sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

அசுர வதம் - 31

/

அசுர வதம் - 31

அசுர வதம் - 31

அசுர வதம் - 31


ADDED : ஜூன் 07, 2024 10:58 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 10:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முரன் வதம்

நாடீஜங்கன் எனும் அசுரனின் மகனான முரன் என்பவனுக்குத் தேவர்களை விட பல மடங்கு உடல் வலிமை இருந்தது. அதைக் கொண்டு அசுரர்களையெல்லாம் ஒன்று சேர்த்துப் பெரிய படையை உருவாக்கினான். இந்திரனை வென்று தேவலோகத்தைக் கைப்பற்றினான். இந்திரன், வருணன், அக்னி, எமன் போன்றோரை விரட்டியடித்தான். அதன் பின் அவர்கள் செய்து வந்த முக்கியப் பணிகளை எல்லாம் அசுரர்களுக்குப் பகிர்ந்து கொடுத்தான். அந்தப் பணிகளில் அனுபவம் இல்லாத அவர்கள், தங்கள் விருப்பம் போல் செயல்பட்டனர். அதனால், உலகின் இயல்பு மாறத் தொடங்கியது.

மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என அனைத்து உயிரினங்களும் பாதிக்கப்பட்டன. ஆனால் அசுரன் முரனை எதிர்த்துப் போரிட்டுத் தேவலோகத்தை மீட்க எவரும் முன் வரவில்லை. காலம் கடந்து கொண்டேயிருந்தது.

அசுரர்களின் பிடியிலிருந்து எப்படி விடுபடுவது என சிந்தித்த தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர்.

'அசுரன் முரனை அழிக்க திருமாலிடம் சென்று உதவி கேளுங்கள், அவர் உங்களுக்கு உதவுவார்' என அனுப்பி வைத்தார்.

அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். முரனை அழித்து, தேவலோகத்தை மீட்டுத் தருவதாக அவரும் உறுதியளித்தார்.

திருமாலும் அசுரன் முரனும் பலத்துடன் மோதினர். முடிவு எதுவும் ஏற்படாமல் ஆண்டுக் கணக்கில் சண்டை தொடரவே திருமால் களைத்துப் போனார்.

திருமாலுக்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்க வேண்டுமெனத் தோன்றியது. எனவே அவர் அசுரனுக்குத் தெரியாமல் பத்திரிகாசிரம மலைப் பகுதியிலிருந்த ஹேமவதி எனும் குகையின் உள்ளேச் சென்று படுத்துத் தூங்கினார். அசுரன் திருந்துவதற்கு வாய்ப்பாக குகையில் சென்று துாங்குவது போல கண்மூடி இருந்த்தார் என்பர்.

மறைந்து கொண்ட திருமாலைத் தேடிய அசுரன், அருகில் உள்ள குகைக்குள் சென்று பார்த்தான். அங்கு திருமால் துாங்கிக் கொண்டிருந்தார். திருமாலைக் கொல்ல முயற்சித்தான் அசுரன். அப்போது திருமாலின் உடலில் இருந்து அழகிய பெண் தோன்றினாள்.

அவள், திருமாலைக் கொல்ல விடாமல், அசுரன் முரனை எதிர்த்துப் போரிட்டாள். உலகிலேயே அதிகப் பலம் கொண்ட தன்னை, ஒரு பெண் எதிர்ப்பதா? என்கிற கோபத்துடன், அசுரன் தன் கையிலிருந்த வாளால் அவளைக் கொல்ல முயன்றான்.

அப்போது அப்பெண், “ஹூம்” என ஒலி எழுப்பினாள். அந்த ஒலி குகைச்சுவரில் மோதித் திரும்பிய போது, தீப்பிழம்பாக மாறி முரனை நோக்கிச் சென்றது. குகைக்குள் முரனால் எங்கும் ஓட முடியவில்லை, குகையிலிருந்து வெளியேறவும் முடியவில்லை. தீப்பிழம்பு அவனைச் சிறிது நேரத்தில் சாம்பலாக்கிவிட்டு மறைந்தது.

துாக்கத்தில் இருந்து விழித்த திருமால் நடந்ததை அறிந்தார். தன் உடலிலிருந்து தோன்றிய அப்பெண்ணைப் பாராட்டினார். பின்னர் அவளிடம், “உனக்கு என்ன வேண்டும்?” எனக் கேட்டார்.

அதற்கு அவள், “இவ்வுலகில் என் பெயர் நிலைத்து நிற்க தாங்களே, நல்லதொரு வரத்தைத் தந்தருளுங்கள்” என்றாள்.

உடனேத் திருமால், “என்னிடமிருந்து தோற்றம் பெற்ற நீ 'ஏகாதசி' என அழைக்கப்படுவாய். நீ தோற்றம் பெற்ற இந்நாளில் விரதமிருந்து என்னை வழிபடுவோருக்கு அனைத்துச் செல்வங்களையும் தருவதுடன், முடிவில் அவர்களுக்கு வீடுபேறு தரும் வைகுண்டப் பதவியும் தருவேன்” என்று சொன்னார். அதனைக் கேட்ட ஏகாதசி மகிழ்ந்து அவரை வணங்கினாள்.

