ADDED : ஜூன் 27, 2024 12:27 PM

கவனமாக செயல்படு
ஒருநாள் ராமசாமி தாத்தாவிடம் ஓடி வந்த கந்தன், ''என் வகுப்பில் முருகன்னு ஒருவன் இருக்கான். அவனோட அப்பா... பேங்க்ல அதிகாரியா இருக்கார். நல்லா வேலை செஞ்சதுக்காக பரிசெல்லாம் கூட வாங்கியிருக்கார். ஆனா பாருங்க... வங்கியில பணத்தை திருடிட்டாருன்னு இப்ப ஜெயில இருக்காரு... இதுக்கு கிருஷ்ணரும் திருவள்ளுவரும் எதாவது சொல்லி இருக்காரா தாத்தா'' எனக் கேட்டான் கந்தன்.
உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்கள் ஏதாவது ஒரு சமயத்தில் இது போல தாழ்ந்த செயல்களைச் செய்தால் உலகமே அவர்களைப் பழிக்கும் என பகவத்கீதையின் 2ம் அத்தியாயத்தின் 34ம் ஸ்லோகத்தில் பகவான் கிருஷ்ணர் சொல்கிறார்.
அகீர்திம் சாபி பூ4தாநி கத²யிஷ்யந்தி தே5வ்யயாம்|ஸம்பா4விதஸ்ய சாகீர்திர்மரணாத³ திரிச்யதே ||2-34||
புகழ் பெற்ற ஒருவன் அடையும் அவப்பெயர் மரணத்தை விடக் கொடுமையானது. உலகமே அவனை வசை பாடும். அதை எளிதில் மாற்ற முடியாது. இதையே திருவள்ளுவரும் 965வது குறளில் குறிப்பிடுகிறார்.
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.
மலை போல் உயர்ந்த நிலையிலுள்ள ஒருவர், இழிவான செயலை சிறிதளவு செய்தாலும் தாழ்ந்த நிலையை அடைவர். 'இப்ப புரிஞ்சுதா கந்தா எப்பவுமே நாம செய்யும் செயலில் கவனமா இருக்கணும் இல்லைன்னா நம்மளை எல்லாரும் தப்பா பேசுவாங்க. சரி ஹோம் ஒர்க் செய்யணுமே... போயிட்டு வா நாளை சந்திக்கலாம்'' என்றார் தாத்தா.
-தொடரும்எல்.ராதிகா
97894 50554