sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆண்டாளும் அற்புதங்களும் - 9

/

ஆண்டாளும் அற்புதங்களும் - 9

ஆண்டாளும் அற்புதங்களும் - 9

ஆண்டாளும் அற்புதங்களும் - 9


ADDED : ஜன 31, 2023 10:54 AM

Google News

ADDED : ஜன 31, 2023 10:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பாவையில் மழை சார்ந்த அறிவியல்

அறிவியலை நம் அன்றாட வாழ்வோடு தொடர்புபடுத்துபவர்கள் தான் இன்றைக்கு தேவை. அறிவியல் ஆசிரியர்கள் கூட தினசரி வாழ்வியலோடு தொடர்புபடுத்தி கற்பித்தால் எளிதில் புரியும்.

மழை என்பது உலகில் மனிதன் வாழத் தேவையான அடிப்படை ஆதாரமான நீரை தருகிறது. இந்த மழை எப்படி பொழிகிறது? என்ற உண்மையை 'வாட்டர் சைக்கிள்' என்ற சொல்லைக் கொண்டு சொல்கிறார்கள். இந்த வாட்டர் சைக்கிள் எனும் அறிவியல் ஆவணத்தை முதன்முதலில் 1570ல் பிரண்ட்ஸ் அறிவியலாளர் 'பெர்னார்ட் பிலிசி' தெரிவித்தார். அதாவது 450 ஆண்டுகளுக்கு முன்பே மழை பற்றிய சரியான வரையறை அறிவியல் பூர்வமாக கிடைத்தது.

ஆனால் 1200 வருடங்களுக்கு முன் ஆண்டாள் தன் பாசுரத்தில் மழை சார்ந்த அறிவியல் உண்மையை பதிவு செய்துள்ளாள்.

ஆழி மழைக்கண்ணா ஒன்றுநீ கைகரவேல்

ஆழிஉள் புக்கு முகந்துகொடு ஆர்த்துஏறி'

எனத் தொடங்கும் நான்காவது பாசுரத்தில்

தான் இந்த அமர்க்களம்.

ஆண்டின் 365 நாட்களில் 30 முதல் 90 நாட்களுக்குள் பெய்யும் மழையை நம்பி தான் வாழ்கிறோம். அவ்வாறு பெய்யும் மழை நீரை முன்னோர் ஏரி, குளம், கண்மாய்களில் தேக்கி ஆண்டு முழுவதும் பயன்படுத்தினர். ஆனால் இன்றோ, சில மணி நேரம் பெய்யும் மழைக்கே ஊரே வெள்ளக் காடாக மாறுவதைக் கண்டு திகைக்கிறோம்.

திருப்பாவை முழுவதும் மழையை போற்றி, மழை வர வேண்டும் என்ற குறிப்பு பல இடங்களில் இடம் பெற்றுள்ளன. ஆண்டாளின் பார்வை என்பது அறிவியல் பார்வைக்கு பொருந்தும் நிலையிலேயே காணப்படுகிறது.

ஆண்டாள் கூறும் வான் சிறப்பு மிக அற்புதமானது. ஆழிமழையை கண்ணனாக உருவகிக்கிறார் பாருங்களேன். அவளுக்கு பார்க்கும் இடமெல்லாம் கண்ணனாகவே தோன்றியிருக்கிறது. கடலில் இருந்து மூழ்கி எழுந்த மேகமானது கண்ணனின் உருவம் போல கருத்து இருக்கிறது என்கிறார். புலவர்கள், கண்ணனின் நிறத்தை கார்மேகத்தின் நிறத்திற்கு ஒப்பிட்டு பாடுவதுண்டு. சரி, கடல் நீருக்கு வருவோம். கடல்நீரை குடித்த மேகம் கருமேகமானது என்ற அறிவியலையும் பேசுகிறது. அத்துடன் அழகுக்கு அழகு சேர்க்கும் தோள் வலிமை உடையவன் பத்மநாபன் என்பதோடு சும்மா இருந்தாளா? இடி, மின்னலை எங்கு பிடிக்கிறாள் பாருங்கள். மின்னலாக மின்னி இதய ஓசையாக மத்தளம் கொட்டி சங்கு முழங்கி இந்த பூமி எங்கும் மங்கள நீராட்டுமாறு அழைப்பு விடும் கற்பனை இருக்கிறதே ஆஹா வாயால் சொல்வதே எத்தனை மகிழ்ச்சியைத் தருகிறது! அவன் கரத்தில் சக்கரம் போல மின்னி பளபளத்து பிரகாசிப்பதாக மின்னலைப் பேசுகிறாள். வலம்புரி சங்கு போல அதிர்ந்து வருமாறு வான் மழையை அழைக்கிறாள்! ' பகைவரை தயங்காமல் வெற்றி கொள்ளும் விதமாக சரசரவென பொழிந்து உலகமெல்லாம் வாழ செய்வாய் என அனைத்தையும் இழுத்து கட்டுகிறாள். ஆஹா! எத்தனை சிறப்பான சொற்கோர்வை. இந்தச் சிறு வயதில் ஆண்டாள் இத்தனை உலக ஞானம் பெற்றிருக்கிறாளே. இது அதிசயம் தானே!

