sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 9

/

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 9

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 9

ராமாயணத்தில் அறியாத பக்கங்கள் - 9


ADDED : அக் 15, 2023 09:17 AM

Google News

ADDED : அக் 15, 2023 09:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வீணன் விராதன்

திருமால் அம்சமாக ராமபிரான் அவதரித்ததால் அவரிடம் அகல்யை, அரக்கர்கள் என பலரும் சாப விமோசனம் பெற நல்ல வாய்ப்பு கிடைத்தது.

இந்த வரிசையில் வரும் அரக்கன் ஒருவனே விராதன். இவனை பின்னால் நிகழப் போகும் 'சீதை அபகரிப்பு' சம்பவத்துக்கு ஒத்திகை நடத்தியவன் என்றே சொல்லலாம்.

யவன் - சதப்ரதை தம்பதியின் மகன் விராதன். ஆரம்பத்தில் ஒழுக்க சீலனாகத் திகழ்ந்தவன். கடும் தவம் இயற்றி பிரம்மனை மகிழ்வித்தவன். அதனாலேயே தேவருலகத்தில் வீணை இசைக் கலைஞனான 'தும்புரு'வாகவும் திகழ்ந்தவன். ஆனால் அதே தேவருலகில் நடனப் பெண்மணிகள் மீது காமம் கொண்டு ஒழுக்கம் தவறியவன். அதனால் குபேரனின் சாபம் பெற்று கிலிஞ்சன் என்ற அரக்கனின் மகனாகப் பிறந்தவன்.

முனித் தம்பதியரான அத்திரி,- அனசூயை இருவரின் அருளாசியைப் பெற்றுக்கொண்டு ராமன், சீதை, லட்சுமணன் மூவரும் தண்டகவனம் நோக்கி நடைப் பயணம் மேற்கொண்டார்கள். வனத்துக்குள் புகுந்த அவர்களை விராதன் ரூபத்தில் அராஜகம் எதிர்கொண்டது. மிக நெடிய மற்றும் கொடிய உருவினனான அவன் நடக்கும்போது கானகத்தின் அந்தப் பகுதியே அதிர்ந்தது. அவன் ஏந்தியிருந்த சூலத்தில் தன்னுடைய அடுத்த உணவிற்காக யானைகளையும், சிங்கங்களையும், யாளிகளையும் கோத்து வைத்திருந்தான். அவனுடைய கண்கள் தீப்பிழம்பை உமிழ்ந்தன. எதிர்ப்படும் எல்லோரும், எல்லாமும் தனக்குத் துச்சம் என்ற அகம்பாவம் அவன் முகத்தில் தெரிந்தது.

அதுவரை கானகத்தின் அந்தப் பகுதிக்குள் நுழைந்த எல்லா மனிதர்களையும் உணவாக்கிக் கொண்டிருந்த விராதன், இப்போது இம்மூவரையும் பார்த்ததும், வித்தியாசமான சுவை கொண்ட விருந்து என்றே அவர்கள் மீது வேட்கை கொண்டான். 'யார் நீங்கள்? நில்லுங்கள். என்னை மீறி உங்களால் செல்ல முடியாது. ஏனென்றால் எனக்கு இரையாக வேண்டியவர்கள் நீங்கள். இதுதான் இந்தக் காட்டின் நீதி'' என கத்தினான். அவர்களில் சீதை பேரழகியாகத் திகழவே முதலில் அவளைப் பற்றிக் கொண்டான்.

தன் கைகள், கால்களை உதறியபடி அன்னப் பறவையைப் போலத் துடித்தாள் சீதை. உடனே ராம லட்சுமணர் இருவரும் அவனை நோக்கி, 'நில் பதரே, உருவத்தால் பருத்திருந்தால், உன்னை வெல்ல முடியாது என்று நினைத்தாயோ? அற்பனே,

வீணாக எங்கள் அம்புக்கு இறந்துப் போகாதே'' என்று கர்ஜித்தனர்.

அவனோ அட்டகாசமாகச் சிரித்தான். 'புல்லர்களே, நான் பிரம்ம வரம் பெற்றவன். அழிவில்லாதவன். எந்த உதவியும் இன்றி, உலகமெங்கும் சுற்றிவரும் ஆற்றல் கொண்டவன். இந்தப் பெண்ணை என்னிடம் விட்டுவிட்டு ஓடி விடுங்கள்...' என்று அவன் முடிக்கு முன்னரே ராமன் தன் வில்லின் நாணை மீட்டிப் பேரோசை எழுப்பினான். அதைக் கண்டு கோபித்த விராதன், தன் கைப்பிடியில் இருந்த சீதையை இறக்கி விட்டு, தன்னிடம் இருந்த சூலங்களில் ஒன்றை எடுத்து ராமனை நோக்கி வீச அதைத் தன் அம்பினால் துாளாக்கினான். இந்த எதிர்ப்பை எதிர்பாராத விராதன், மரங்களையும், மலைகளையும் பிடுங்கி சகோதரர்கள் மீது எறிந்தான். அவற்றையும் அனாயசமாகத் தகர்த்த அவர்கள், தங்கள் பாணங்களால் அவனை நிலைகுலைய வைத்தனர். முள்ளம் பன்றியைப் போலத் தோற்றம் அளிக்கும் வகையில் அவன் மீது எண்ணற்ற கணைகளைத் தொடுத்தார்கள். ஆனால் அவனோ ஒரு உதறு உதறி அத்தனை அம்புகளையும் கீழே உதிர்த்தான். அதே சமயம் ரத்தம் பொங்கிப் பெருக உடல் தளர்ந்து தள்ளாடினான்.

