
உன்மத்தாசுரன் வதம்
பெரிய சிவபக்தனாக இருந்தான் கஞ்சன் என்னும் அசுரன். தனக்குத் தான் எல்லாம் தெரியும் என ஆணவத்துடன் மற்றவர்களை அலட்சியப்படுத்தினான். அவனது அறிவற்ற செயல்பாட்டால் மக்கள் உன்மத்தன் (கிறுக்கன்) என அழைத்தனர்.
அவனுக்கு சிவபெருமானை நேரடியாகப் பார்க்கும் எண்ணம் ஏற்பட்டது. அதற்கான வழிமுறை ஏதும் தெரியாததால் முனிவர்களைச் சந்தித்து, “சிவபெருமானை நேரடியாகப் பார்க்க என்ன வழி?” எனக் கேட்டான்.
“சிவபெருமானை வேண்டித் தவம் செய். அவர் மனம் இரங்கினால் பூமிக்கு வருவார். அப்போது நீ நேரடியாக பார்க்கலாம்” என்றனர். தன்னுடைய தவத்திற்கு ஏற்ற இடம் தேடி அலைந்த அசுரன், திருவலத்துக்கு வடகிழக்கில் இயற்கை எழில் சூழ்ந்த மலையைத் தேர்வு செய்தான். தியானத்தில் ஆழ்ந்தான்.
ஆயிரம் ஆண்டுக்கும் மேலாகத் தவமிருந்தும் சிவபெருமான் காட்சி தரவில்லை. அந்த மலை 'கஞ்சனகிரி' என அசுரனின் பெயரால் அழைக்கப்பட்டது. தான் செய்த தவத்திற்கு பலன் கிடைக்காததால் கோபமடைந்த அவன், பித்துப் பிடித்தவனாக அலைந்தான். சிவபெருமானை யாரும் வழிபடக் கூடாது என எச்சரித்தான். மீறி பூஜை செய்பவர்களைத் தாக்கினான்.
அசுரனுக்குப் பயந்து சிவனடியார்கள் கோயிலுக்குச் செல்வதை நிறுத்தினர்.
சிவனடியார் ஒருவர் அசுரனுக்குத் தெரியாமல் திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலுக்குச் சென்று பூஜை செய்தார்.
ஒருமுறை சிவனடியார் கஞ்சனகிரி மலையில் மலர்களைப் பறித்துக் கொண்டு பூஜைக்காக தண்ணீர் எடுக்கச் சென்றார். அவரை நீரை எடுக்க விடாமல் தடுத்ததுடன் அவர் கையில் இருந்த எட்டு மலர்களை பிடுங்கி வீசினான்.
அச்சமடைந்த சிவனடியார், 'சிவாயநம' என வேண்டினார். அவரது வேண்டுதல் சிவபெருமானைச் சென்றடைந்தது.
அவர் நந்திதேவரிடம், “அசுரனின் மூடத்தனத்தை ஒடுக்கி அழித்து, கோயில்களில் தொடர்ந்து பூஜை நடந்திட ஏற்பாடு செய்” என்று அறிவுறுத்தினார். சிவபெருமானின் அறிவுரையை ஏற்ற நந்திதேவன்,
கஞ்சனகிரி மலைப்பகுதிக்கு வந்து அசுரனுடன் போரிட்டார். முடிவில் அசுரனைக் கொன்று அவனது உடலை எட்டுத் துண்டுகளாக வெட்டி வீசினார். அவனது உடலின் எட்டு பாகங்களும் அருகிலுள்ள எட்டு இடங்களில் விழுந்தன. கஞ்சனகிரி மலை முழுதும் ரத்தத் துளிகள் சிதறின.
அப்போது அசுரனுக்கு காட்சியளித்த சிவபெருமான், “என் மீது பக்தி இருந்தாலும் உன் அகந்தையும், அறிவற்ற செயல்களும் தோல்விக்கு வழிவகுத்தன. அதுவே அழிவுக்கு காரணமாகி விட்டது.
நீ தவம் செய்த ஆயிரத்தெட்டு ஆண்டுகளுக்குப் பலனாக, நந்திதேவனால் கொல்லப்பட்ட உன் உடலிலிருந்து வெளியேறிய ரத்தத் துளிகள் ஆயிரத்தெட்டு இடங்களில் விழுந்தன. அங்கெல்லாம் சிவலிங்கமாக தோன்றுவேன்.
நந்திதேவனால் வீசி எறியப்பட்ட உன் உடலின் எட்டு பாகங்கள் விழுந்த இடங்களில் எட்டு கோயில்கள் அமையும். அங்கு நடக்கும் வழிபாட்டால் நீயும் மக்களின் நினைவில் நிலைப்பாய்'' என வரம் அளித்து விட்டு முக்தி கொடுத்தார்.
மூடத்தனமாக செயல்பட்டாலும் அசுரனின் பக்தி முக்தியைப் பெற்றுத் தந்தது.
எட்டு ஊர்கள்
அசுரன் கஞ்சனைக் கொன்ற நந்திதேவன், அவனது உடலை எட்டுப் பாகமாக வெட்டி வீசினார்.
அவனது தலை விழுந்த இடம் சீகராஜ புரம், இதயம் விழுந்த இடம் லாலாபேட், வலது கால் விழுந்த இடம் வடகால், இடது கால் விழுந்த இடம் தென்கால், மணிக்கட்டு விழுந்த இடம் மணியம்பட்டு, ஈரக்குலை விழுந்த இடம் அவரக்கரை, மார்பு விழுந்த இடம் மாவேரி, இடுப்பு விழுந்த இடம் குகையநல்லுார் என அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் தற்போது திருவலத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவுக்குள் உள்ளன. இம்மலைப்பகுதியில் அசுரனின் ரத்தத் துளிகள் விழுந்த 1008 இடங்களிலும் சிறியதும் பெரியதுமாக லிங்கங்கள் உள்ளன.
திரும்பிய நந்தி
திருவலம் வில்வநாதீஸ்வரர் கோயிலின் கொடிமரத்தின் பின்புறம் உள்ள நந்தி மேற்கு நோக்கிச் சிவபெருமானைப் பார்க்காமல், கிழக்கு நோக்கியபடி உள்ளது. இதற்குப் பின்புறம் உள்ள அதிகார நந்தி மட்டும் சன்னதியை நோக்கி உள்ளது.
அர்த்த மண்டபத்தில் உள்ள நந்தியும், திருவலம் மவுனசுவாமிகள் கட்டுவித்த சுதை நந்தியும் கிழக்கு நோக்கியபடி உள்ளன. இப்படி இங்குள்ள நந்திகள் வெளியே பார்த்தபடி இருக்க காரணம் என்ன தெரியுமா... கொடியவர் யாரும் கோயிலுக்குள் நுழையாமல் தடுக்க எச்சரிக்கையுடன் நந்திகள் கண்காணிக்கின்றன.
மணிப்பாறை
காஞ்சனகிரி மலைப்பகுதியில் உள்ள ஒரு பாறைக்கு மணிப்பாறை என்று பெயர். நந்தியால் கொல்லப்பட்ட அசுரனின் கழுத்துப் பகுதி விழுந்த இடமே மணிப்பாறை. இப்பாறையை தட்டும் போது மணியோசை கேட்பதாலும் இப்பெயர் பெற்றது. முற்காலத்தில் நோயாளிகளை இப்பாறை மீது படுக்க வைத்து அந்த பாறையைத் தட்டி சத்தத்தை எழுப்புவர். பாறையில் இருந்து வரும் அதிர்வலைகள் நோய் தீர்க்கும் என நம்பினர்.
-முற்றும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925
இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.