மழை எவ்வாறு பொழிகிறது என பள்ளியில் படித்ததனால் நாமெல்லாம் தெரிந்து கொண்டோம். இந்த அறிவியல் செய்தியை கண்ணனுடன் உருவகப்படுத்தி பாசுரம் ஆக்கியிருப்பது கூடுதல் சிறப்பு. அறிவியலுடன் கற்பனையை கலந்து இணைக்கும் இந்த இடத்தில் எங்கும் பிசிறு தட்டாமல் இயல்பாக கோவிந்தனின் குணத்துடன் அதை பொருத்துவது வியப்பூட்டுவதாக அமைகிறது.

நம் உடலில் 90% நீர் தான் உள்ளது. இந்த பூமி தோன்றிய 5 பில்லியன் ஆண்டுகளில் முதல் ஒரு பில்லியன் ஆண்டுகளில் வருடத்தில் பாதிநாள் மழை தான் பெய்ததாம். மழை பெய்து, பெய்து பூமி குளிர்ந்து போய், கடல் உருவாகி அக்கடலில் முதல் உயிரி தோன்றியிருக்கிறது. மழை இல்லை எனில் உலகில் உயிரே தோன்றி இருக்க வாய்ப்பில்லை. எனவேதான் இங்கு ஆழிமழைக்கண்ணா! சரி, இத்தோடு நின்றாளா ஆண்டாள்? இதற்கே நம் திறந்த வாய் மூடவில்லை. இன்னும் சற்று அதிகம் திறக்க வைக்கிறாள் பாருங்கள்.

'ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து' என்று ஒரு உவமை கொடுக்கிறாள். ஊழிக்கு முன் கருமை இருந்ததா? ஏன் இருக்க வேண்டும்? எல்லோரும் கடவுளை ஜோதி, சூரிய கோடி பிரகாசன் என்றெல்லாம் சொல்லும் போது ஆண்டாளோ ஊழிக்கு முன்பிருந்த கருமை என்கிறாள். இது என்ன விசித்திரம்? இந்த இடத்தில் அறிவியல் கிணறை இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்ப்போம். இந்த பிரபஞ்சத்திற்கு ஆதாரமாக ஒரு கருங்குழி (BLACK HOLE) இருப்பதாக அறிவியல் சொல்கிறது. நம் பால் வெளி அண்டத்தின் அச்சு இப்படி ஒரு கருங்குழி தான் என்றும் சொல்கிறார்கள். இதன் அடர்த்தியோ மகா பெரியது. மெலிதான ஒளிக்கீற்று கூட இதைத் தாண்டி போக முடியாத வண்ணம் கருங்குழி விழுங்கி விடுகிறதாம். இந்த உண்மைகளை ஆய்ந்த பேராசிரியர் சந்திரசேகருக்கு நோபல் பரிசு கிடைத்தது. இந்த கருங்குழி பற்றி ஆண்டாளுக்கு தெரிந்திருக்கும் என எண்ணுகின்றனர். யோசித்துப் பாருங்கள்! நோபல் பரிசு பெற்ற எத்தனை நபர்களை நாம் நினைவு வைத்திருக்கிறோம்? ஓரிருவரைத் தவிர யாரும் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் ஆண்டாளை, அவள் அறிவுத்திறனை நம் நெஞ்சில் வைத்துப் போற்றுகிறோம்.

