sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 35

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 35

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 35

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 35


ADDED : மே 10, 2024 12:52 PM

Google News

ADDED : மே 10, 2024 12:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குணசீலன் கும்பகர்ணன்

கொடியவனுக்கு அழிவு வந்தால் அவனைக் காக்கக் கூடிய வழியனைத்தும் அடைபட்டு விடும் என்பதற்கு ராவணன் ஓர் உதாரணம். அவ்வாறு அடைபட்ட ஒருவழி கும்பகர்ணன்.

அண்ணன் மீது அன்பு மாறாத தம்பியாக இருந்தான். வசதி வாய்ப்பினைத் தந்ததோடு திருமணமும் நடத்தி வைத்து பாசமுடன் பாதுகாத்த அண்ணன் மீது விசுவாசம் கொண்டிருந்தான். ஆனாலும் சீதையைக் கடத்திய அண்ணனின் செயலை அவனால் ஏற்கமுடியவில்லை. அநீதி என அண்ணனிடம் வாதிட்டாலும் தொடர்ந்து எதிர்ப்பைக் காட்டாமல் உறக்கத்தில் ஆழ்ந்தான். இது ராவணனுக்கு சாதகமாகி விட்டது. தன் செயலை விமர்சிக்கும் ஒருவன் செயலற்றுப் போனதால், மேலும் மேலும் மோகத்தை வளர்த்துக் கொண்டு அழிவை நோக்கிப் பயணித்தான்.

தங்களை யாராலும் தோற்கடிக்க முடியாது என அரக்கர்கள் பொதுவாக ஆணவத்துடன் செயல்படுவர். உலகில் நிரந்தரமாக வாழ விரும்பி தவத்தில் ஈடுபட்டு கடவுளிடம் வரம் பெற முயற்சிப்பார்கள். ஆனால் உலகில் அமைதியை நிலைநாட்டிட, ஏதேனும் சறுக்கலை உண்டாக்கி அரக்கர்களின் எண்ணம் ஈடேறாமல் கடவுளர்கள் பார்த்துக் கொள்வர்.

இப்படித்தான் கும்பகர்ணன் வாழ்வில் ஒரு சம்பவம் நடந்தது.

ஒருமுறை அவன் நிரந்தர வாழ்வைப் பெற பிரம்மனை நோக்கி தவம் புரிந்தான். அதை மெச்சிய பிரம்மனும் வரமளிக்க தயாரானான். ஆனால் உலகில் ஏற்படவிருக்கும் ஆபத்தை தடுக்க விரும்பினாள் சரஸ்வதி. தக்க சமயத்தில் கும்பகர்ணனின் நாக்கை பிறழச் செய்தாள். 'நித்தியத்துவம் வேண்டும்' எனக் கேட்க விரும்பிய கும்பகர்ணன், தவறாக 'நித்திரைத்துவம்' எனக் கேட்டு விட்டான். அதாவது 'நிரந்தர வாழ்க்கை' என்பதற்கு பதிலாக 'நிரந்தர உறக்கம்' எனக் கேட்டான்.

இப்படி உறங்கிக் கிடப்பதும் கூட குற்ற உணர்வில் இருந்து தப்பிக்கும் வழி எனக் கருதினான் கும்பகர்ணன். ஆமாம், இந்த காலகட்டத்தில் ராவணன் செய்யும் அதர்மச் செயல்களை காண வேண்டியிருக்காது அல்லவா?

ஆனால் உறக்கம் கலைந்து விழிப்பு வரும் சமயத்தில் அவன் அண்ணனை இடித்துரைக்கத் தவறியதில்லை. அழகு மிக்க இலங்கை ஒரு குரங்கால் அழிந்துவிட்டது என ராவணன் தம்பியிடம் புலம்பினான். அப்போது கும்பகர்ணன், 'நீயே என் உயிர்' என ராவணனுக்காக மனைவியர் ஆவலுடன் காத்திருக்க, அவனோ இன்னொருவரின் மனைவியின் காலடியில் விழுந்து கிடக்கும் அறிவிலியாக இருக்கிறானே என ஆதங்கப்பட்டான்.

ஐயனே... தவ ஒழுக்கத்தில் சிறந்த சீதைக்கு இரக்கப்படாமல், அரச நாகரிகத்தைக் கைவிட்டு, எப்போது சிறைப்பிடித்து வந்தாயோ, அப்போதே அரக்கர் குலத்தின் புகழ் மங்கிவிட்டது. இக்கொடிய செயலால் நமக்கு புகழ் உண்டாகும் எனக் கருதுவது அறிவுடைமையா? என அண்ணனைக் கேட்டான்.

என்று ஒருவன் இல்லுறை

தவத்தியை இரங்காய்

வன்தொழிலினாய் மறை

துறந்து சிறை வைத்தாய்

அன்று ஒழிவதாயின அரக்கர் புகழ் ஐயா

புன் தொழிலினால் இசை பொறுத்தல்

புலமைத்தோ

-கம்பர்

அண்ணனைத் திருத்தும் முயற்சி எல்லாம் விழலுக்கு இறைத்த நீராக வீணாகப் போகவே மனம் வருந்தினான். ஆனாலும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் மனம் மாறி, சீதையை விடுவிப்பான், ராமனுடன் நட்பு கொள்வான், அரக்கர் குலத்துக்கே முன்மாதிரியாக விளங்குவான் என எதிர்பார்த்தான். அதற்காகவே அவனுடன் இருக்க வேண்டும் என்று தீர்மானித்தான்.

