sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 36

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 36

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 36

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 36


ADDED : மே 17, 2024 08:19 AM

Google News

ADDED : மே 17, 2024 08:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தப்பிப் பிறந்த தம்பி

கும்பகர்ணன் போர்க்களத்திற்குச் சென்றான். அவனது உயர்ந்த தோற்றம், சூரியனையே மறைத்து அப்பகுதி முழுவதற்கும் நிழல் தந்தது. அவனை வியந்து பார்த்தான் ராமன். கம்பீரமான உருவம் கொண்ட அவன் போர்க் கவசங்கள் மட்டுமன்றி, தர்ம சால்வையையும் போர்த்தியிருந்ததை உணர்ந்தான். 'பார்த்த மாத்திரத்திலேயே அரக்கன் என்ற உணர்வோடு இவனை அழிக்க வேண்டும் என எண்ணம் வரவில்லையே' என எண்ணித் திகைத்தான். விபீஷணனிடம் இவன் யார் எனக் கேட்டான்.

'என் அண்ணன்' என்றான் விபீஷணன். அதில் குற்ற உணர்வும், கூடவே பெருமிதமும் இருந்தது. மீண்டும் ''ராவணனின் தம்பியான இவன் நேர்மை மிக்கவன்'' என்றான்.

ராமன் ஆச்சரியத்துடன் பார்த்தான். கூடவே இருந்த அனுமனுக்கு அவனை அடையாளம் தெரிந்தது. சீதையைத் தேடி இலங்கையில் அலைந்த போது குறிப்பிட்ட மாளிகையில் இருந்து வந்த புயலாக வந்த காற்று தன்னை இழுத்துச் செல்வது போல உணர்ந்தான். வாயு புத்திரனான தன்னையே இழுக்கும் புயல் எங்கிருந்து வருகிறது என பார்த்தபோது, அது கும்பகர்ணனின் மூச்சுக் காற்று என்பதை உணர்ந்து பிரமித்தான். மலை போல படுத்திருந்த அவன் மூச்சை விடும் போது எல்லாப் பொருட்களும் தள்ளப்படுவதும், மூச்சை உள்ளிழுக்கும் போது அவை இழுக்கப்படுவதும் தெரிந்தது.

அனுமனின் முகக்குறிப்பைப் புரிந்து கொண்ட விபீஷணன், ''என் அண்ணன் கும்பகர்ணன் அசகாய சூரன். நான்கு கொம்பு கொண்ட ஐராவதம் யானை மீதிருந்த இந்திரனை அந்த யானையோடு சேர்த்து சுழற்றி வீசியவன். ஆனாலும் இவன் மனதளவில் இளகியவன். சீதையைக் கவர்ந்தது முறையற்ற செயல் என தான் விழித்திருக்கும் காலங்களில் ராவணனுக்கு அறிவுறுத்த தயங்கியதில்லை. ராவணன் அவனது அறிவுரையை கேட்க விரும்பவில்லை என்றாலும், கும்பகர்ணன் தன் கருத்தை சொல்லத் தவறியதில்லை. அத்தகைய உத்தமன் அவன். ராவணனின் நடவடிக்கையை வெறுத்ததால் நான் உங்களைத் தஞ்சமடைந்தேன். கும்பகர்ணனும் என் மனநிலையில் இருக்கலாம் என கருதுகிறேன். போர்க்களத்திற்கு வந்த அவனது மனம் தர்மம், அதர்மத்துக்கும் இடையே ஊசலாடும். பக்குவமாக அவனிடம் பேசி, தங்களைச் சரணடைந்து நற்கதி பெறுமாறு அவனை அழைக்கப் போகிறேன்'' என்றான் ஆவலுடன். ராமன் புன்னகையுடன் சம்மதித்தான்.

வானரப்படையைக் கடந்து எதிர் அணியில் உள்ள அரக்கர் படையை ஊடுருவி கும்பகர்ணனை அடைந்தான் விபீஷணன்.

அவனைப் பார்த்ததும் வருந்திய கும்பகர்ணன்.

''தம்பீ, நீயாவது நம் குடும்பத்தில் பிழைத்து அறம் வளர்க்கும் ராமனுடன் இணைந்தாயே என ஆறுதல் அடைந்தேன். ஆனால் இதென்ன நீ ராமனை விட்டு என் பக்கம் வந்திருக்கிறாய்? மனதை மாற்றி விட்டாயா? ஏன் இப்படி செய்தாய்? ராவணன் பிறன்மனை விழைந்ததால் நம் குலப்பெருமை அழிந்து விட்டது. ஆனால் விபீஷணா, அந்த தீச்செயலுக்குப் பிறகு நீ மட்டும் ராமனைச் சேர்ந்தாய்; அதனால் நம் குலம் புத்துயிர் பெறும் என நம்பினேனே, கெடுமதியாளருடன் மீண்டும் சேர ஏன் வந்தாய்? அமிர்தத்தை விட்டுவிட்டு விஷத்தைக் குடிக்க வந்துவிட்டாயே'' என வாஞ்சையுடன் கேட்டான்.

