ADDED : மே 31, 2024 10:49 AM

குகன் என்ற குணக்குன்று
தன்னை விட்டு ராமன் நீங்கியதால் ஏங்கிய குகனுக்கு, திரும்ப வரும்போது சந்திப்பதாக அவன் வாக்களித்தது ஆறுதலாக இருந்தது. ஆனால் விரைவில் கோபப்பட வேண்டியிருக்கும் என குகன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆமாம்... பரதனின் வருகை குகனை கோபத்திற்கு ஆளாக்கியது. ஏற்கனவே ராமன், 'அயோத்தியை பரதன் ஆள்கிறான்' எனச் சொன்னது அவனுக்குள் எரிச்சலை உண்டாக்கியிருந்தது. அப்படி தன் ராமனிடமிருந்து நாட்டை பறித்துக் கொண்ட பரதன், மீண்டும் ஏன் காட்டுக்கு வருகிறான்? ராமன் உயிரோடு இருந்தால் தன் பதவிக்கு ஆபத்து என கருதுகிறானோ? அதனால் அந்த எதிர்ப்பையும் அழித்தால் தான் இடையூறு இல்லாமல் அயோத்தியை ஆளலாம் என நினைக்கிறானோ? ராமனை சித்திரகூடத்துக்கு அனுப்பிவிட்டு தான் இங்கே தங்கியதும் நல்லதாகப் போயிற்று. இங்கேயே பரதனைத் தடுத்து நிறுத்தலாம், இல்லையா? தன் அன்பிற்கினிய தலைவனின் அதிகாரத்தைப் பறித்தவனின் உயிரைப் பறிக்க வேண்டும் என ஆர்ப்பரித்தான். படைகளைத் தயார்படுத்தினான். ராமனை சந்திக்க பரதனை அனுமதிக்க கூடாது எனத் தீர்மானித்தான்.
பரதன் தன் மூன்று தாயார்களுடன், முனிவர்கள் பெரும்படை சூழ வந்து கொண்டிருந்தான். வரும் போதே அண்ணல் ராமன் அப்பகுதிக்கு வந்ததையும், குகன் கங்கையின் அந்தக் கரைக்கு ஓடம் மூலம் கொண்டு சேர்த்ததையும் தெரிந்து கொண்டான். ''ராமன் மீது பக்தி கொண்டிருக்கும் குகன், உன்னையும் சந்திக்க விரும்பலாம்'' என உடன் வந்த அமைச்சர் சுமந்திரன் சொன்ன போது, ''அவனுக்கு அந்த சிரமத்தை கொடுக்கக் கூடாது. அண்ணனின் அன்புக்குப் பாத்திரமான அவனை நாம்தான் முன்னே போய் சந்திக்க வேண்டும்'' என பரபரப்புடன் பதிலளித்தான் பரதன்.
அதன்படி அவர்கள் குகனை நோக்கி வர வர, இங்கே குகன் வியப்பால் தன்வசம் இழந்தான். ஆமாம்... ராமனைப் போலவே பரதன், சத்ருக்னன் இருவரும் மரவுறி தரித்து தவக் கோலத்தில் வருவதையும், உடன் வந்த அனைவரும் சோக முகத்தினராய் காட்சியளிப்பதையும் கண்டு குழம்பினான் குகன். மீண்டும் ராமனை அயோத்திக்கு அழைத்துச் சென்று அரியாசனத்தில் அமர்த்தும் முடிவுடன் பரதனும் மற்றவர்களும் வந்திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டதும் மனம் உருகிப் போனான். பகை உணர்வு அப்படியே கரைந்து ஓடியதை உணர்ந்தான். 'ராமனுடைய தம்பி எப்படி துரோகியாக முடியும்?
அவனது நற்பண்புகளுடன் தானே இவனும் பிறந்திருப்பான் அவனுடன் இத்தனை காலம் ஒன்றாய் இணைந்து வாழ்ந்தவன் தானே பரதன்! இவன் மனதில் வன்மம் தோன்ற வாய்ப்பு இல்லையே. இவனைப் போய் கீழ்த்தரமாக எடை போட்டு விட்டேனே!
ராமன் குறிப்பிட்டது போல அவனது ஐந்தாவது சகோதரன் என்ற அரவணைப்புக்குச் சற்றும் தகுதியில்லாதவன் ஆகி விட்டேனே' என வருந்தினான்.
பரதனும், குகனும் இருவரும் கைகளைக் கூப்பி வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். ராமப்பண்புதான் எப்படி சிநேகிதத்தையும், அன்பையும் வளர்க்கிறது!
''என் அண்ணல் இங்கு தான் தங்கியிருந்தாரா?'' என பரதன் கேட்டான்.
''ஆமாம், அவர் தங்கியதால் பேறு பெற்ற இடத்தை காண்பிக்கிறேன்' என ஆவலுடன் சொன்ன குகன், ஓடோடிச் சென்று ராமன் படுத்து ஓய்வெடுத்த தரையைக் காண்பித்தான்.
