
கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிசநல்லுாரில் முகாமிட்டிருந்தார் மஹாபெரியவர். வேத பண்டிதர் பைங்காநாடு ஸ்ரீநிவாச சாஸ்திரிகள் சுவாமிகளுடன் இருந்தார்.
ஒருநாள் மாலையில், 'என்னுடன் வா' என அழைத்தபடி காவிரி நதியை நோக்கி நடந்தார் மஹாபெரியவர். குடியிருப்பு பகுதியைக் கடந்ததும், இரண்டு புறமும் தென்னை, வாழை என எங்கும் பசுமையாக இருந்தது. வாய்க்காலில் தண்ணீர் ஓடியது. பசுமையின் வனப்பை ரசித்தபடி நடந்த மஹாபெரியவர், தொடர்ந்து வந்த சாஸ்திரிகளிடம், ' மற்றவர்களின் நன்மதிப்பைப் பெற என்ன செய்ய வேண்டும்?' எனக் கேட்டார்.
இதுதானே தற்காலத்தில் நமக்கு பிரச்னையாக உள்ளது. நல்லவனாக வாழ்ந்தாலும், மற்றவர்கள் யாரும் 'நல்லவன்' எனச் சொல்வதில்லை. அப்படியே ஒரு நபர் 'நல்லவன்' என பாராட்டினாலும், நம்மைச் சுற்றியுள்ள நபர்கள் 'கெட்டவன்' என சொல்லத் தயாராக இருக்கிறார்கள். அதனால் இது கடினம் என சிந்தித்த சாஸ்திரிகள், சாலையிலேயே சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு, 'நன்மதிப்பை பெற விரும்பினால் துன்பத்தை அடைய நேரும். அதனால் அதை விரும்பக் கூடாது' என்றார்.
இதைக் கேட்டு புன்னகைத்தபடி, ' இது சரியான பதில் இல்லை' எனச் சொல்லி விட்டு சாஸ்திரிகளுக்கு உபதேசம் செய்தார் மஹாபெரியவர்.
அது அவருக்கு மட்டுமல்ல... நமக்கும் தான் தேவையானது.
''உன் மனதிலுள்ள குற்றம், குறைகளை களைந்தெடு. நன்மதிப்பு தானாக வந்தடையும். மனம் துாய்மையானதாக இருக்க வேண்டும். அதில் தீய எண்ணம் இருக்கக் கூடாது. பொறாமை, எரிச்சல், ஆணவம் வேண்டாம். நல்ல மனம் கொண்டவனை உலகிலுள்ள அனைவரும் வாழ்த்துவர். அவர்கள் மீது அன்பு, பாசம் அதிகம் கொண்டிருப்பர்' என்றார் மஹாபெரியவர். மீண்டும் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார் சாஸ்திரிகள்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com