
துாமாசுரன் வதம்
விகுதி எனும் மன்னன் தேவலோகத்தின் இந்திர பதவியைக் கைப்பற்றி விட வேண்டுமென ஆசைப்பட்டான். அதற்காக நுாறு அசுவமேத யாகத்தை நடத்த முடிவு செய்து முதல் யாகத்தைத் தொடங்கினான். இதைக் கேள்விப்பட்ட இந்திரன் யாகத்தைச் செய்ய விடாமல் தடுக்கத் தன்னுடைய படையினரை அனுப்பினான்.
பூமிக்கு வந்த தேவலோகப் படையினர், மன்னன் விகுதியிடம் தோல்வியடைந்து தேவலோகம் திரும்பினர். ஆனாலும் இந்திரன் யாகங்களைத் தடுக்கப் பலவழிகளில் முயற்சி செய்து தோல்வியடைந்தான். ஆனால் விடாமுயற்சியுடன் தொண்ணுாற்றொன்பது யாகங்களை முடித்தான் மன்னன் விகுதி.
இந்திர பதவி போய் விடுமே என கவலையடைந்த இந்திரன், யாகத்தைத் தடுக்கத் தானே புறப்பட முடிவெடுத்தான். சிவஜன்மன் என்னும் வேதியனாக மாறுவேடமிட்டு யாகத்தில் பங்கேற்ற அவன், தனக்கு கூலியாக மன்னனின் மனைவியைத் தர வேண்டினான். அனைத்து யாகத்திலும் தன்னுடன் இருந்த மனைவி, நுாறாவது யாகத்தில் இல்லாமல் போனால் அது பயனற்றதாகி விடும் என்பதால் கூலியாக வேறு ஏதாவது ஒன்றைத் தருவதாகச் சொன்னான் மன்னன் விகுதி.
வேதியன் உருவில் இருந்த இந்திரன் கோபம் அடைந்தான். தான் விரும்பியதைத் தராமல் செய்யும் இந்த வேள்வி இத்துடன் நிற்கட்டும். அடுத்தப் பிறவியில் அசுரனாகப் பிறக்கட்டும் என்று சாபமிட்டு அங்கிருந்து வெளியேறினான். தோல்வியடைந்ததை எண்ணியபடியே மன்னன் விகுதி மரணமடைந்தான்.
அதனைத் தொடர்ந்து அடுத்த பிறவியில், விந்திய தேசத்தில் மகிபாதினி நகரத்தில் அசுரனாகப் பிறந்தான். அந்த பிறவியில் சிவபக்தனாக இருந்தான். தான் நினைக்கும் நேரத்தில் தன்னிடமிருந்து நச்சுப்புகை உருவாகிட வேண்டுமென்ற வரத்தைச் சிவபெருமானிடம் பெற்றான்.
அதன் பிறகு மகிபாதினி நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு தனக்கென ஒரு அரசை அமைத்து ஆட்சி செய்யத் தொடங்கினான். சிவபெருமானிடம் புகை உருவாக்கும் வரம் பெற்ற அவனைத் துாமாசுரன் (துாமம் என்பதற்கு புகை என்பது பொருள்) என்றே அழைத்தனர்.
இந்நிலையில் ஒருநாள் அவனைக் கண்ட பிருகு முனிவர், ''முற்பிறவியில் அவன் செய்த நுாறு வேள்விகளை பற்றி எடுத்துச் சொன்னதோடு இந்திரன் அவனுக்குக் கொடுத்த சாபத்தைப் பற்றியும் சொன்னார். அதனைக் கேட்ட பின்பு, அவனுக்கு இந்திரன் மட்டுமின்றி தேவர்கள், முனிவர்கள் என அனைவர் மீதும் கோபம் ஏற்பட்டது. அவனுக்குள்ளிருந்த அசுர குணங்கள் வெளிப்படத் தொடங்கின.
துாமாசுரன் அண்டை நாடுகளுக்குச் சென்று சிவபெருமானிடம் கேட்டுப் பெற்ற வரத்தைப் பயன்படுத்தி நச்சுப்புகையை வெளியேற்றி மக்களைத் துன்புறுத்தினான். அங்கிருந்த பலர் மூச்சுத்திணறல் அடைந்தோடு சிலர் உயிரை இழந்தனர். அதனைக் கண்டு மகிழ்ந்தான். அதன் பிறகு காட்டிற்குள் சென்று நச்சுப்புகையை வெளியேற்றி அங்கே தவத்தில் ஈடுபட்ட முனிவர்களை துன்பப்படுத்தினான்.