அசுரன் முரனின் அழிவை அறிந்த தேவர்கள், முனிவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். பூலோகத்தில் மறைந்து வாழ்ந்த தேவர்கள் அனைவரும் அசுரர்களை அழித்துத் தேவலோகத்தை மீட்டனர். இந்திரன், வருணன், அக்னி, எமன் உள்ளிட்ட அனைவரும் தங்களது பணியை மீண்டும் செய்யத் தொடங்கினர். உலகம் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியது.

ஏகாதசி தத்துவம்

ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் என பொருள். உடல் உறுப்புகளான காதின் மூலம் ஒலியும், தோல் மூலம் தொடு உணர்வும், கண் மூலம் காட்சிகளும், நாக்கின் மூலம் சுவையும், மூக்கின் மூலம் நறுமணம் என்னும் ஐந்து உணர்வுகள் உள்ளன. ஐந்து உணர்வுகளைத் தரும் இவ்வுறுப்புக்களை ஞானேந்திரியங்கள் என்பர்.

இதேப் போல வாக்கு, கைகள், கால்கள், உடற்கழிவுகளை வெளியே தள்ளும் உறுப்புகள் (குதம் மற்றும் சிறுநீர்க் குழாய்) மற்றும் பிறப்புறுப்புக்கள் ஆகிய ஐந்தும் செயற்கருவிகளாக இருக்கின்றன. இவற்றைச் கர்மேந்திரியங்கள் என்பர். ஞானேந்திரியங்கள் ஐந்து, கர்மேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆகிய பதினொன்றையும் ஒழுங்குபடுத்தி, திருமாலை நினைத்து வழிபடுவதே ஏகாதசி விரதத்தின் தத்துவம். அன்றைய நாளில் திருமாலை நினைத்து விரதமிருந்தால் வீடுபேறு எனும் முக்தி நிலையை அடையலாம் என்பதையே ஏகாதசி வழிபாடு உணர்த்துகிறது.

25 ஏகாதசிகள்

சித்திரை தொடங்கி பங்குனி முடிய மாதந்தோறும் வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி என இரண்டு வீதம், ஆண்டுக்கு 24 ஏகாதசி நாட்கள் வருகின்றன. இவை முறையே

1. காமதா ஏகாதசி

2. பாப மோசனிகா

3. மோகினி ஏகாதசி

4. வருதினி ஏகாதசி

5. நிர்ஜல ஏகாதசி

6. அபரா ஏகாதசி

7. விஷ்ணு சயன

8. யோகினி ஏகாதசி

9. புத்திரத ஏகாதசி

10. காமிகா ஏகாதசி

11. பரிவர்த்தன ஏகாதசி

12. அஜ ஏகாதசி

13. பாபாங்குசா ஏகாதசி

14. இந்திரா ஏகாதசி

15. பிரபோதின ஏகாதசி

16. ரமா ஏகாதசி

17. வைகுண்ட ஏகாதசி

18. உற்பத்தி ஏகாதசி

19. பீஷ்ம புத்திர ஏகாதசி

20. சபலா ஏகாதசி

21. ஜெய ஏகாதசி

22. ஷட்திலா ஏகாதசி

23. ஆமலகி ஏகாதசி

24. விஜயா ஏகாதசி

சில ஆண்டுகளில் கூடுதலாக ஒரு ஏகாதசி வரும். அதைக் கமலா ஏகாதசி அல்லது பத்ம ஏகாதசி என்பர்.

வைகுண்ட ஏகாதசி

மார்கழி வளர்பிறை 11 ஆம் நாள் வைகுண்ட ஏகாதசியாகும். பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி விழா, பகல் பத்து, ராப்பத்து நிகழ்ச்சியுடன் கொண்டாடப்படும்.

ராப்பத்தின் முதல்நாள் பரமபத வாசல் திறக்கப்படும். கலியுகத்தில் நம்மாழ்வாருக்கு முன்பு, வைகுண்டம் செல்வோர் யாரும் இல்லாததால் அதன் வாசல் மூடப்பட்டிருந்தது. நம்மாழ்வார் முக்தி அடைந்த அன்று அது திறக்கப்பட்டது. அப்போது நம்மாழ்வார், “பெருமாளே... எனக்கு மட்டும் வைகுண்ட வாசல் திறந்தால் போதாது. தங்கள் மீது பக்தி செலுத்தும் அனைவரும் வைகுண்டம் செல்ல வேண்டும்” என வேண்டினார். அதன்பின், 'மார்கழியில் ஏகாதசி விரதம் இருந்து என்னை வழிபடுவோர் வைகுண்டபதவி பெறுவர்' என சுவாமி அருள்புரிந்தார். இதனால் அனைத்துக் கோயில்களிலும் சொர்க்கவாசல் பூஜை நடக்கிறது.

-அடுத்த வாரம் முற்றும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us