ADDED : ஜூன் 07, 2024 10:59 AM

பெருந்தன்மைக்கு ஒரு கோசலை
'கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா...' என்ற திருவேங்கடவன் திருப்பள்ளியெழுச்சிப் பாடலை நாம் கேட்டிருக்கிறோம். ராமன் புகழ் பாடும் ஒவ்வொரு பக்தரும் அவரது தாயான கோசலையை நினைவு கொள்ள வைக்கும் துயில் எழுப்பும் பாடல் இது.
தசரதனின் மனைவியான பட்டத்து ராணி கோசலைக்கு புத்திர பாக்கியம் கிடைக்கவில்லை. ஆகவே கைகேயி இரண்டாவது மனைவியாக இரண்டாவது பட்டத்து ராணியாகப் பொறுப்பேற்றாள். அவளுக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. சுமித்திரை மூன்றாவது மனைவியாக வந்தாள்.
ஆனால் தசரதனின் முன்வினையால் ஏற்பட்ட சாபம்தான் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை என தெரிய வந்தது. இதன்பின் முனிவர் ரிஷ்யசிருங்கர் நடத்திய வேள்வியின் மகிமையால் கிடைத்த அமுதத்தால் மனைவியர் மூவருக்கும் குழந்தைப் பேறு கிட்டியது.
கோசலைக்கு ராமன், கைகேயிக்கு பரதன், சுமித்திரைக்கு லட்சுமணன், சத்ருக்னன் என நான்கு குழந்தைகள் பிறந்தனர். சகோதரர்களில் மூத்தவனான ராமனுடன் லட்சுமணன், பரதனுடன் சத்ருக்னன் என பிணைப்பை உருவாக்கி சகோதரர்களிடையே பாசவலையைப் பின்னினாள் சுமித்திரை.
இயல்பாகவே பாசம், நேசம், அன்பு, கருணை, இரக்கம் என நற்குணங்கள் பொருந்தியவளாக கோசலை விளங்கியதால் ராமனும் அந்த குணங்களால் மேலும் மெருகூட்டும் வகையில் வாழ்வை அமைத்துக் கொண்டான்.
ஆனால் தன்னை விட கைகேயி ராஜ பாரம்பரியத்தில் வளர்ந்தவள், அரச நிர்வாகத்தில் தேர்ந்தவள், தேர் செலுத்தும் வீரம் மிக்கவள் என்ற காரணங்களால் தன் குழந்தை ராமனை அவளுடைய கைகளில் தசரதன் தவழ விட்ட போது, அதற்காகக் கொஞ்சமும் வருத்தமடையவில்லை கோசலை. அதே போல பரதனை வளர்க்கும் பொறுப்பை தசரதன் தனக்கு அளித்த போதும் பேருவகை கொண்டாள்.
எல்லாம் சுமுகமாகத்தான் போய்க் கொண்டிருந்தன. விஸ்வாமித்திரர், தான் இயற்றும் யாகங்களை நிர்மூலமாக்கும் அரக்கர்களிடமிருந்து காக்க ராமனின் துணையை நாடினார். 'அவன் பாலகன், அவனால் அரக்கரை எதிர்க்க முடியாது' என தசரதன் மன்றாடியும், தன் மகனின் பராக்கிரமத்தை அறிந்திருந்த கோசலை, எந்தப் பதட்டமும் படாமல் கண்ணசைவால் சம்மதம் தெரிவித்தாள். அதைப் புரிந்து கொண்டு, ராமனால் பெரும் புகழ் கிடைக்கும் என்ற பெருமையில் தசரதனும் அனுமதித்தான். இப்படி தாயின் சம்மதத்தால் தன்னுடன் வந்த ராமன், அரக்கர்களான சுபாகு, மாரீசன் இருவரையும் வீழ்த்தித் தன் யாகத்தைக் காத்ததன் நன்றியாக, 'கௌசல்யா சுப்ரஜா ராமா பூர்வா சந்த்யா ப்ரபர்ததே' என மென்மையாகப் பாடி துயில் கொண்டிருந்த ராமனை எழுப்பினார் விஸ்வாமித்திரர்.
இன்ன வயதில் இந்த மாதிரி மகன் சிறப்பு பெறுவான் என ஊகித்து அந்தத் திறமையை அவனது உடல் வளர்ச்சியோடே கண்டுகொண்ட உத்தம தாய் கோசலை. ராமனுக்கு நான்கு வயதாகும்போது பட்டத்து யானையின் அம்பாரியில் அவனை தசரதன் அமர்த்தி ஊர்வலம் கண்டபோது அவனுடைய கம்பீரத்தைக் கண்டு மகிழ்ந்தவள் அவள்.
மிதிலையில் சிவதனுசை முறித்து சீதையைக் கரம்பிடித்த ராமன், தம்பதி சமேதராக முதலில் ஆசி பெற்றது கைகேயிடம்தான். பெற்றத் தாயான தனக்கு முக்கியத்துவம் ராமன் தரவில்லையே என கோபப்படவில்லை. பெருந்தன்மையுடன் அந்தக் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தாள்.
