ADDED : ஜூன் 14, 2024 12:58 PM

வாழ்வின் குறிக்கோள்
கந்தன் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்ததும் ராமசாமி தாத்தாவைப் பார்க்க ஓடினான். அவர் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். அவரிடம், ''இன்று எங்க ஆசிரியர் 'உன் லட்சியம் என்ன' எனக் கேட்டதற்கு, ' டாக்டராக ஆவேன்' என்றேன்.
தாத்தா புன்முறுவல் செய்தார். அதோடு கந்தன் விடாமல், 'லட்சியம் பற்றி பகவத் கீதை, திருக்குறளில் ஏதாவது உள்ளதா?' எனக் கேட்டான். ஆச்சரியப்பட்ட தாத்தா, 'உனக்குள் இருக்கும் கடவுள் தான் இப்படி பேச வைக்கிறார்' என்றார்.
உன்னிடம் கேட்டது போல யாரிடமாவது கேட்டால், 'நான் நன்றாக வாழ வேண்டும்' என்றோ, 'தன் குடும்பத்தினர் நன்றாக வாழ வேண்டும்' என்றோ தான் பதில் சொல்வார்கள். காரணம் மனஉறுதியும், பொதுநலனில் அக்கறையும் இல்லாதவர்களாகத்தான் பலர் இருக்கிறார்கள். உடல் வேறு ஆத்மா வேறு என்ற தெளிவும் அவர்களிடம் இருப்பதில்லை. 'கடவுள் யார்; அவர் எப்படிப்பட்டவர் என அறிவதுதான் வாழ்வின் குறிக்கோள். இதை பகவத் கீதை 2ம் அத்தியாயத்தின் 41வது ஸ்லோகம் விளக்குகிறது.
வ்யவஸாயாத்மிகா பு ³த் ³தி 4ரேகேஹ குருநந்த ³ன ।
ப ³ஹுஶாகா ² ஹ்யனந்தாஶ்ச பு ³த் ³த 4யோ(அ) வ்யவஸாயினாம் ॥
“கடவுளை அறிய முயற்சிப்பவர்கள் தங்களின் குறிக்கோளில் உறுதியாக இருப்பார்கள். இவர்களின் லட்சியம் ஒன்றே. குருவம்சத்தின் செல்வனே! அர்ஜூனனே! உறுதியற்றவர்களின் அறிவோ பல கிளைகளைக் கொண்டது” என்கிறது.
இதை திருவள்ளுவரும் 337வது திருக்குறளில்
ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல
தாங்கள் எதற்காக வாழ்கிறோம் என அறிவு இல்லாதவர்கள் ஆராய மாட்டார்கள். அவர்களின் மனதில் கோடிக் கணக்கில் தேடல்கள் இருக்கும் என்கிறது.
'வாழ்வின் லட்சியம் எது என புரிகிறதா' எனக் கேட்டார் தாத்தா.
'புரியுது தாத்தா. கடவுளை அறிவதே வாழ்வின் லட்சியம் என கீதையும், குறளும் சொல்கிறது' என்றான் கந்தன்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554