ADDED : ஜூன் 21, 2024 12:58 PM

தர்மத்தை காப்பாற்று
ஒருநாள் மாலையில் பெருமாள் கோயிலுக்கு போய் விட்டு வந்தான் கந்தன். வழியில் ராமசாமி தாத்தாவை சந்தித்ததும் மகிழ்ச்சியடைந்தான். அவருக்கு துளசி, கல்கண்டு பிரசாதம் கொடுத்து விட்டு, ''பகவத் கீதையிலும், திருக்குறளிலும் ஒரே மாதிரி கருத்துக்கள் இருப்பதாக சில விஷயங்களைச் சொன்னீர்கள்.
பாடப் புத்தகத்தில் திருக்குறளின் சில அதிகாரங்களை படிச்சிருக்கோம். ஆனால் கிருஷ்ணர் சொன்னது பகவத்கீதை என தெரியுமே தவிர எதற்காக அவர் இதை உபதேசம் செய்தார் என எனக்குத் தெரியாது. அதைச் சொல்லுங்களேன்'' என்றான் கந்தன்.
''மகாபாரதம் என்பது மாபெரும் இதிகாசம். அதில் கீதையை கிருஷ்ணர் உபதேசம் செய்தார். அது ஏன் என்பதை இப்போது சொல்கிறேன். பாண்டவர்கள் (ஐவர்), கவுரவர்கள் (நுாறு) என சகோதரர்கள் இருந்தனர். அதில் பாண்டவர்கள் நல்லவர்கள். கவுரவர்கள் கெட்டவர்கள். இரண்டு பேருக்கும் நாட்டை ஆள்வதில் சண்டை ஏற்பட்டது. பாண்டவரில் ஒருவனான அர்ஜுனனுக்கு பகவான் கிருஷ்ணர் தேரோட்டியாக பணிபுரிந்தார்.
சண்டை ஆரம்பிக்கும் முன்பாக அர்ஜுனன், 'இருவரது படைகளுக்கும் நடுவில் தேரை நிறுத்து கிருஷ்ணா' என்றான். கிருஷ்ணரும் தேரைக் கொண்டு போய் நிறுத்தினார். இருபுறமும் பார்த்ததும், 'பீஷ்மர் என்னுடைய தாத்தா, துரோணாச்சாரியார் என்னுடைய குரு, இங்குள்ள அனைவரும் என்னுடைய சொந்தக்காரர்கள். இவர்களை எதிர்த்து சண்டையிட விருப்பமில்லை'' என கையில் இருந்த வில்லைக் கீழே போட்டான் அர்ஜூனன். முதலில் அவனுக்கு, 'ஆத்மாவுக்கும், உடலுக்கும் உள்ள உறவு' பற்றி கிருஷ்ணர் உபதேசம் செய்தார். அதில் பகவத் கீதையின் இரண்டாம் அத்தியாயம் 31ம் ஸ்லோகமாக,
ஸ்வத4ர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி|த4ர்ம்யாத்³தி4 யுத்³தா4ச்ச்²ரேயோ5ந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்³யதே ||2-31||
சுதர்மத்தை எண்ணி நீ நடுங்காதே. தர்மத்தை நிலைநாட்ட அறப்போரில் ஈடுபடுவதை விடச் சிறந்தது வேறில்லை.
இதே கருத்தை திருவள்ளுவர் 550ம் குறளில்
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
கொடியவர்களுக்கு மன்னர்கள் மரண தண்டனை தருவர். இச்செயல் பயிரைக் காப்பாற்றக் களைகளை எடுப்பதற்கு நிகராகும். நாட்டு மக்களை காப்பதற்காக எதிரிகளை அழிப்பவனே நல்ல மன்னன். இதனால் தான் பகவத் கீதையையும், திருக்குறளையும் ஒப்பிட்டு உனக்குச் செல்கிறேன் உனக்கு புரிகிறதா'' எனக் கேட்டார். புரிந்தது என்றான் கந்தன். உங்களுக்கும் புரிகிறது தானே...
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554