
திருவிடைமருதுாரில் காஞ்சி மஹாபெரியவர் முகாமிட்டிருந்த போது, வேத பண்டிதர்கள் சிலர், ''பெரியவா... இரண்டு நாள் எங்கள் குடியிருப்பில் தங்க வேண்டும்'' என வேண்டினர்.
அதன்படி அவர்களின் குடியிருப்பின் அருகிலுள்ள சத்திரத்தில் சுவாமிகளும் வந்தார். சந்திரமவுலீஸ்வரர் பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. தெரு எங்கும் தோரணங்கள், வாழைமரங்கள் கட்டப்பட்டன. வேத மந்திரங்கள் ஓதினர். பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்றனர்.
முதல் நாளன்று சந்திர மவுலீஸ்வரர் பூஜை நடத்தி பிரசாதம் வழங்கினார் மஹாபெரியவர். இரண்டாம் நாள் வித்வான் ராஜரத்தினம் பிள்ளை காலை முதல் மதியம் வரை நாதஸ்வரம் இசைத்தார். பூஜை முடிந்ததும் பிரசாதம் வழங்கினார் மஹாபெரியவர். அப்போது அணுக்கத் தொண்டர் ஒருவர், 'வாத்யக்காராளை மங்களம் (நிறைவு இசை) வாசிக்கச் சொல்லலாமா?' எனக் கேட்டார்.
'நான் இப்பதான் கேட்க ஆரம்பிச்சேன். பிரசாதம் கொடுத்து முடிச்சதும் மங்களம் வாசிக்கட்டும்' என பதிலளித்ததோடு 'மேனேஜரிடம் ஒரு நல்ல ஸாதரா (சால்வை) வாங்கி வை. வித்வானுக்குப் போர்த்தணும்' என்றார்.
இசையை சுவாமிகள் கேட்பதை அறிந்து உற்சாகமானார் வித்வான். நெரூர் சதாசிவ பிரம்மேந்திராளின் கீர்த்தனைகளை முத்தாய்ப்பாக வாசித்தார்.
மதியம் ஒரு மணி ஆனது. 'மங்களம் வாசித்து முடிச்சதும் என்னிடம் வரச் சொல்' என்றார் மஹாபெரியவர். அதற்குள் தொண்டரிடம் சால்வையை விரித்துக் காட்டுமாறு ஜாடை காட்டினார். அவரும் காட்ட, 'இது வேண்டாம்... போன மாசம் உடையார்பாளையம் ஜமீன்தார் கும்பகோணத்தில் கனமான ஒரு ஸாதராவை சமர்ப்பித்தார். அதைக் கொண்டு வா' என்றார்.
வித்வான் எப்பேர்ப்பட்ட பாக்கியம் செய்திருக்கிறார் பாருங்கள்.
மங்கள இசை முடிந்ததும் அவருக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. வித்வானும் விழுந்து வணங்கிய போது, 'கடைசியா வாசிச்ச பிரம்மேந்திராள் கீர்த்தனை, கோனேரி ராஜபுரம் வைத்தியநாத அய்யரிடம் வாய்ப்பாடா கத்துண்டது தானே?' எனக் கேள்வி கேட்டாரே பார்க்கணும்! அப்படியே ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார் வித்வான். 'எத்தனையோ ஆண்டுக்கு முன் நான் கற்றதை நேரில் பார்த்தது போலச் சொல்கிறாரே மஹாபெரியவர்'' என பிரமித்தார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* மதத்தை மதிப்பவருக்கு ஓட்டளியுங்கள்.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com