ADDED : மே 24, 2024 09:40 AM

குணசீலன் குகன்
தான் பணியாற்றும் கங்கைக் கரைக்கு ராமன், வருவிருப்பதை அறிந்து உவகை கொண்டான் குகன். அதுவே அன்பாக, பாசமாக ஏன் பக்தியாக மாறியது.
ராமன் வந்தான். உடன் சீதையும், லட்சுமணனும். அந்தப் பேரழகனைப் பார்த்து கொண்டே இருக்கலாம் போலிருந்தது குகனுக்கு. விருந்தோம்பல் பண்புடன், என்ன கொடுப்பது, எதைக் கொடுப்பது என குழம்பினான். இறுதியில் தேனும் மீனும் எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
குகனைப் பார்த்த ராமன் நெகிழ்ந்தான். உரம் வாய்ந்த குன்று போன்ற உடலும், துாண் போன்ற கால்களும், பரந்த தோளுமாகக் காட்சியளித்த அவன் கண்களில் ஒளி இருந்தன. முரட்டுத்தனமாக தோன்றினாலும் விழிகளில் கருணை ஒளிர்ந்தது.
ஆனாலும் நெடிதுயர்ந்த தன் உடலைக் குறுக்கிக் கொண்டு உணவுப் பொருட்களை சமர்ப்பித்த அவனுடைய தாழ்மையைக் கண்டு கலங்கினான் ராமன். தன்முன் அமரவும் வெட்கி, மார்புக்குக் குறுக்காக கைகளைக் கட்டி, சற்றே குனிந்தபடி நின்ற அவனது பணிவு ராமனை சிந்திக்க வைத்தது. 'இவனும், இவனைப் போன்றோரும் ஏன் தாழ்த்திக் கொள்கிறார்கள்? தாங்களாகவே ஏன் ஒதுங்குகிறார்கள்? பிறப்பால் மக்களிடையே ஏற்றத் தாழ்வுக்கு எந்தக் காரணமும் இல்லையே. தாழ்வு மனப்பான்மை யாலும், சுயமதிப்பை உணராமலும், தைரியம் இல்லாமலும் இவர்கள் இருக்கிறார்களே' என வேதனையுற்றான்.
தேனையும், மீனையும் சமர்ப்பித்த குகன், ''ஏற்றுக் கொள்ளுங்கள்'' எனக் கோரவில்லை; மாறாக ''தங்கள் உள்ளத்திற்கு இந்தக் காணிக்கை இசைவாக இருக்குமா?' என பணிவுடன் கேட்டான்.
அதைக் கேட்டு கவலைப் பெருமூச்சு விட்டான் ராமன். உரிய முறையில் அவனை அங்கீகரிக்க வேண்டும், மனிதருக்குள் ஏற்றத் தாழ்வு கிடையாது என்பதை தெரியப்படுத்த வேண்டும் எனத் தீர்மானித்தான்.
அதே சமயம், ஒரு ராஜகுமாரன் ஏன் துறவு நிலையில் காட்சியளிக்க வேண்டும் என்ற சந்தேகம் குகனுக்கு எழுந்தது. அதைத் தெரிந்து கொள்ள கேள்வி கேட்பது அதிகப் பிரசங்கித்தனமாகுமோ என அஞ்சினான்.
அன்றிரவு முனிவர்களின் பர்ண சாலையில் ராமனும் சீதையும் தங்கிய போது அவர்களைக் காக்கும் பணியை மேற்கொண்டான் லட்சுமணன். ராமனை விட்டுப் பிரிய மனமில்லாத குகன், தானும் லட்சுமணனுக்குத் துணையாக நின்றான். அப்போது குகன் எதற்காகவோ தயங்குவதை லட்சுமணன் கவனித்தான். ராமன் மீது அவன் எவ்வளவு மரியாதை வைத்திருக்கிறான் என்பதை அவனது பார்வையிலேயே அனுமானித்த லட்சுமணன், ''என்னவோ கேட்க விரும்புகிறீர்கள் போலிருக்கிறதே?'' என்றான்.
''ஆமாம்… நீங்கள் வனவாசம் புரிவதற்கு என்ன காரணம் என… நீங்கள் சொல்ல விரும்பாவிட்டால் வேண்டாம்'' என கூச்சத்துடன் பதிலளித்தான் குகன்.
பெருமூச்சு விட்ட லட்சுமணன் அந்த சோகப் பின்னணியை விவரித்தான். அதைக் கேட்டு குகன், 'அரச குடும்பத்தில் இப்படி ஒரு அபகீர்த்தியா? என்ன மனிதர்கள்! நற்பண்பினர் என மதிக்கப்பட்ட குடும்பத்தில் இப்படி வஞ்சக எண்ணம் வேரூன்றியது வேதனைக்குரியது' என புழுங்கினான். அப்போதே அவனை அறியாமல் மனசுக்குள் கைகேயி, பரதன் மீது வெறுப்பு உருவானது.
