ADDED : ஜூன் 14, 2024 12:59 PM

தேடலும் தெளிவும்
என்முன் அமர்ந்திருந்தவள் சத்யா. வயது நாற்பது. ஓரளவு வசதியான குடும்பம். கணவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். என்ன பிரச்னைக்காக என்னைத் தேடி வந்திருக்கிறாள்?
“ஒரு பிரச்னையும் இல்ல சார். உங்க எழுத்த நான் ரசிச்சு படிக்கறவ. உங்க ரசிகைகளா சேர்ந்து வாசகர் வட்டம் ஆரம்பிச்சிருக்கோம்”
வாசகர் வட்டமா? எனக்கா? நான் வானத்தில் பறக்க ஆரம்பித்தேன்.
“உங்களுக்கு பாராட்டு விழா நடத்தி லட்ச ரூபாய் பரிசு கொடுக்க தீர்மானம் பண்ணியிருக்கோம். மாலை மரியாதைய ஏத்துக்கிட்டு, பரிச வாங்கிக்கிட்டு அரை மணி நேரம் நீங்க பேசணும் சார். அடுத்த மாசம் இரண்டாவது ஞாயிறன்று கூட்டத்த வச்சிக்கலாமா?” சம்மதித்தேன்.
ஐந்து நாள் கழித்து சத்யா மீண்டும் அழைத்தாள்.
“அந்தக் கூட்டம் சம்பந்தமா உங்ககிட்ட கொஞ்சம் மனம் விட்டுப் பேசணும். இன்னிக்கு சாயங்காலம் அந்த ஓட்டலுக்கு வர முடியுமா?” சென்றேன்.
சத்யா மட்டும்தான் இருந்தாள். அவள் ஆடையில், முகத்தில் இருந்த ஒப்பனையில் அதீதக் கவர்ச்சி தெரிந்தது. என்ன நடக்கப் போகிறது?
“நேரடியா விஷயத்துக்கு வந்துடறேன். வாசகர் வட்டம், பாராட்டு விழான்னு சொன்னதெல்லாம் பொய். மன்னிச்சிருங்க. நான் இப்போ ஒரு சாமியாரோட சிஷ்யையா இருக்கேன்”
சத்யா சொன்னது மிக பிரபலமான ஒரு சாமியாரின் பெயர்.
“எங்க குருஜியைப் பத்தி நீங்க எழுதணும். பச்சைப்புடவைக்காரியப் பத்தி எழுதற மாதிரி உருக்கமா எழுதணும். அதப் படிச்சிட்டு குருஜிய பாக்கக் கூட்டம் கூடணும். நீங்க எத்தனை லட்சம் கேட்டாலும் கிடைக்கும். அதுக்கு முன்னோடியாத்தான் இந்த விழா நடக்கப்போகுது. எங்க குருஜியோட ஆசிரமத்துல...'' கொதித்து எழுந்தேன்.
“என்ன விளையாடறீங்களா? என்னக் காசுக்காக எழுதறவன்னு நினச்சீங்களா? என் மொத்த எழுத்தும் பச்சைப்புடவைக்காரிக்கு மட்டும்தான் சொந்தம். நான் அவளுடைய கொத்தடிமை. கண்ட கண்ட ஆட்களப் புகழ்ந்து என்னால எழுத முடியாது. ஆமா நீங்க படிச்சவங்கதானே! நல்ல குடும்பத்துல பொறந்தவங்கதானே? ஒழுக்கமா வாழறவங்கதானே? அப்புறம் ஏன் அந்தச் சாமியாரக் கட்டி அழுகுறீங்க? அந்தாளு பெண் பித்துப் பிடிச்சவன்னு பேசிக்கறாங்க. அப்புறம் ஏன் நீங்க அந்த ஆசிரமத்துல இருக்கீங்க? கூட்டிக் கொடுக்கற வேலை பாக்கறீங்களா?”
சத்யாவின் அழுகையை உதாசீனப்படுத்தி விட்டு ஓட்டலை விட்டு வெளியேறினேன்.
என் காருக்கு முன்னால் தள்ளுவண்டியில் ஒரு பழக்கடை இருந்தது.
அந்தப் பெண்ணிடம் சீறினேன்.
“ஏம்மா வழிய மறிச்சி கடை போட்டிருக்கீங்க?”
“போகும் வழி தப்பாக இருந்தால் வழியை மறிப்பேன்”
பச்சைப்புடவைக்காரியின் கால்களில் விழுந்தேன்.
“ சத்யாவிடம் ஏன் அப்படி சீறினாய்?”
“அந்தப் போலிச் சாமியாரைப் பற்றி புகழ்ந்து எழுத வேண்டுமாம்.
அப்படிச் செய்தால் லட்சம் லட்சமாகக் கொட்டிக் கொடுப்பார்களாம். தாயே, உங்களைத் தவிர வேறு யாருக்கும் என் எழுத்தைக் கொடுக்க மாட்டேன்.”
“அது சரி, அந்தப் பெண்ணை ஏன் அழ வைத்தாய்?”
“அவள் தப்பாகக் கேட்டாள். பதிலடி கொடுத்தேன். இதில் என்ன தப்பு?”
“இப்படியெல்லாம் சொன்னால் உனக்குப் புரியாது. உன்னைத் தவிக்கவிட்டால்தான் சத்யாவின் நிலையை புரிந்துகொள்வாய்”
நான் பதிலளிப்பதற்குள் தாய் மறைந்தாள்.
