ADDED : மே 17, 2024 07:46 AM

கருணைக்கொலை
என் முன் அமர்ந்திருந்தவர் முகத்தில் இருந்த சோகம் என்னை உறுத்தியது.
“நான் மூர்த்தி. வசதியான குடும்பம். எனக்கு ஒரு அக்கா. பிறவியில் இருந்தே பார்வை இல்ல. அதோட பெருமூளை வாதம் வேற. செரிப்ரல் பால்சி. கால் கைய அசைக்க முடியாது. நெறைய ஆளுங்களப் போட்டு நல்லபடியா பாத்துக்கிட்டோம். அவ வாழ்க்கை அர்த்தம் இல்லாமப் போயிடக் கூடாதேன்னு நல்ல புத்தகங்களப் படிச்சிக்காட்டக் கூட ஆளுங்களப் போட்டிருக்கோம். உங்க எழுத்து அவள ரொம்பவே பாதிச்சிருக்கு”
“இப்போ என்ன பிரச்னை…''
“அக்காவுக்கு அறுபது வயசு. எனக்கு 58 வயசு. எனக்கு குடல் கேன்சர். இன்னும் எத்தனை நாள் இருப்பேன்னு தெரியாது. எனக்குப் பிறகு என் பொண்டாட்டி பிள்ளைங்க அக்காவப் பார்ப்பாங்களான்னு சந்தேகம். பணத்துக்குக் குறையில்ல. பாத்துக்க ஆள் வேணுமே! எனக்கு முன்னால அக்கா இறக்கணும். இல்லேன்னா விஷ ஊசியால அக்காவ கருணைக் கொலை செய்யலாம்னு...''
''உங்க முகத்துல அதிர்ச்சி தெரியுது. அக்கா தனியா இருந்து அழுகிச் சாகறத விட கருணைக்கொலை நல்லதில்லையா? யோசிச்சிச் சொல்லுங்க. வெள்ளிக்கிழமை காலையில வரேன்”
கருணைக் கொலை செய்ய வேண்டும் என மூர்த்தி சொல்வது பாசத்தின் வெளிப்பாடு என்றாலும் அதை பச்சைப் புடவைக்காரி சம்மதிக்க மாட்டாள். மூர்த்திக்கு எப்படி வழி காட்டுவது?
அன்று மாலை பூங்காவில் இருந்த போது ஒரு பெண் என்னிடம் ஒரு சீட்டை நீட்டி, “இந்த இடத்துக்கு வழி சொல்ல முடியுமா?”
இந்த இடத்தை நான் கேள்விப்பட்டதில்லை.
“சொந்த ஊரிலுள்ள இடத்துக்கே வழிகாட்ட முடியலையாம். நீ எப்படி மூர்த்திக்கு வழிகாட்டுவாய்?”
தாயின் காலில் விழுந்தேன்.
“மூர்த்தியின் அக்கா பூரணி என் பக்தை. அவளாகக் கேட்டுப் பெற்ற பிறவி இது. பிறவிப் பயனை அவள் பெறும் நேரம் வந்து விட்டது. அவளை நரம்பியல் மருத்துவர் சுந்தரத்திடம் போகச் சொல்”
நான் அவளையே பார்த்தபடி இருந்தேன்.
“என்ன நடக்கும் என அறியும் ஆர்வம் வந்துவிட்டதோ... அங்கே பார்.”
பூரணியை மருத்துவர் சுந்தரம் சோதித்து விட்டு, “அம்மா, உங்க கைய அசைங்க”
“அது அசைஞ்சா தானே! வியாதியோட பொறந்தவளாச்சே நான்''
“வியாதியால உங்க கால்தான் முடங்கி போயிருக்கு. கை இல்ல”
“எனக்கு கைன்னு ஒண்ணு இருக்கறதே தெரியலையே”
பூரணி உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டாள். தீவிர சிகிச்சையைத் தொடங்கினார் சுந்தரம். பலன் இல்லை.
மருத்துவருக்கு ஒரு யோசனை வந்தது. ஒரு நாள் மதியம். பூரணி நல்ல பசியுடன் இருந்தாள். படுக்கைக்கு அருகே கைக்கெட்டும் துாரத்தில் பழம், ரொட்டி இருந்தது. பூரணி “பசி” எனக் கத்தினாள். நர்ஸ் எனக் கூச்சலிட்டாள். யாரும் கண்டுகொள்ளவில்லை. சுந்தரம் தன் உதவி மருத்துவர்களுடன் மறைவாக நின்றிருந்தார்.
பூரணி தலையை வேகமாக ஆட்டினாள். அதன் பின் அவளின் வலது கையில் லேசான அசைவு தென்பட்டது. வலது கையைத் துாக்கினாள் பூரணி. பின் இடது கையை.
பின் இரண்டு கைகளாலும் துழாவினாள். வலது கையில் கொய்யாப்பழம் அகப்பட்டது. அதை எடுத்துக் கடித்தாள். சாப்பிட்ட பின்னும் பசியடங்கவில்லை. மீண்டும் துழாவிய போது ரொட்டி அகப்பட்டது. அதையும் அவதி அவதியாகச் சாப்பிட்டாள்.
சுந்தரம் கை தட்டினார்.
“யாரது?” பூரணி கத்தினாள்.
“டாக்டர்தாம்மா. உங்களால கைய அசைக்க முடியுது. இனி நாங்க பயிற்சி கொடுக்கறோம்”
பிறவியிலேயே பார்வை இல்லாத பூரணி கைகளால் ஒவ்வொரு பொருளையும் ஆசை தீரத் தடவிப் பார்த்தாள். அதன்பின் அவள் செய்த வர்ணனை கவித்துவமாக இருந்தது.
