ADDED : ஏப் 12, 2024 03:02 PM

சரியான பரிகாரம்
என் முன் அமர்ந்திருந்தவருக்கு வயது ஐம்பது இருக்கும். ஒல்லியான தேகம். கசங்கிய ஆடை, கலங்கிய கண்கள்.
“என் பேரு மணி. கல்யாணங்கள்ல போட்டோ, வீடியோ எடுக்கற தொழில் பண்றேன். பெரியளவுல சம்பாத்திக்காவிட்டாலும் வாழ்க்கை கஷ்டமில்லாமப் போயிக்கிட்டிருக்கு. என் மனைவி தனியார் ஸ்கூல்ல டீச்சர். எனக்கு ஒரே பொண்ணு சார். அவளுக்கு வயசு இருபது. ரெண்டு நாளைக்கு முன்னால மூச்சுவிட முடியலன்னு கதறினா. ஆஸ்பத்திரிக்கு ஓடினோம். அவளோட இதயத்துல பிரச்னை இருக்காம். ஆப்பரேஷன் பண்ணனுமாம். மூணு லட்சம் ஆகுமாம்.
“நாலு மாசத்துக்கு முன்பு, என் மனைவி வேலை பாக்கற ஸ்கூலுக்கு வந்த இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்க வற்புறுத்தலால் என் மனைவி மெடி கிளைம் பாலிசி எடுத்திருந்தா. நல்ல வேளை தப்பிச்சோம்னு நினச்சி ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு செஞ்சோம். திடீர்னு இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்க பணம் தரமாட்டோம்னு சொல்லிட்டாங்க. முன்னாலயே இருந்த நோயை எங்ககிட்ட மறைச்சிட்டீங்கன்னு சாதிச்சிட்டாங்க.. இன்னும் அஞ்சு நாள்ல ஆப்பரேஷன் நடக்கலேன்னா உயிருக்கே ஆபத்துன்னு டாக்டர் சொல்றாரு. பணத்துக்கு எங்கய்யா போவேன்?”
உயிரைக் கொடுத்தாவது மூன்று லட்சத்தை புரட்டித் தரலாம் என யோசித்தபோது உதவியாளர் வந்தார்.
“வருமான வரி ஆபீசில் இருந்து பெரிய ஆபீசர் வந்திருக்காரு. உடனே பாக்கணுமாம்”
வெளியே ஓடினேன். கம்பீரமாக நின்றிருந்த பெண்ணைப் பார்த்ததும் அடையாளம் தெரிந்தது. கால்களில் விழுந்தேன்.
“மூன்று லட்சத்தை புரட்டித் தராதே. மணியின் கர்மக் கணக்கை நேர் செய்ய முடியுமா என பார்க்கிறேன். நீயே அவனிடம் பேசு”
“எதைப் பேசுவது?”
“தன்னாலே தெரியும்”
பச்சைப்புடவைக்காரியை வணங்கி விட்டு ஓடினேன்.
“ஏதாவது வழி தெரியுதா இல்ல... நாங்க குடும்பத்தோட தற்கொலை செஞ்சிக்கவா?”
“அது உங்க இஷ்டம். ஒரு காலத்துல உங்கப்பாவத் தவிக்க விட்டு அவரோட உயிருக்கே உலை வச்சீங்களே ஞாபகமிருக்கா மணி? அதுதான் படுத்துது. ஒரு அப்பாவோட வேதனை எப்படிப்பட்டதுன்னு புரிய வச்சிருக்கு”
“என்ன சொல்றீங்க?”
“அப்போ உங்களுக்கு வயது 25. படிப்பை முடிச்சிட்டு வேலையில்லாம இருந்தீங்க. உங்களுக்கு கிரிக்கெட் மீது வெறி. நீங்க எப்படியாவது உருப்படணுமேன்னு கவலைப்பட்ட உங்கப்பா, தன் கம்பெனி எம்.டி.,யிட்ட கெஞ்சியிருக்காரு. ஒரு ஞாயிற்றுக்கிழமை சும்மா பேருக்கு ஒரு பரீட்சை, நேர்காணலுக்கு போனீங்கன்னா போதும் வேலை நிச்சயம்னு அவர் சொல்லியிருக்காரு.. உங்கப்பா அதை உங்ககிட்ட சொல்லியிருக்காரு. அன்னிக்கு உங்க தெருவுக்கும், அடுத்த தெருவுக்கும் நடுவுல கிரிக்கெட் மேட்ச். எனக்கு மேட்ச்தான் முக்கியம்னு நீங்க உறுதியா சொல்லிட்டீங்க. அதில நீங்க ஜெயிச்சிட்டீங்க. ஆனா வாழ்க்கையில தோத்துட்டீங்களே... மணி?
அன்னிக்கு சாயங்காலம் எம்.டி., உங்கப்பாவுக்குப் போன் பண்ணி கத்தியிருக்காரு. உங்க பையனோட வேலைக்கு ஏற்பாடு செஞ்சேன். ஆனா அவன் இன்டர்வியூவுக்கு போகலையாமே! இப்படி பையனப் பொறுப்பில்லாம ஏன் வளத்தீங்கன்னு கத்தியிருக்காரு. அதிர்ச்சியில உங்கப்பா ஹார்ட் அட்டாக் வந்து செத்துட்டாரு.
அன்னிக்கு அவர் பட்ட வேதனையத்தான் இன்னிக்கு நீங்க படுறீங்க”
“என் தப்பை உணர்ந்துட்டேன் சார்.