கும்பகர்ணன் கேட்ட கேள்விகளால் விபீஷணனுக்கு அண்ணன் தன் மீது காட்டும் அக்கறை புரிந்தது. சிரித்தபடி, ''அண்ணா.. ராமனை விட்டு விலகவில்லை. உன்னை நாடி வந்தது ஏன் தெரியுமா... நீயும் என்னைப் போல நற்கதி பெற வேண்டும் என்ற ஆதங்கத்தால்தான். இழிபிறவி என்று உன்னை நீயே தாழ்த்துகிறாய், காரணம் ராவணனின் இழிசெயல்தான். பாவத்திலிருந்து மீள என்னைப் போல ராமனை சரணாகதி அடைவதே வழி'' என யோசனை கூறினான்.

தம்பி வந்ததற்குக் காரணம் தன்னை நற்கதி பெற வைப்பதுதான் என்பதைப் புரிந்து கொண்டான். புன்சிரிப்புடன் பார்த்த கும்பகர்ணனிடம், '' உன் வாழ்நாளில் பெரும்பகுதியை உறங்கியே கழித்து விட்டாய். ராவணனுக்கு அறிவுரை சொல்லி அவனது எதிர்ப்பையும் சம்பாதித்தாய். உனக்கு நன்மை, தீமையை பாகுபடுத்தத் தெரிகிறது. இப்போதும் காலம் இருக்கிறது. ராவணனை சகோதரனாகப் பார்க்காதே, மாற்றான் மனைவியைக் கவர்ந்த பாதகன் என்று பார். இப்போதே ராமனை சரணடைந்திடு'' என்றான் விபீஷணன்.

'' ராமனைச் சேர்ந்தாலும் எனக்கு லாபம் ஏதுமில்லை. நல்லவனோடு கூட்டு சேர்ந்தாலும், அதை அனுபவிக்க முடியாதபடி சாபத்தால் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவேன். ராவணன் தீயவனாக இருந்தாலும் அவன் இட்ட சோற்றால் உடம்பை வளர்த்தவன் நான். ஆகவே செஞ்சோற்றுக் கடன் தீர்க்க வேண்டியது என் கடமை. என்னை நிர்ப்பந்திக்காதே'' என்றான் கும்பகர்ணன்.

''உன் கொள்கையை பாராட்டுகிறேன். ஆனால் ராவணனுடன் நீ கொண்டிருக்கும் உறவு தர்மத்தை படுகுழியில் தள்ளிவிடும். அவனைச் சார்ந்தவர்கள் அனைவரும் அநீதிக்குத் துணை புரிபவர்களாக இருந்தால் அவன் எப்படி திருந்துவான்? தனக்காக மற்றவர்கள் போரில் மாண்டாலும், சீதை மீதுள்ள மோகத்தால் கல்மனம் கொண்டவனாகத்தானே அவன் இருக்கிறான்? கிங்கரர், சம்புமாலி, பஞ்ச சேனாதிபதியர்... ஏன் தன் மகன் அக்ககுமாரன் அனைவரும் கொல்லப்பட்ட பிறகும் அவனுக்கு புத்தி வரவில்லையே! அவன் மோகத்தைக் கொன்றிருந்தால் இத்தனைக் கொலைகள் நேர்ந்திருக்குமா? அவன் மனம் திருந்த மாட்டான் எனப் புலப்படவில்லையா? சீதைக்காக இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்கப் போகிறானோ'' என வருந்தினான் விபீஷணன்.

''அவனுக்காக இறந்த அனைவரும் தங்களின் விசுவாசத்தைக் காட்டினார்கள் என்ற கோணத்தில் ஏன் பார்க்க மறுக்கிறாய்? சரி, உன் கொள்கை உனக்கு, என் கொள்கை எனக்கு. நமக்கென வகுத்துக் கொண்ட பாதையில் அவரவர் விருப்பப்படி பயணிப்போம்'' என கும்பகர்ணன் தீர்மானமாகச் சொன்னான்.

அவனைப் பரிதாபமாகப் பார்த்தான் விபீஷணன்.

''ராமனை சேர்ந்ததால் சிரஞ்ஜீவியாக வாழும் வரம் பெற்றாய். வேதியர்களுக்குத் தலைவனாக விளங்கும் ராமனின் அனுமதியுடன் போரில் இறந்த உறவினர்களுக்கு இறுதிக் கடன்களைச் செய்து அவர்களின் ஆன்மா நரகத்தில் உழலாதபடி செய்வாயாக'' என கண்ணீர் தளும்ப கேட்டுக் கொண்டான் கும்பகர்ணன்.

'போதி நீ ஐய பின்னைப் பொன்றினார்க்கு எல்லாம் நின்ற

வேதியர் தேவன் தன்னை வேண்டினை பெற்று மெய்ம்மை

ஆதி நுால் மரபினாலே கடன்களும் ஆற்றி ஏற்றி

மாதுயர் நரகம் நண்ணா வண்ணமும் காத்தி மன்னோ

- கம்பர்

ராமனை நோக்கி விரக்தியுடன் திரும்பினான் விபீஷணன். வானரப் படையில் பலரையும் எதிர்த்து போரிட்ட கும்பகர்ணன், இறுதியில் ராம பாணத்தால் உயிர் நீத்தான்.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us