“இது ஆப்பிள் பழம். உருண்டையாக இருக்கிறது. தோலில்தான் எத்தனை வழவழப்பு! தொடுவதற்கே சுகமாக இருக்கிறது. அறுபது வருஷமா என் தொடு உணர்வு எங்க போயிருந்தது டாக்டர்?”
அன்று முதல் பூரணி தினமும் பல பொருட்களைத் தொட்டுப் பார்த்தாள். ஒவ்வொன்றையும் அழகாக வர்ணித்தாள். ஒரு கட்டத்தில் அவளது கவனம் மனிதர்கள் பக்கம் திரும்பியது. தம்பி மூர்த்தியின் முகம், தோளை நன்றாக தொட்டுத் தடவிப் பார்த்தாள்.
“வாழ்க்கை பூரா உனக்குப் பாரமா இருந்துட்டேனே தம்பி? நீ என் தம்பி இல்லடா. என் தகப்பன்” என்றாள்.
பின் டாக்டர் சுந்தரம், அவளைக் கவனித்துக் கொள்ளும் நர்ஸ்கள், உறவினர்கள் எல்லோரின் முகம், தோள்களை தொட்டுத் தடவிப் பார்க்க ஆரம்பித்தாள்.
“எதையாவது படைக்கணும்னு மனசு துடிக்குது டாக்டர்”
“உங்கள வீட்டுக்கு அனுப்பறேன். நல்ல களிமண்ணா வாங்கி வைக்கச் சொல்றேன். அதுல நீங்க தொட்டுத் தடவிப் பார்த்த மனுஷங்கள உருவங்களாகச் செய்யுங்க''
முதலில் பூரணி உருவாக்கிய உருவங்கள் சுமாராகத்தான் இருந்தன. ஆனால் போகப் போக அவளின் கையில் ஒரு கலைவண்ணம் வந்துவிட்டது. டாக்டர் சுந்தரத்தின் சிலையும் மூர்த்தியின் சிலையும் தத்ரூபமாக இருந்தன.
பூரணி வடித்த களிமண் சிற்பங்களில் அபூர்வ சக்தி இருந்தது. சிலவற்றை நல்ல விலைக்கு போகவே பூரணிக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. அவர்கள் வீட்டின் ஒரு அறை சிற்பக்கூடமாக மாற்றப்பட்டிருந்தது.
“எல்லாம் சரிதான் தாயே! ஆனால் மூர்த்தியின் ஆயுட்காலத்திற்குப் பின்...''
“காட்சி இன்னும் முடியவில்லையே”
திடீரென பூரணி சிற்பம் செய்வதை நிறுத்தினாள்.
“இன்னும் ஒரே ஒரு சிற்பம்தான் செய்யணும். அதுக்காகக் கொஞ்ச நாள் மோன நிலையில இருக்கேன்”
“அக்கா அது யாரோட சிற்பம்?”
“செஞ்சு முடிச்சப்பறம் தன்னால தெரியும்''
ஒருநாள் வெறியுடன் வேலை செய்யத் தொடங்கினாள் பூரணி. தன் முன்பிருந்த இடத்தைக் கைகளால் தட்டித் தடவிப் பார்த்துக் கொண்டேயிருந்தாள். அவளுக்கு கண்ணீர் வந்துகொண்டேயிருந்தது. சில சமயம் விம்மல் வெடித்தன. நர்ஸ் பயந்து விட்டாள்.
“என்னம்மா ஆச்சு?”
“நல்லாவே இருக்கேன். இதுவரைக்கும் இவ்வளவு நல்லா இருந்ததேயில்ல”
ஒரு நாள் நள்ளிரவு சிற்பக்கூடத்தில் வேலை செய்து கொண்டிருந்த பூரணி, 'அம்மா' என்று அலறியபடி சரிந்தாள். அரைத் துாக்கத்தில் இருந்த நர்ஸ் பதறினாள். விழுந்து கிடந்த பூரணியின் மூக்கருகில் விரலை வைத்துப் பார்த்தாள். மூச்சு வரவில்லை. பூரணியின் முகத்தில் தோன்றிய பரவச உணர்வை அந்த நர்சால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அருகே இருந்த மேடையில் பச்சைப்புடவைக்காரியின் களிமண் சிற்பம் கம்பீரமாக வீற்றிருந்தது.
“அவளுக்கோ கண் தெரியாது. கையால் தொட்டு உணர்ந்ததைத் தான் சிலையாக்க முடியும். அவள் உங்கள் சிலையைச் செய்திருக்கிறாள் என்றால்…''
எனக்கு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துப் போனது.
“பூரணி களிமண்ணைத் தொட்ட கையால் உங்களைத் தொட்டுத் தொட்டு சிலை செய்ய வேண்டும் என்பதற்காக உங்கள் பணிகளை எல்லாம் நிறுத்தி விட்டு வந்தீர்களா?”
“அது மட்டுமில்லை. பூரணியின் கையில் இருக்கும் களிமண் துகள்கள் என் முகத்திலும் ஆடையிலும் ஒட்டிக் கொள்ளப் போகின்றன. அதைக்கூட அப்படியே வைத்திருக்கப் போகிறேன். எனக்கு அன்புதான் முக்கியம் என மனிதர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக” கதறியபடி அவள் காலில் விழுந்தேன்.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com