
ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்தார். ஒருநாள் அங்கு வந்த பெண் ஒருவர் தழுதழுத்த குரலில், 'பெரியவா... ஸ்ரீசைலத்திற்கு யாத்திரை வந்தேன். கிருஷ்ணா நதியில் நீராடிய போது என் மாங்கல்யம் நழுவியது' என அழுதார்.
மஹாபெரியவர், 'அங்கே உட்கார்ந்துக்கோ' என ஓரிடத்தைக் காட்டினார். கண்களை மூடி தவத்தில் ஆழ்ந்தார் மஹாபெரியவர்.
நேரம் கடந்தது. 'திருமாங்கல்யம் கிடைக்குமோ...கிடைக்காதோ?' என்ற கேள்வி அவளின் மனதைக் குடைந்தது. அப்போது முதியவள் ஒருவர் அங்கு வந்தார். அப்போது கண்களைத் திறந்த மஹாபெரியவர், அந்த முதியவளை ஏறிட்டுப் பார்த்தார்.
'சுவாமி...ஆற்றில் நீராடிக் கொண்டிருந்தேன். அப்போது காலில் இந்த திருமாங்கல்யம் தட்டுப்பட்டது. சுமங்கலியின் மாங்கல்யம் தொலையக் கூடாது என்பதால் உங்களைத் தேடி வந்தேன்' என்று சொல்லி அதை மூங்கில் தட்டில் வைத்தார்.
'இதோ...உட்கார்ந்திருக்கிறாளே... அவளிடம் உன் கையாலேயே கொடு' என்றார்.
மாங்கல்யத்தை இழந்து தவித்த பெண் கண்ணீருடன், 'இது என்னோடதுதான்...' என்று சொல்லி மஹாபெரியவரை கும்பிட்டபடி, 'தெய்வமே... தெய்வமே' என தேம்பி தேம்பி அழுதாள்.திருமாங்கல்யத்தை தொலைத்த பெண்ணை மடத்திலேயே காத்திருக்கச் சொன்னாரே... அதுதான் காஞ்சி மஹாபெரியவரின் ஞானதிருஷ்டி!
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com