
பஸ் ஒன்று சென்று கொண்டு இருந்த போது, பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இடி, மின்னலைக் கண்டு பயணிகள் அலறினர். ஒரு மரத்தின் அருகில் பஸ்சை நிறுத்திய டிரைவர் பயணிகளிடம், ''நம்மில் ஒருவருக்கு இன்று மரணம் நிச்சயம். அவருக்காகத்தான் இடி, மின்னல் நம்மை நோக்கி வருகிறது. அந்த ஒருவருக்காக நாம் சாகணுமா... எனவே ஒவ்வொருவராக இந்த மரத்தை தொட்டு விட்டு வாருங்கள்'' என்றார்.
''அறிவு கெட்ட தனமாகப் பேசலாமா'' எனக் கோபப்பட்டார் ஒருவர்.
''இது என் கருத்து அல்ல. பலர் சொன்ன விஷயம். நான் சொன்னது நடக்காவிட்டால் நல்லது தானே'' என்றார் டிரைவர்.
கடைசியில் முதல் சீட்டில் இருந்த இளைஞனிடம் மரத்தை தொட்டு வரச் சொன்னார் டிரைவர். கண் இமைப்பதற்குள் தொட்டுவிட்டு பஸ்சில் ஏறினார் அவர். இப்படி அனைவரும் சென்று வந்த பின் கடைசி நபர் எழுந்தார். 'இவனால் தானே நமக்கு பிரச்னை. இவன் கீழே இறங்கினால் நாம் தப்பிக்கலாம்' என சிலர் எண்ணினர். அவரும், 'என் ஒருவனால் தானே அனைவருக்கும் கஷ்டம்' என எண்ணியபடி நடந்தார். கண் இமைக்கும் நேரத்திற்குள் பஸ்சின் மீது இடி விழுந்தது.
இதுதான் வாழ்க்கை. அந்த கடைசி நபரால்தான் அனைவரும் பாதுகாப்பாக இருந்துள்ளனர். இது போல நம் வெற்றிக்குப் பின்னே நல்லவர்களின் உழைப்பும், ஆதரவும் இருக்கும்.
அதாவது பெற்றோர், மனைவி, கணவர், குழந்தைகள், உறவினர், நண்பர் என பலரது வடிவில் கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார். யாரையும் தவறாக எண்ணாதீர். எல்லாம் விதிப்படி நடக்கிறது.