மறுநாள் பொழுது விடிந்தது. ராமன் குகனிடம் விடை பெற்றான். ''ஐயனே, பதினான்கு நீண்ட ஆண்டுகளை எங்கே கழிப்பீர்கள்? இங்கேயே சிருங்கி பேரம் நகரிலேயே தங்கி விடுங்கள். உங்களுக்கு அடிமை செய்ய நாங்கள் இருக்கிறோம். மூவரும் மகிழ்ச்சியுடன் பொழுதுபோக்க ஏதுவான இயற்கை வனங்கள் இருக்கின்றன. நீராடி துாய்மை பெற கங்கை உள்ளது.
ஆகவே இங்கேயே தங்கி நல்ல வழிகாட்டியாக எங்களை உய்விக்கக் கூடாதா?'' என நா தழுதழுத்தான்.
அவனது தோளைத் தட்டிக் கொடுத்தான் ராமன். ''வனப்பகுதியிலுள்ள முனிவர்களை சந்தித்தும், அவர்களின் ஆசியைப் பெற்றும், அறிவுரை கேட்டும் கழிக்க வேண்டும் என்பது என் தாயார் கைகேயியின் விருப்பம். அதை மீறலாமா? ஞானம் பெற எனக்குக் கிடைத்த வரமல்லவா இது? எல்லாவற்றையும் விட என் பெற்றோரின் கட்டளையை மீறலாமா?''
ராமனின் கூற்றை குகன் புரிந்து கொண்டதோடு அவரின் பண்பைப் பெரிதும் போற்றினான். தன்னை வஞ்சித்தவர்களை நிந்தனை செய்யாமல் அவர்கள் தனக்கு விதித்த தண்டனையை சாதகமாக்கிக் கொள்ளும் நேர்மை அவனைக் கவர்ந்தது.
''நீ எனக்காக உதவி செய்ய வேண்டும்'' ராமன் தொடர்ந்தான். ''எங்கள் மூவரையும் கங்கையின் மறுகரைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்குள்ள தீர்த்தங்களில் நீராடி, முனிவர்களை சந்தித்து ஆசி பெற்று வனவாச காலத்தைப் பயனுள்ள வகையில் செலவிட வேண்டும்''
''உத்தரவிடுங்கள் ஐயனே'' எனக் கூறிய குகன் படகை வரவழைத்து மூவரையும் அமர வைத்தான். ராமனும் சீதையும் இணைந்து அமர, பின் இருக்கையில் லட்சுமணன் உட்கார்ந்தான். அவனுக்கும் பின்னால் மூலைக்குச் சென்று கைகளால் துடுப்பு வலித்து படகை கங்கை நதிக்குள் செலுத்தினான்.
படகு செல்லும் வேகத்தில், மேலே துள்ளி விழுந்த நீர்த் திவலைகள் புது அனுபவத்தைத் தந்தது. கை நீட்டி, ஆற்று நீரை முகந்து ராமனும், சீதையும் ஒருவர் மீது ஒருவர் வீசினர். அதைக் கண்டு லட்சுமணன், குகன் மகிழ்ந்தனர்.
கரையோரமாகப் படகு நின்றது. அனைவரும் இறங்கினர். ''அன்பனே, உன் உதவிக்கு நன்றி. உன்னிடமிருந்து விடை பெறுகிறோம். சித்திரக்கூடம் செல்லும் வழியைச் சொல்வாயா?'' எனக் கேட்டான் ராமன்.
குபுக்கென கண்ணீர் பெருகியது குகனுக்கு. ''ஐயனே, இங்கிருந்தபடி வழியைக் காட்டி தங்கள் மீதான மரியாதையை குறைத்துக் கொள்ள மாட்டேன். நானும் வருகிறேன். வழியில் இடர்ப்படும் செடி, கொடி, ஏன் விலங்குகளிடமிருந்தும் உங்களைக் காத்தபடி வருகிறேன்''எனக் கெஞ்சினான் குகன்.
''துன்பம் என ஒன்று வந்தால்தானே இன்பம் இத்தனை சுவையானது என புரியும்? நம்முடைய இந்த சந்திப்பிற்கும், வனவாசம் முடிந்து திரும்பும் போதான அடுத்த சந்திப்பிற்கும் இடைப்பட்ட காலத்தைத் துன்பமாகக் கருதாதே. இதற்கு முன் நாங்கள் சகோதரர்கள் நால்வராக இருந்தோம்; இப்போது உன்னுடன் சேர்ந்து ஐவராேனாம்'' என பாசம் பொங்கக் கூறினான் ராமன்.
துன்பு உளது எனின் அன்றோ சுகம் உளது அது
அன்றிப்
பின்பு உளது இடை மன்னும் பிரிவு உளது என
உன்னேல்
முன்பு உளெம் ஒரு நால்வேம் முடிவு உளது
என உன்னா
அன்பு உள இனி நாம் ஓர் ஐவர்கள் உளர்
ஆனோம்
-கம்பர்
கைகூப்பி அவர்களை வழியனுப்பினான்
குகன்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695