஐந்து லட்சம் ரூபாயுடன் சென்றார். அதன் இன்றைய மதிப்பு பல கோடி இருக்கும்!
சுவாமிகளின் முன்பு காணிக்கையை வைத்து விட்டு வணங்கினார். 'எதற்கு?' என ஜாடை காட்டினார் மஹாபெரியவர்.
'பெரியவா... உங்களுக்கு விருப்பமான தர்ம காரியத்துக்குப் பயன்படுத்துங்கள்' என்றார்.
'நீயே எடுத்துக்கோ... உன் மனசுல தோன்ற நல்லதைச் செய்' என்றார்.
அமைதியாக நின்றார் சாமண்ணா. 'எடுத்துக்கோ' என மீண்டும் ஜாடை காட்டவே... வேறு வழியின்றி பணத்தை எடுத்துக் கொண்டார். சில நாள் கழித்து இன்னும் அதிகப் பணத்தை சமர்ப்பித்து, 'பெரியவா... கொடுத்த பணத்தை எடுத்துச் செல்ல விருப்பமில்லை. தாங்கள் என்ன சொன்னாலும் அதைச் செய்ய தயாராக உள்ளேன்' என்றார்.
'இந்தப் பணத்தில் சதாராவிலேயே கோயில் கட்டு' என்றார்.
'என்ன கோயில் கட்டுவது?' என யோசித்த போது, ' தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோயிலை தரிசனம் செய்' என்றார். மார்கழி திருவாதிரையன்று தரிசிக்க சிதம்பரத்திற்கு வந்தார்.
சிதம்பரம் நடராஜர்.... சாதாரணமானவரா என்ன! இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைப்பவர் அல்லவா! அவருக்கு சதாராவில் கோயில் கட்ட வேண்டும் என்பது மஹாபெரியவரின் விருப்பம்.
அதை நிறைவேற்றும் வாய்ப்பு சாமண்ணாவுக்குக் கிடைத்தது.
'உத்தர (வடக்கு) சிதம்பரம்' எனப்படும் இங்கும் சிதம்பரம் போல நான்கு ராஜகோபுரங்கள். இதில் விசேஷம் என்ன தெரியுமா?
பிரதான மேற்கு கோபுரம் கட்ட நிதி வழங்கியது மகாராஷ்டிரா அரசு. அதைப் போல வடக்கு கோபுரத்தை ஆந்திரா, கிழக்கு கோபுரத்தை கர்நாடகா, தெற்கு கோபுரத்தை தமிழகமும் கட்டிக் கொடுத்தன. கொடிமரம் உள்ளிட்ட எல்லா மரங்களையும் கேரள அரசு அனுப்பியது.
அனைவரும் தரிசிக்க வேண்டிய அற்புதமான கோயில் உத்தர சிதம்பரம்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com