ஆண்டாள் மட்டும் தான் மழையைப் பற்றி பாடினாளா? வேறு யாரும் இப்படி மூச்சு கூட விடவில்லையா என்றால், ஏன் இல்லை? ஆண்டாளைப் போலவே உருத்திரங்கண்ணனார் என்னும் புலவர் பட்டினப்பாலையில் மழையை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வணிகத்துக்கு உருவகப்படுத்தி உள்ளார். இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை மிக்க இதில்

'வான் முகந்த நீர் மலைப் பொழியவும்'

மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும்

மாரி பெய்யும் பருவம் போல' எனத் தொடங்கும் பாடலில் கடலில் இருந்து மேகம் முகர்ந்து சென்ற நீர் மழை பொழிவது போல நீரிலிருந்து பொருள்கள் நிலத்தில் ஏற்றப்பட்டன. மழையில் பொழிந்த நீர் கடலுக்கு வந்து பரவுவது போல நிலத்திலிருந்து பொருள்கள் நீரில் உள்ள கப்பலில் பரப்பப்பட்டன. அந்த பண்டங்கள் அறிய முடியாதபடி பற்பலவாக குவிந்து கொண்டிருந்தன என்று சொல்கிறது. இங்கு ஒரு செயல் மற்றொரு செயலுடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது. இதுவும் சிறப்பு தான். ஆண்டாள் அச்செயலை கண்ணனின் பராக்கிரமங்களோடு ஒப்பிடுகிறாள். அதனால் பாசுரச் சுவை இன்னும் உயர்வு பெறுகிறது.

ஆண்டாள் இப்படி எல்லாம் மழையை அரங்கனுடன் பொருத்தும் போது, அந்த மழையை நாமும் அவளுடன் சேர்ந்து ரசிக்க தொடங்குகிறோம். மழையை மட்டுமல்ல அருள்மழை பொழியும் அந்த கண்ணனையும் சேர்த்து தான். ரசிப்பு திறனுடன் அவளின் அறிவுத்திறனையும் எண்ணி வியக்கிறோம்.

தமிழர்கள் வாழ்வில் காலையில் எழுந்து சாணம் தெளித்து இரவில் துாங்கும் வரை செய்யும் ஒவ்வொரு செயலிலும் அறிவியல் இருக்கிறது. உண்ணும் உணவு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையிலும் அறிவியலைக் கண்டவர்கள் தமிழர்கள். எப்படி இந்த விஞ்ஞானத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள்? நம் தமிழ் குடிமண் அன்று தொட்டே இயற்கையோடு மிக நெருங்கி வாழ்ந்த சமூகம். ஆதிகாலம் தொட்டு இயற்கையின் சிறப்பறிந்து இயற்கையை பாதுகாத்து மனதார வணங்கி வாழ்ந்தவர்கள். இயற்கையோடு மனிதர்கள் கொண்ட நெருங்கிய உறவால், உலகில் கொட்டிக் கிடந்த உண்மைத்தன்மையை, இயல்புகளை, ஞானத்தை அவர்களால் எளிதில் உணர்ந்து கொள்ள முடிந்தது. உதாரணமாக பறவைகளின் ஒலியால் அதிகாலை நேரத்தை துல்லியமாக கணக்கிட்டனர். 3:00 மணிக்கு கூவினால் அது கழிச்சான் குயில், 4:00 மணிக்கு கூவுவது குயில், 4:30 மணிக்கு கூவுவது சேவல், 5:00 மணிக்கு கரைவது காகம், 5:30 மணியென்றால் கவுதாரி, 6:00 மணிக்குக் கூவுவது மீன்கொத்திப் பறவை என அத்தனை நெறிமுறைகளையும் அன்றைய இயற்கை வாழ்வு அள்ளித் தந்தது. இது எல்லாமே ஒரு கணக்கு தானே! இன்று உலகம் என்னவோ சுருங்கி நம் கைக்குள் வந்து விட்டது. ஆனால் நாம் முரணாய் இயற்கையை விட்டு விலகி வெகுதுாரம் வந்துவிட்டோம்.

இயற்கையோடு இணைந்து பெருவாழ்வு வாழ்ந்த அறிவுப்பெண் கோதை அளப்பரிய அறிவியல் ஞானத்துடன் திகழ்ந்தது இவ்வாறெல்லாமுமாகத் தான் இருக்கும். அற்புதங்களுடன் தொடர்ந்து பயணிப்போம்… வாருங்கள்!.

-தொடரும்

பவித்ரா நந்தகுமார்

82204 78043

arninpavi@gmail.com






      Dinamalar
      Follow us