அந்த வேலை மட்டும் கெடைச்சிருந்தா இன்னிக்கு அந்தக் கம்பெனிக்கு ஜி.எம்., ஆகியிருப்பேன். அப்பாவும் செத்திருக்க மாட்டாரு. அதுக்கு இப்போ என்ன பரிகாரம் செய்யச் சொல்றீங்க?”
“பரிகாரம் செய்யறதுக்கு உங்கப்பா உயிரோட இல்லையே. ஆனா ஒருவழி இருக்கு. அன்னிக்கு ஒரு அப்பாவத் தவிக்கவிட்டீங்க. இன்னிக்கு இன்னொரு அப்பாவோட தவிப்பு தீர வழி பண்ணுங்க”
“புரியலையே”
“ஒரு தையல்காரரோட மகளுக்கு முதல் வகை சர்க்கரை நோய் வந்திருக்கு.
மாசா மாசம் மூவாயிரம் ரூபாய்க்கு இன்சுலின் போடணும். இல்லைன்னா அந்த 12 வயசு பொண்ணு செத்திரும். அந்தச் செலவ ஏத்துக்கங்க. அந்த தந்தையோட வேதனை போகும். அதனால உங்க வேதனை தீர வாய்ப்பிருக்கு. ஆனா உத்தரவாதம் கிடையாது. நம்பிச் செய்யணும்”
“யாருன்னு விவரம் சொல்லுங்க சார். முடிஞ்சா பண்றேன்”
நான் சொன்னதும் மணி புறப்பட்டார். எனக்கு பயமாகவே இருந்தது.
அன்று சாப்பிடப் பிடிக்கவில்லை. மாலையில் கோயிலுக்குக் கிளம்பினேன். அங்கு நின்றிருந்த ஒரு பெண், “இந்த விலாசம் எங்கேன்னு சொல்ல முடியுமா?”
“சொல்ற மனநிலையில இல்லையம்மா”
“மணியோட பொண்ணுக்கு ஆப்பரேஷன் நடக்க வேண்டாமா?”
“தாயே” என அலறியபடி காலில் விழுந்தேன்.
“நடக்கப் போவதைப் பார்”
மணி மருத்துவர் நாதன் முன் அமர்ந்திருந்தார். தையல்காரரின் மகளின் இன்சுலின் செலவைத் ஏற்பதாகச் சொன்னார். மருத்துவர் கை கொடுத்து, “எங்களுக்கு டிரஸ்ட் இருக்கு. ஆனா இப்போ அதுல செய்ய முடியாத சூழ்நிலை. நேத்து பூரா கவலைப்பட்டேன். நல்லவேளை நீங்க வந்தீங்க”
விபரங்களை எல்லாம் பேசி முடித்து விட்டு மணி கிளம்பினார். மருத்துவர் இடைமறித்து, “மணி, உங்க கண்ணு கலங்கியிருக்கு. ஏதோ பிரச்னையிருக்கு போலிருக்கே?”
மணி உடைந்து போய் அழுதார். தன் மகளின் இதய நோய் பற்றியும், இன்சூரன்ஸ் கம்பெனியின் அடாவடித்தனம் பற்றியும் சொன்னார்.
“உங்க மகளோட இன்சூரன்ஸ் பாலிசி விபரம் உங்ககிட்ட இருக்கா? ஆப்பரேஷன் செய்யப்போற டாக்டர் பேர், அலைபேசி நம்பரைச் சொல்லுங்க”
தன் அலைபேசியில் இருந்த விபரங்களை மருத்துவருக்கு அனுப்பினார் மணி.
மருத்துவர் முதலில் இதய நோய் நிபுணரிடம் பேசினார்.
“இன்சூரன்ஸ் பணம் வருதோ இல்லையோ. மிஸ்டர் மணியோட மகளுக்கு ஆப்பரேஷன் நடக்கணும் டாக்டர். பணத்துக்கு நான் பொறுப்பு”
மறுநாளே அறுவை சிகிச்சை செய்வதாகச் சொன்னார் மருத்துவர்.
அடுத்து அந்த இன்சூரன்ஸ் கம்பெனியின் தலைமை அலுவலகத்திற்குப் பேசினார் மருத்துவர்.
“உங்க இன்சூரன்ஸ் கம்பெனி நியாயமா நடந்துக்குவாங்கன்னுதான் எங்க டிரஸ்ட்லருந்து இருநுாறு பாலிசி எடுத்தோம். நீங்களே இப்படி செய்யலாமா?”
மறுமுனையில் இருப்பவர் பதறினார். மருத்துவர் மணியின் மகள் பெயரில் இருந்த பாலிசி விபரங்களைச் சொன்னார்.
மறுமுனையில் இருப்பவர் பேசுவதை மவுனமாகக் கேட்டார் மருத்துவர்.
பின் மணியிடம் சொன்னார். “உங்க பிரச்னை நல்லபடியா முடிஞ்சிருச்சி. இன்னும் ஒரு மணி நேரத்துல இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்க அந்த ஆஸ்பத்திரிக்கு செலவ நாங்கள் ஏத்துக்கறோம்னு செய்தி அனுப்புவாங்க.. ஆப்பரேஷன் நல்லபடியா நடக்கும். உங்க மக நுாறு வயசு வாழ்வா. அவளின் கல்யாணத்திற்கு எனக்கு இன்விடேஷன் அனுப்புவீங்களா?”
அந்த மருத்துவரின் கால்களில் விழுந்து கதறினார் மணி. நான் பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்து கதறினேன்.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com