ADDED : மே 17, 2024 08:13 AM

உலகின் பெருமை
மெத்த படித்தவர் ராமசாமி தாத்தா. அவர் குழந்தைகளுக்கு அவ்வப்போது கதைகள் சொல்லுவார்.
ஒருநாள் கந்தன் என்ற பையன் அழுதபடியே, ''தாத்தா தாத்தா'ன்னு கூப்பிட்டான். அவனைப் பார்த்து, 'என்னடா விஷயம் உங்க தாத்தா எப்படி இருக்காரு' என கேட்டார். அதற்கு அவன், 'என் தாத்தா இறந்து போயிட்டாரு. அதை உங்களிடம் சொல்றதுக்கு தான் வந்தேன்' என்றான்.
'அப்படியா... நேற்று கூட பேசினேனே... இன்றைக்கு உன் தாத்தா...நாளை நானா...' என விரக்தியுடன் சிரித்தபடி 'வா போகலாம்' என்றார்.
உடனே கந்தன் கேட்டான், 'நான் அழுதுகிட்டே சொல்றேன்; நீங்க சிரிக்கிறீங்களே ஏன்'' எனக் கேட்டான்.
'பகவத் கீதை யார் சொன்னதுன்னு தெரியுமா' என தாத்தா கேட்டதற்கு, 'தெரியும்... கிருஷ்ணர் தானே சொன்னாரு' என்றான் கந்தன். 'திருக்குறளை யார் சொன்னார் தெரியுமா?' இது தாத்தாவோட கேள்வி.
'திருவள்ளுவர். இரண்டே வரியில் நிறைய கருத்து சொல்லிருக்கார். நான் படிச்சிருக்கேன்' என்றான் கந்தன்.
'பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளன. திருக்குறளில் 1330 குறள்கள் உள்ளன. கீதையில் கிருஷ்ணர் இரண்டாவது அத்தியாயம் 12ம் ஸ்லோகத்தில்
'நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி பா:|
ந சைவ ந ப விஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ||2-12||' என்கிறார்.
இதோட அர்த்தம் என்னன்னா 'நான் எப்போதும் இருந்ததில்லை என்பது இல்லவே இல்லை; நீயும் இருந்ததில்லை; இந்த அரசர்களும் இருந்ததில்லை; இனிமேலும் நாம் இருக்கப் போவதும் இல்லை... அப்படின்னு சொல்லிட்டு இந்தக் குறளைச் சொன்னார்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்பெருமை உடைத்துஇவ் வுலகு
(நிலையாமை - குறள் 336)
'நேற்று இருந்த ஒருவன், இன்று இறந்தான் என்பது தான் நிலையாமை. இதுவே உலகத்தின் பெருமை. அதனால் தான் சிரித்தேன்'' என்றார் தாத்தா.
இதே போல பகவத்கீதை, திருக்குறளில் உள்ள பொதுவான கருத்துக்கள் நிறைய உள்ளன எனக் கந்தனிடம் சொன்னார் தாத்தா. அதை அறிய நீங்களும் தயாராகி விட்டீர்கள் தானே...
-தொடரும்ராதிகா
97894 50554