
மணி, மல்லாசுரன் வதம்
அசுரச் சகோதரர்களான மணி, மல்லா இருவரும் பிரம்மாவை வேண்டி தவமிருந்தனர். அதனால் மனமிரங்கிய பிரம்மா தோன்றிய போது, தங்களைப் போரில் எவரும் வெல்ல முடியாத வரம் வேண்டும் எனக் கேட்டனர். ஒரு நிபந்தனையுடன் வரம் தருவதாக தெரிவித்த பிரம்மா, “நீங்கள் இருவரும் இணைந்து யாருடன் போரிட்டாலும், வெற்றி உங்களுக்கு கிடைக்கும். சிவனும் பார்வதியும் கணவன், மனைவியாக இணைந்து போர் செய்யும் காலத்தில் அவர்களால் கொல்லப்படுவீர்கள்'' எனச் சொல்லி மறைந்தார்.
அதனைக் கேட்டு வருத்தமடைந்தாலும் தங்கள் அழிவுக்கு முன்பாக உலகம் முழுவதையும் வெல்ல வேண்டுமென ஆசைப்பட்டனர். தவபலத்தால் பூலோகத்தை முழுமையாகக் கைப்பற்றினர். அடுத்து தேவலோகத்தையும் கைப்பற்ற திட்டமிட்டனர்.
அதை அறிந்ததும், ''அசுர சகோதரர்களிடம் இருந்து தேவலோகத்தைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?'' என ஆலோசனை கேட்டான் இந்திரன். “தேவலோகத்தைக் கைப்பற்றும் முன்பாக அவர்கள் கொல்லப்படுவர்” எனத் தெரிவித்தார் பிரம்மா. அதனைக் கேட்ட இந்திரன் நிம்மதியடைந்தான்.
இதற்கிடையில் அசுர சகோதரர்கள் மணிச்சூர்ணா மலைப் பகுதிகளில் முனிவர்கள் தவம் செய்தால் தண்டிக்கப்படுவர் என எச்சரித்தனர். இதை மீறிய முனிவர்களை சிறையில் அடைத்துத் துன்புறுத்தினர்.
அதிர்ச்சியடைந்த முனிவர்கள் தங்களுக்கு உதவி செய்யுமாறு சப்தரிஷிகளை வேண்டினர். முனிவர்களை விடுதலை செய்வதுடன், காடுகளில் தவம் புரியும் முனிவர்களுக்குத் இடையூறு செய்ய வேண்டாம் என அசுரர்களிடம் சப்தரிஷிகள் வேண்டுகோள் விடுத்தனர்.
“எங்களுக்கு வரம் அளித்த பிரம்மாவின் புதல்வர்கள் என்பதால் உங்களுக்குத் தண்டனை அளிக்கவில்லை. இனி மேல் முனிவர்களுக்காகப் பரிந்து பேசினால் சிறையில் அடைக்கப்படுவீர்கள்” என எச்சரித்து அனுப்பினர்.
அங்கிருந்து திரும்பிய சப்தரிஷிகள் வைகுண்டத்திற்குச் சென்றனர். அசுரர்கள் இருவரையும் அழித்து, முனிவர்களுக்கு உதவும்படி திருமாலை வேண்டினர்.
“பிரம்மா அளித்த வரத்தின்படி, இருவரும் சிவன், பார்வதியால் அழிக்கப்பட வேண்டும். எனவே சிவனிடம் உதவி கேளுங்கள்” என அனுப்பி வைத்தார்.
சப்தரிஷிகள் அனைவரும் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். அசுரர்கள் இருவரையும் விரைவில் அழித்து, பூலோகத்தில் முனிவர்களின் தவம், வேள்விகள் தொடர்ந்து நடத்த உதவுவதாக வாக்குறுதி அளித்தார் சிவன்.
அதைத் தொடர்ந்து கண்டோபா என்னும் பெயரில் சிவனும், மாலசை என்னும் பெயரில் பார்வதியும் பூலோகம் வந்தனர். அவர்களுக்குத் துணையாக கேகடி பிரதானன் எனும் பெயரில் திருமாலும், நந்தீஸ்வரர் வெண் குதிரையாகவும், சிவகணங்களில் ஒருவர் நாயாகவும் வடிவெடுத்து மணிச்சூர்ணா மலைக்கு வந்தனர்.
கண்டோபா, மாலசை இருவரும் வெண் குதிரையின் மீது எழுந்தருளினர். அருகில் நாய் இருந்தது. அவர்களுடன் வந்த கேகடி பிரதானன், அசுரர்கள் இருவரையும் போரிட அழைப்பு விடுத்தார். பூலோகம் முழுவதையும் ஆட்சி செய்யும் தங்களிடம் வெறும் மூவர் மட்டும் வந்து போரிட நிற்பதைக் கண்டு சிரித்தனர்.
