
குருகுலம் ஒன்றில் தினமும் குருநாதர் கதை சொல்வது வழக்கம்.
பண்ணையார் ஒருவர் மாடத்தில் நின்றபடி காலையில் சூரியனைத் தினமும் காண்பார். ஒருநாள் தெருவில் சென்ற பிச்சைக்காரனைக் கண்டார். வெறுப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே சென்ற போது கால் இடறி விழுந்தார். கோபத்தில் பிச்சைக்காரனைத் தண்டிக்க முடிவு செய்தார்.
'இவனைப் போன்றவர்கள் இருப்பதே நம் ஊருக்கு அவமானம். இவனைக் கொல்லுங்கள்' என பணியாளர்களிடம் உத்தரவிட்டார். அந்த பிச்சைக்காரன் சிரித்தபடி பண்ணையாரின் முன் வந்து நின்றான். 'ஏன் சிரித்தாய்' எனக் கேட்க அதற்கு அவன், 'என்னைப் பார்த்ததால் நீங்கள் கால் இடறி விழுந்தீர்கள். அதே போல நானும் உங்களைப் பார்த்தேன். என் நிலைமை என்ன ஆனது பார்த்தீர்களா...'' என்று சொல்லி மீண்டும் சிரித்தான்.
அதைக் கேட்டு தவறை உணர்ந்த பண்ணையார் தண்டனையை கைவிட்டார்.
மேலும் துணிவு இருப்பவனுக்கு கடலும் கூட முழங்கால் அளவுதான். சாவின் விளம்பில் நின்றாலும் துணிவுடன் செயல்பட்டால் சுதந்திரக் காற்றை சுவாசிக்கலாம். இல்லாவிட்டால் வாழ்வு அதோகதியாகி விடும் என்றார் குருநாதர். இதைக் கேட்ட குழந்தைகளுக்கு தைரியம் அதிகரித்தது.