அசுரனால் பாதிப்படைந்த முனிவர்களும், மக்களும் சிவபெருமானிடம் தங்களைக் காப்பாற்றும்படி வேண்டினர். அப்போது அவர், “மகிபாதினி நாட்டிற்குப் பக்கத்து நாடான மதிவதனி நாட்டு அரசன் மாதவன் - சுமுதை தம்பதியருக்கு விஷ்ணுவின் அம்சமான கணபதி பிறக்கும் வரை பொறுத்திருங்கள்” என்றார்.
மதிவதனி நாட்டு மன்னனான மாதவன் - சுமுதை தம்பதியர் குழந்தை இல்லாமல் வருந்தினர். குழந்தை வரம் வேண்டி சிவபெருமான், விஷ்ணு, பிரம்மாவை வழிபட்டனர். அதன் பயனாக சுமுதை கருவுற்றாள். இதையறிந்த துாமாசுரன் தன் படைத்தலைவனான வித்துருமனிடம் கருவுற்றிருக்கும் சுமுதை, மாதவன் தம்பதியை கொல்ல வித்துருமனை அனுப்பி வைத்தான். இருவரையும் காட்டிற்கு கடத்திச் சென்றாலும் கருவுற்ற பெண்ணைக் கொல்ல வித்துருமனுக்கு மனம் இல்லாததால் அவர்களை அங்கேயே விட்டு விட்டான். இதை அறிந்த துாமாசுரன் கோபம் கொண்டான். தம்பதிகளை கொல்லப் புறப்பட்டான்.
அதற்குள் சுமுதை ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். நம்மோடு குழந்தையும் கஷ்டப்படுகிறதே என பெற்றோர் ஒருபுறம் வருந்தினாலும் அதன் பிஞ்சு முகத்தைக் கண்டதும் மறுபுறம் மகிழ்ச்சியும் பிறந்தது.
துாமாசுரன் காட்டிற்குச் சென்று அவர்களைக் கொல்ல நச்சுப்புகையை வெளியேற்றினான். சுமுதையின் மடியிலிருந்த குழந்தை புகையை உள்வாங்கியது. தன் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டிய அசுரன், நச்சுப்புகையை வேகமாக வெளியேற்றியும் குழந்தை கலங்கவில்லை. இறுதியில் பலம் இழந்த அசுரன் அமர்ந்தான். அப்போது குழந்தை தான் உள் வாங்கிய புகையை வெளியேற்ற துாமாசுரன் மூச்சு திணறி உயிர் விட்டான். சாபத்தால் அசுரனாக இருந்தாலும் முற்பிறவியில் செய்த யாகங்களின் பலனாக நற்கதி அடைந்தான்.
நச்சுப்புகை அனைத்தையும் வெளியேற்றி குழந்தை சிரித்தது. அதைக் கண்ட மாதவன், சுமுதை தம்பதியர் மகிழ்ந்தனர். அங்கு வந்த முனிவர்களும், மக்களும் குழந்தையாகத் தோன்றிய கணபதியை வாழ்த்தி வழிபட்டனர்.
அப்போது அந்தக் குழந்தை தன் உருவத்தை மாற்றி கணபதியாகக் காட்சியளித்தது. நச்சுப்புகை கொண்டு பலரையும் துன்புறுத்திய துாமாசுரனைக் கொன்று உலகைக் காப்பாற்றிய கணபதியை 'துாமகேது' என போற்றினர். துாமகேது கணபதியின் அருளால் நாடு திரும்பிய மாதவன், சுமுதை தம்பதியருக்கு முகுந்தன் என்னும் மகன் பிறந்தான். அவர்களின் நல்லாட்சி நாட்டில் தொடர்ந்தது.
துாமகேது
துாமாசுரன் என்னும் அசுரனை அழித்த துாமகேது என்னும் பெயர் கொண்ட விநாயகரை வழிபடுவோருக்கு அறியாமல் செய்த பாவங்கள், தீவினைகள் மறையும்.
'துாமம்' என்றால் ராகுவையும், 'கேது' என்றால் ஞானகாரகன் கேதுவையும் குறிக்கும். இந்த இருவருக்குமான வழிபாட்டுக் கடவுளாகத் துாமகேது விநாயகர் இருக்கிறார் என்றும், ராகு, கேது தோஷத்தால் திருமணம் தடைபடுபவர்கள் இவரை வழிபட்டால் தோஷம் தீரும்.
துாமகேது வால் நட்சத்திரம்
துாமகேது எனும் வால் நட்சத்திரம் தோன்றினால் நாட்டிற்கும், நாட்டை ஆள்பவருக்கும் ஆபத்து. குருேக்ஷத்திர போருக்கு முன்பாக துாமகேது
வால் நட்சத்திரம் தோன்றியது.
-தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925