ஆனால் ராவணன் யாருக்காகவும், எதற்காகவும் சீதையை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. 'அவள் எனக்கே உரியவள்' என்ற அகம்பாவம் அவனை சிந்திக்க விடாமல் தடுத்தது. அதனால் ராமனை எதிர்த்து போர் புரிவதை தவிர்க்க முடியவில்லை.

சீதையை அடைய வேண்டும் என்ற ஆசை மனதிற்குள் நிறைந்திருந்தாலும், தன் படைத்தளபதிகள், குடும்பத்தினர்களை எல்லாம் வரிசையாக போருக்கு அனுப்பி காலத்தை நீட்டிக்க அவன் விரும்பவில்லை. முதல் நாள் போரிலேயே களத்தில் இறங்கினான். ஆனால் அங்கு நிலைமை தலைகீழாக இருந்தது. அவனால் ராமனை நெருங்க முடியவில்லை.

சுக்ரீவன், அனுமன், லட்சுமணன் என பலமான தடைகளைச் சந்தித்தான்.

அவர்களை எல்லாம் வெல்ல முடியவில்லை என்ற அதிர்ச்சியால் தடுமாறினான். அதனால்தான் ராமனுடன் நேரடியாக போரிடும் போது ஆயுதங்களை இழந்த நிலையில் 'இன்று போய் நாளை வா' என ராமன் சொன்னதைக் கேட்டு சோர்வுடன் திரும்பினான்.

ராவணனின் பரிதாப நிலை கண்டு வருந்தினான் மகோதரன். இவன் ராவணனின் செயல்களை ஆதரித்து அவனது மனதில் அரக்க தீபம் அணையாமல் பார்த்துக் கொண்டவன். ''ராவணா... கலங்காதே. உன் அருமைத் தம்பி கும்பகர்ணன் இருக்கும் போது ஏன் கவலைப்படுகிறாய்? போர்க்களத்துக்கு அவனை அனுப்பினால் வெற்றியுடன் திரும்புவான்'' எனத் துாண்டினான்.

ராவணனும் அப்படியே உத்தரவிட்டான். உறக்கத்தில் இருந்த கும்பகர்ணனை எழுப்ப வீரர்கள், குதிரைப்படை, யானைப்படைகள் புறப்பட்டன. அவனைத் துாக்கத்தில் இருந்து எழுப்புவது அத்தனை எளிதானது அல்ல. பல்லாயிரம் பேர் அவன் மீது ஏறி, குதித்து துவம்சம் செய்து, உலக்கையால் அடித்து, பெருமுயற்சி செய்த பிறகே கண்களை இமைத்தான்.

இத்தனை பேர் சிரமப்பட்டு தன்னை எழுப்புகிறார்கள் என்றால் ஏதாவது நல்ல விஷயமாக இருக்கும் என நினைத்தான். சீதையை ஒப்படைத்து ராமனுடன் நட்பு கொண்டானோ ராவணன்? என எண்ணினான். முகம் மலர்ச்சியுடன் சபைக்கு ஓடி வந்தான் கும்பகர்ணன்.

ஆனால் ராமனை எதிர்த்துப் போரிட வேண்டும் என அண்ணன் ஆணையிட்டபோது உற்சாகம் இழந்தான். இப்போதாவது தன் பேச்சை அண்ணன் கேட்க மாட்டானா என்ற ஆதங்கத்தில், '' ராமனுடன் போர் தொடங்கிவிட்டதா? கற்புக்கரசி சீதையின் சிறைவாசம் இன்னும் முடியவில்லையா? வானிலும், மண்ணிலும் ஓங்கிய உன் புகழ் வீழ்ந்ததா? எளிதாக ராமனை வெல்லலாம், அதன் பலனாக சீதையை அடையலாம் என இன்னுமா கனவு காண்கிறாய்? உன் அதர்மச் செயல்கள் சுற்றத்தாரை எல்லாம் உன்னிடமிருந்து நிரந்தரமாகப் பிரித்து விட்டது.

இதற்கான பின்விளைவை எப்படி சந்திக்கப் போகிறாய், அவற்றிலிருந்து எப்படி விடுதலை பெறப் போகிறாய்? நான் சொல்வதைக் கேள். சீதையை விட்டுவிடு. ராமனிடம் சரணாகதி அடைந்திடு. நல்லவனான விபீஷணனை மீண்டும் ஏற்றுக்கொள்'' என்றான்.

சீறினான் ராவணன். ''உன்னை இங்கு வரவழைத்தது எனக்கு அறிவுரை சொல்லவா... நீ போரிடப் பயப்படுகிறாய். அற்ப மானிடரை அரை நொடியில் சாய்த்து விடும் தீரன் நீ, ஏன் ஒதுங்கப் பார்க்கிறாய். உண்ணவும், உலகை மறந்து உறங்கவும் தான் விரும்புகிறாயா... அப்படியே தொடர்ந்து செய் போ. என் முன்னே நிற்காதே. நீ சுகத்துடன் வாழ்வது என் தயவால்தான் என்பதை மட்டும் மறவாதே''

தலைவணங்கினான் கும்பகர்ணன். ''அண்ணா! நான் போருக்கு புறப்படுகிறேன். ஆனால் திரும்ப வர மாட்டேன் என்றே நினைக்கிறேன். ஆமாம், விதி என்னை இறப்பு நோக்கித் தள்ளுகிறது. நான் செய்யும் உயிர்த் தியாகத்தை நீ மதிப்பதாக இருந்தால் என் மரணத்துக்குப் பிறகாவது சீதையை விடுவிப்பாயாக'' என நெகிழ்ச்சியுடன் கூறி விட்டுப் போர்க்களம் நோக்கி நடந்தான் கும்பகர்ணன்.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us