ஒருநாள் மதியம் மூன்று மணிக்கு தஞ்சாவூர் கிளம்பிக் கொண்டிருந்தேன். இரவு ஏழு மணிக்கு அங்கே ஒரு கூட்டத்தில் பேச வேண்டும். இப்போதே கிளம்பினால்தான் சரியாக இருக்கும். ஆனால் கடைசி நிமிடத்தில் கார்ச் சாவியைக் காணவில்லை. வீடு முழுவதும் தேடிவிட்டேன். சமையலறையில், படுக்கையறையில், வரவேற்பறையில், கார்ச் சாவியை மாட்டும் இடத்தில், சட்டை பாக்கெட்டில்... எங்கும் இல்லை. நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. கடைசியில் வேறு வழியின்றி உள்ளே பெட்டியில் இருந்த காரின் மாற்றுச்சாவியை எடுக்க வேண்டியதாயிற்று.
நான் அந்தக் கூட்டத்திற்குச் சென்ற போது மணி ஏழேகால்.
“சொன்னா சொன்ன நேரத்துக்கு வருவீங்க, என்னாச்சு சார் இன்னிக்கு?” - என்னை அழைத்தவர்கள் செல்லமாக சாடினர். அன்று பேச்சும் சரியாக அமையவில்லை.
மறுநாள் காலை ஊர் திரும்பியவுடன் முதல் காரியமாக தொலைத்த கார் சாவியைத் தேடினேன். கிடைக்கவில்லை. அந்தச் சாவிக் கொத்தில் என் அலுவலகச் சாவியும் வேறு பல சாவிகளும் இருந்தன.
கடைசியில் எதேச்சையாக முன் அறையில் இருந்த சோபாவின் இடுக்கில் துளாவியபோது சாவி இருந்தது. மனம் துள்ளியது. நன்றி சொல்ல கோயிலுக்கு ஓடினேன். செருப்பு போடும் இடத்தில் இருந்த பெண் சிரித்தாள்.
“சாவி கிடைத்தது முக்கியமில்லை. புத்தி வந்ததா?”
“தாயே”
“நேற்றும் இன்றும் சாவியை எப்படி யெல்லாம் தேடினாய்? எத்தனை இடங்களில் தேடினாய்? சாவி கிடைக்கவில்லையே! ஏன்? சாவி இல்லாத இடத்தில் தேடினால் எப்படி கிடைக்கும்? இன்று எதேச்சையாக உன் கைகள் சாவி இருக்கும் இடத்தில் துளாவின. சாவியைக் கண்டுபிடித்து விட்டாய்”
“எதேச்சையாக இல்லை, தாயே! நான் தவித்தது போதும் என நீங்கள் நினைத்தீர்கள், சாவி கிடைத்தது.
“புரிந்ததா? நேற்று ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் தப்பான இடங்களில் சாவியைத் தேடிய போது உன்னை யாராவது திட்டினால் எப்படி இருந்திருக்கும். அந்தச் சமயத்தில் உன் மனைவி, “ஏங்க இருக்கற இடத்த விட்டு இல்லாத இடத்துல தேடிக்கிட்டிருக்கீங்க?” எனக் கேட்டால் உனக்கு கொலை வெறி வரும் அல்லவா? “சாவி இருக்கற இடம் தெரிஞ்சா நான் ஏன் தேடப்போறேன்?” என சொல்வாய் அல்லவா?”
“அதற்கும்...”
“சத்யாவும் ஒரு உக்கிரமான தேடலில் ஈடுபட்டிருக்கிறாள். அவளுக்கு கணவனிடம் இருந்து அன்பு கிடைக்கவில்லை. மன வளர்ச்சி குன்றிய மகன். பணக்கஷ்டம் வேறு. அதனால்தான் போலிச் சாமியாரிடத்தில் மனநிறைவைத் தேடிக் கொண்டிருக்கிறாள். தப்பான இடத்தில்தான் தேடுகிறாள் - நேற்று நீ தேடியதுபோல். அந்தச் சமயத்தில் அவள் மீது சுடுசொற்களை வீசியது தவறு''
“அதற்காக அவள் சொன்னதை ஏற்கச் சொல்கிறீர்களா?”
“நான் அப்படிச் சொல்லவில்லை. அந்தப் போலி சாமியாரைப் பார்த்தால் அவன் முகத்தில் காறி உமிழ்ந்திடு; அந்தளவுக்கு துணிச்சல் இருந்தால். சத்யா அப்பாவி. பாவம் வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறாள். அவளிடம் கடுமையாகப் பேசினால் சாமியாரிடம் போய் அழுவாள். அவன் அவளைத் தேற்றுவான். அவன் மீதுள்ள நம்பிக்கை அதிகமாகி தப்பான வழியில் இன்னும் வேகமாகச் சொல்வாள்”
“அதற்காக போலிச் சாமியாரைப் புகழ்ந்து எழுத வேண்டுமா?”
“வேண்டாம். அவள் சொன்னதை புன்னகையுடன் மறுத்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் ஒரு கட்டத்தில் சாமியார் ஏதாவது தவறு செய்யும் போது உன்னைத் தேடி வருவாள். அப்போது அவளுக்கு அன்பின் வழியைக் காட்டியிருக்கலாம் அல்லவா?”
“இப்போது என்ன செய்வது தாயே?”
“போலி கவுரவம் பார்க்காமல் சத்யாவிடம் மன்னிப்பு கேள். உன் கொள்கை என்னவென்று சொல். அன்று ஏதோ ஆத்திரத்தில் வார்த்தைகளைக் கொட்டி காயப்படுத்தி விட்டேன் என்று சொல். உரிய காலத்தில் அவள் உன்னைத் தேடி வருவாள்”
தாயை வணங்கி எழுந்த போது அவள் மறைந்து விட்டிருந்தாள்.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com