பட்டு மஞ்சத்தில் துயின்று களைப்பை நீக்க வேண்டிய ஒரு மன்னன், இப்படி புல் படுக்கையில் படுத்து உடலைக் களைப்பாக்கிக் கொண்டானே என பதறிய பரதன் புரண்டு அழுதான். கண்ணீரால் புல் பரப்பு ஈரமானது.
'இன்னும் உயிர் தரித்திருக்கிறேனே' என அழுத பரதனைப் பார்த்து உருகினான். ''புகழ் கொண்ட பரதா, உன் தாயாரின் சொல் கேட்டு தந்தை தசரதன் அளித்த அரியணையை அலட்சியமாகப் புறந்தள்ளினாயே! தீச்செயலை வெறுத்து ஒதுக்கும் துாயவனாகத் திகழ்கிறாயே! அண்ணனின் பாதமே கதி என அவனைத் தேடி கானகம் வந்திருக்கிறாயே, எத்தகைய பண்பாளன் நீ! உனக்கு நிகராக யாரை சொல்ல முடியும்? ஆயிரம் ராமன்கள் வந்தாலும் உன் ஒருவனுக்கு ஈடாவரோ தெரியவில்லையே அய்யா''
தாய் உரைகொண்டு தாதை
உதவிய தரணிதன்னை
தீவினை என்ன நீத்து சிந்தனை முகத்தில்
தேக்கி போயினை என்றபோழ்து
புகழினோய் தன்மை கண்டால்
ஆயிரம் ராமர் நின்கேழாவரோ தெரியின் அம்மா
-கம்பர்
என்றெல்லாம் பாராட்டி மகிழ்ந்தான்.
தாயார்களை அறிமுகப்படுத்தினான் பரதன். ''இவர் கோசலை. ராமனின் தாயார்; அவர் சுமித்திரை, லட்சுமணனைப் பெற்றவர்''
இருவரின் பாதம் பணிந்து வணங்கினான் குகன். அடுத்து, 'இவள் கைகேயி, இவளுக்குத்தான் நான் பிறந்து பாவியானேன்'' என கடுமையாக சொன்னான் பரதன்.
பதறினான் குகன். ''ஐயனே ராமனின் தம்பியாகிய நீங்கள், பெற்ற தாயாரை இப்படி பேசலாமா?'' எனக் கேட்டான். ராமனின் பெயரைக் கேட்டதும் உடனே அமைதியானான் பரதன்.
பரதன், சத்ருக்னன், தாயார்கள், மக்கள் என அைனவரையும் சுமந்தபடி பெரிய படகுகள் கங்கையின் மறுகரையை அடைந்தன.
அடுத்த சில நாட்களில் ராமன் அயோத்தி திரும்ப விரும்பாததையும், அவனுக்கு பதிலாக அவனது பாதுகை அரசாளட்டும் என்ற பிடிவாதத்துடன் பரதன் அவற்றைப் பெற்று வந்ததையும் கேள்விப்பட்ட குகன், ஆரம்பத்தில் தான் பரதனைத் தவறாக நினைத்ததை எண்ணி வெட்கப்பட்டான்.
பதினான்கு ஆண்டு கழித்து சீதை, ராமர், லட்சுமணனுடன் அயோத்தி திரும்பும் வழியில் சித்திரகூடத்திற்கு வந்தான். அந்தச் செய்தி அறிந்து குகன் ஓடிச் சென்று அவன் பாதம் பணிந்தான். தன்னுடைய முதல் சந்திப்பை நினைத்துப் பார்த்தான். ஆனால் சித்திரகூடத்தில் இருந்து சீதை கடத்தப்பட்டதையும், அனுமன், சுக்ரீவன் நட்பால் அவர்களுடைய படையின் துணையால் அவள் மீட்கப்பட்டதையும், இப்போது அதே மூவரும் அயோத்தி திரும்பும் வழியில் சந்திக்கும் பாக்கியத்தையும் எண்ணி மகிழ்ந்தான். அதே சமயம் இடைப்பட்ட காலத்தில் மூவரும் அடைந்த துன்பங்களை எண்ணி வருந்தவும் செய்தான்.
அவனை ஆரத் தழுவிய ராமன். ''நீ செய்த நன்மைகளை மறப்பேனோ... என் இளவலே'' எனச் சொல்லி மேலும் குகனின் மதிப்புக்கு உரியவனானான்.
அதே போல பட்டாபிஷேகத்துக்கு வந்து தன் இதய தெய்வம் ராமன் பெறும் ஏற்றம் கண்டு மகிழ்ந்தான் குகன். ஆன்றோர், சான்றோர், பல நாட்டு மன்னர்கள், பண்டிதர்கள், ரிஷிகள் நிறைந்த அவையில் தனக்கும் முக்கியத்துவம் கொடுத்து பரிசளித்த ராமனின் பெருந்தன்மை கண்டு சிலிர்த்தான், கண்ணீர் பெருக்கினான். என்ன ஒரு மரியாதை அது! தன் குலம் பார்க்காமல், தன் தொழில் பார்க்காமல், தன்னையும் முதல் வரிசை பிரமுகர்களோடு சமமாக பாவித்து கவுரவித்த அவனது நற்பண்பால் நெகிழ்ந்தான் அவன்.
-தொடரும்
பிரபு சங்கர்
72999 68695