தொடர்ந்து ராமனும், லட்சுமணனும் போரிட்டாலும், அரக்கனுடைய இரு கைகளையும் வெட்டி வீழ்த்தினால் அவன் மொத்தமாகச் சாய்வான் என்று ஊகித்தனர். ஆகவே அவன் மீது ஏறி, தோள்கள் மீது நின்று கொண்டார்கள். இதற்குள் சுதாரித்துக் கொண்ட விராதன், 'ஆஹா, ஒன்று கேட்க, இரண்டாக எனக்கு உங்களை அர்ப்பணித்துக் கொண்டீர்களா? இதுவும் எனக்கு சந்தோஷம்தான். உங்கள் இருவரையும் புசித்துவிட்டு, பிறகு என் விருப்ப உணவான இந்தப் பெண்ணையும் நான் ஏற்கிறேன்,' என்று கூக்குரல் இட்டான்.

சீதை பதறினாள். இப்படி ஒரு அரக்கனை அவள் இதற்கு முன் சந்தித்ததேயில்லை. அதோடு அவனுடைய பிரமாண்ட உருவத்தை ஒப்பிடும்போது ராம- லட்சுமணர் சிறுவர் போன்று காட்சியளித்ததால், அவன் அவ்விருவரையும் உண்டு விடுவானோ என்று பதறிப் போனாள். 'அவர்கள் இருவரையும் விட்டுவிடு. நான் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். நீ முதலில் என்னைத்தான் புசிக்கத் தேர்ந்தெடுத்தாய். ஆகவே என்னையே நீ ஏற்க வேண்டும், அவர்களை விட்டுவிட வேண்டும்'' என்று மன்றாடினாள்.

'பின்னை ஏதும் உதவும் துணை பெறாள் உரை

பெறாள்

மின்னை ஏய் இடை நுடங்கிட விரைந்து

தொடர்வாள்

அன்னையே அனைய அன்பின் அறவோர்கள்

தமை விட்டு

என்னையே நுகர்தி என்றனள் எழுந்து

விழுவாள்

- கம்பர்.

அதைக் கேட்டு ஆர்ப்பரித்தான் விராதன். 'எனக்கு வகைவகையான உணவுகள் வேண்டும்தான். அப்படி முதலில் இவர்களை முடித்து விட்டு, பிறகு உன்னை இரையாக ஏற்கிறேன்'' என்றான்.

அதைக் கேட்டு மயங்கி விழுந்தாள் சீதை. அதைப் பார்த்த லட்சுமணன், 'அண்ணலே, அண்ணியாருக்கு இந்த ராட்சசன் மீது பயம் உண்டாகிவிட்டது. அவனுடைய சவாலால் அவருக்கு நம் மீதும் அவநம்பிக்கை ஏற்பட்டுவிடக் கூடாது. ஆகவே இனியும் இவனிடம் நாம் விளையாடிக் கொண்டிருக்க வேண்டாம். உடனே இவன் உயிர் பறித்து வீழ்த்துவோம்'' என்று ராமனிடம் உரக்க கத்தினான்.

அதை கேட்ட ராமன், ' ஆரம்ப கட்ட தாக்குதலில் நம் வலிமையை இவன் உணர்ந்து விலகிச் செல்வான் என எதிர்பார்த்தேன். இவனது உயிர் நம்மால் தான் போக வேண்டும் என்பதுதான் விதி போலிருக்கிறது. இனியும் இரக்கம் காட்டிப் பயனில்லை'' என்றான். அரக்கனை காலால் எட்டி உதைக்க, தொலைவில் விழுந்தான் விராதன்.

லட்சுமணன் மனதிற்குள், 'மனைவியை அபகரிக்க வந்த பாதகனை உதைத்து தள்ளி விட்டால் போதுமா? மனம் திருந்தாதவனை மேலுலகம் அனுப்பி வைப்பது தானே சரி'' என யோசிக்கும் போதே, மீண்டும் எழுந்து தாக்க வந்தான் விராதன்.

அதைக் கண்ட ராமன், இவனை குழி தோண்டி புதைத்து விடுவதுதான் சரியானது என நினைக்கிறேன். உடனே பெரிய குழி ஒன்றை வெட்டு'' என லட்சுமணனிடம் தெரிவித்தான்.

பரபரப்புடன் லட்சுமணன் பள்ளம் தோண்ட, பக்கத்தில் ஓடிய காட்டாறு ஊற்றாகப் பெருக்கெடுத்தது. அந்த நீருக்குள் மூழ்கும்படி விராதனை காலால் உதைத்துத் தள்ளினான் ராமன். ஏதேனும் மாய வித்தையால் அசுரன் எழுந்து விடுவானோ என யோசித்த லட்சுமணன் மண்ணைத் தள்ளி, பள்ளத்தை மூட முயற்சித்தான்.

ஆனால் சகோதரர்கள் எதிர்பாராத வகையில் குழியில் இருந்து கந்தர்வன் ஒருவன் வெளிப்பட்டான். ராமன் முன் மண்டியிட்டு, 'சாப விமோசனம் அளித்த சத்தியசீலரே! உமக்கு வணக்கம்'' என்று சொல்லி வணங்கினான். ராம, லட்சுமணரிடம் தான் சாபம் பெற்ற வரலாற்றை விவரித்தான்.

விராதனுக்கு சாபவிமோசனம் தர இவ்வளவு துன்புறுத்தியிருக்க வேண்டுமா என வேதனைப்பட்டான் ராமன். 'அண்ணனின் கையால் யார் ஆசி பெற்றாலும் சரி, அடி வாங்கினாலும் சரி, அதைப் பெறுபவர்களுக்குதான் பெரும்பாக்கியம்'' என்று நினைத்துக் கொண்டான் லட்சுமணன்.

-தொடரும்

பிரபு சங்கர்

72999 68695






      Dinamalar
      Follow us