மூவரையும் அழித்து வரும்படி வீரர்கள் சிலரை அசுரர்கள் அனுப்பினர். அவர்களை கண்டோபா அழித்தார். இதனால் அசுரர்கள் கோபமடைந்து பெரும்படை ஒன்றை அனுப்பினர். கண்டோபாவும், மாலசையும் சிறிது நேரத்தில் அப்படையை அழித்தனர். தங்கள் படை அழிக்கப்பட்டதை அறிந்த அசுரர்கள் பெரும்படையுடன் அவ்விடத்திற்கு வந்தனர்.
அசுரர்களின் படையை கண்டோபா, மாலசை இருவரும் சேர்ந்து தாக்கினர். அவர்களுடன் வந்த கேகடி பிரதானனும் கடுமையாகப் போரிட்டார். அசுரர்களின் படை எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. கடைசியாக அசுரர்கள் இருவர் மட்டும் மிஞ்சினர்.
மாலசை ஈட்டியைக் கொண்டு மணியின் காலைத் தாக்க நிலை குலைந்த அவன் கீழே விழுந்தான். அவன் காலில் இருந்து ரத்தம் வழிந்தது. அது தரையில் படும் முன்பே அதை நாய் குடித்தது.
அப்போதுதான் பிரம்மா அளித்த வரம் மணியின் நினைவுக்கு வந்தது. கணவன், மனைவியாகத் தங்களுடன் போரிடுவது சிவன், பார்வதி என்பது புரிந்தது. இருவரையும் வணங்கி, “என் அழிவுக்குப் பின் நான் தங்களுடன் சேர்ந்திருக்கும் வரம் தர வேண்டும். பக்தர்கள் என்னையும் வணங்க வேண்டும்” என வேண்டினான். சிவனும் பார்வதியும் அதை ஏற்கவே மகிழ்ச்சியுடன் உயிர் நீத்தான்.
அதன் பிறகு மல்லாவிடம், “உனக்கு ஏதாவது வரம் வேண்டுமா” எனக் கேட்டார் சிவன். “உலகிலுள்ள எல்லா மனிதர்களையும் கொன்று அவர்களின் இறைச்சியைச் சாப்பிட வேண்டும்” என்றான். அதனைக் கேட்ட சிவன் கோபமடைந்தார். “ கீழ்த்தரமான எண்ணம் கொண்ட நீ உயிருடன் இருப்பது நல்லதல்ல” என அவனது தலையைத் துண்டித்தார்.
அசுர சகோதரர்கள் அழிக்கப்பட்டதால் பூலோகத்தினரும், தேவலோகத்தினரும் மகிழ்ச்சியடைந்தனர். மணிச்சூர்னா மலைப்பகுதியில் இருந்தவர்கள் எல்லாம் கண்டோபா, மாலசையை அங்கேயே நிரந்தரமாக எழுந்தருள வேண்டினர். வேண்டுகோளை ஏற்று கண்டோபா, மாலசை வடிவில் சிவனும், பார்வதியும் கோயில் கொண்டனர். அசுரச் சகோதரர்களில் ஒருவனான மணியும் துணைத் தெய்வமாக இங்குள்ளார்.
சப்தரிஷிகள்
படைப்புக் கடவுளான பிரம்மாவின் பிள்ளைகளான அத்திரி, பரத்துவாஜர், ஜமதக்கினி, கவுதமர், காசியபர், வசிஷ்டர், விஸ்வாமித்ரர் ஆகியோர் தவ ஆற்றலால் நான்கு வேதங்களையும், இலக்கியங்களையும் கற்றறிந்தனர். இவர்கள் ஏழு பேரும் சப்த ரிஷிகள் அல்லது ஏழு முனிவர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
மஞ்சள் வழிபாடு
வெள்ளை நிறக் குதிரையில் அல்லது எருதில் அமர்ந்திருக்கும் வீரராக கண்டோபா வழிபடப்படுகிறார். சில இடங்களில் சிவலிங்கமாகவும் காணப்படுகிறார். இப்பகுதி மக்களின் குலதெய்வமாக இருக்கும் கண்டோபாவுக்கு மார்த்தாண்ட பைரவர், மல்லாரி என்றும் பெயருண்டு. தக்காண பூமி எனப்படும் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் 600 க்கும் அதிகமான கண்டோபா கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் பதினொரு கோயில்கள் 'சாக்கிரத்து சேத்திரங்கள்' என்ற முக்கியமானதாக விளங்குகின்றன. இதில் மகாராஷ்டிராவில் ஆறும், கர்நாடகாவில் ஐந்தும் உள்ளன.
மகாராஷ்டிராவில் ஜேஜுரியில் உள்ள கோயில் சிறப்பு மிக்கதாகும். இங்கு மஞ்சள் துாளைத் துாவி சுவாமியை வழிபட்டால் பாவங்கள் நீங்கி செழிப்புடன் வாழும் பாக்கியம் கிடைக்கும்.
-தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925