இழப்பு என்ற அதிர்ச்சியை தாங்கிக் கொள்ளும் பக்குவம் கொண்ட கோசலை, ஒரு தாயாக, பிரிவு என்ற சோகத்தை ஏற்க முடியாதவளாக இருந்தாள். ஆமாம், மறுநாள் ராமனுக்குப் பட்டாபிஷேகம் என்ற தகவல் பரவியிருக்க, தன்னைப் பார்க்க வந்த அந்த மகனை மகிழ்ச்சியுடன் வரவேற்றாள் கோசலை. மனசுக்குள் மட்டும் கொஞ்சம் சந்தேகம். ராமனின் முகம் அன்றலர்ந்த தாமரையாகத்தான் இருந்தது. ஆனால் அந்த அரசகுமாரனோடு எப்போதுமே உடன் வரும் வெண்கொற்றக் குடை, சாமரத்தைப் பிடிக்கும் பணியாளரும் இன்றி தனியனாக வருவதை சந்தேகமுடன் பார்த்தாள். ''என்னாயிற்று, ராமா? பட்டாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடு நடக்கிறதா அல்லது இடையூறு ஏற்பட்டு விட்டதா?'' எனக் கேட்டாள்.
ஆனால் அவனோ தெளிவான குரலில், ''ஏற்பாட்டில் எந்தத் தொய்வும் இல்லை . ஆனால் பட்டமேற்கப் போவது நானல்ல, என் இளவல் பரதன்'' என பதிலளித்தான்.
ராமனின் தாயல்லவா! மகனுக்கு ஏற்பட்ட சோகம் அவளைத் தாக்கவே இல்லை. ''சரி, அதனால் என்ன? சொந்த மகன் இல்லாவிட்டால் வளர்த்த மகன் அரியாசனத்தை அலங்கரிக்கப் போகிறான். ராஜாங்க சம்பிரதாயத்தில் மூத்தவன் முடிசூட வேண்டும் என்ற முறைக்கு மாற்றாக இது இருக்கிறது. ஆனாலும் பதவியை ஏற்க பரதன் தகுதியானவன்தான். ஆமாம், பரதன் உன்னை விடவும் மும்மடங்கு நிறை குணங்கள் கொண்டவன்'' என தன் எண்ணத்தை வெளியிட்டாள் கோசலை.
மெல்ல சிரித்த ராமன், ''இன்னொன்றும் இருக்கிறது, அம்மா'' என ஆரம்பித்தான். அவன் முகத்தை ஆவலுடன் நோக்கினாள் கோசலை. ''நான் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டு முனிவர்களுடன் தங்கி பிறகு அயோத்தி மீள வேண்டும் என்றும் தந்தையார் அறிவித்தார்''
அதைக் கேட்டதும்தான் அனலில் இட்டப் புழுவாகத் துடித்தாள். ''மகனே, இது உண்மையா? ராமன் நாடாள்வான் என மன்னர் கூறியதெல்லாம் பொய்யா? உன்னைக் காடேகச் சொல்வதன் காரணம் என்ன? அந்தளவுக்கு என்ன பாதிப்பை உண்டாக்கினாய்? எறும்புக்கும் தீங்கு எண்ணாத நீ பெற்ற தந்தையின் மனம் நோகடிக்க செய்வாயோ?''என அழுதாள்.
ராமன் அன்னையை தழுவிக் கொண்டு, ''அம்மா... அமைதி கொள்ளுங்கள். தங்களைப் பிரிவது எனக்கும் வருத்தம்தான். ஆனால் தந்தையின் கட்டளையை நிறைவேற்றும் கடமை எனக்கு இருக்கிறதே. தந்தையின் சொல்லை நான் தட்டவும் இயலுமோ?''என்று மென்மையாகக் கேட்டான்.
''நான் செய்த தர்மம் எல்லாம் என்னை விட்டு நீங்கிச் சென்றனவோ? அவற்றுக்கு பதிலாக என் உயிர் வருந்தி அழியும்படியாக எனக்குள் புகுந்த கெடுவினைதான் எது? நான் வணங்கும் தெய்வங்களே... சொல்லுங்கள்'' என புலம்பினாள் கோசலை. ஈன்ற கன்றைத் தன்னிடமிருந்து வலுக்கட்டாயமாகப் பிரித்துச் செல்லும் கொடுமை போல உள்ளம் கலங்கி கண்ணீர் பெருக்கினாள்.
அறம் எனக்கு இலையோ எனும் ஆவி நைந்து
இறவு அடுத்தது என் தெய்வதங்காள் எனும்
பிற உரைப்பது என் கன்று பிரிந்துழிக்
கறவை ஒப்பக் கரைந்து கலங்கினாள்
- கம்பர்
ராமன் அவளை ஆசுவாசப்படுத்தினான். ''வெறும் பதினான்கே ஆண்டுகள்தான். பரதனின் ஆளுமையால் இந்த அயோத்தி அற்புதங்களைக் காணும். தொலைவில் இருந்தே இந்த கோலாகலத்தை நானும் கேட்டு மகிழ்வேன். நீங்கள் அவனுக்கு பக்கபலமாக விளங்கி நல்லாட்சிக்கு வழிவகுக்க வேண்டும்'' எனக் கேட்டுக் கொண்டான்.
''ராமா... நீ இல்லாத அயோத்தி என்னைப் பொறுத்தவரை வெறுமையான இடம். நானும் உடன் வருகிறேன்'' எனக் கெஞ்சினாள் கோசலை.
''நிர்ப்பந்தம் காரணமாக என்னைப் பிரியும் தந்தையாரின் மனம் கலங்காதபடி உடனிருந்து ஆற்றுப்படுத்த வேண்டியது உங்கள் கடமை அல்லவா? அதிலிருந்து நீங்கள் பிறழலாமா?'' என தாயை சமாதானப்படுத்தினான் ராமன்.
நெடுமூச்சு விட்டபடி அயர்ந்தாள் கோசலை.
-அடுத்த வாரம் முற்றும்
பிரபு சங்கர்
72999 68695