sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மீண்டும் பச்சைப்புடவைக்காரி (8)

/

மீண்டும் பச்சைப்புடவைக்காரி (8)

மீண்டும் பச்சைப்புடவைக்காரி (8)

மீண்டும் பச்சைப்புடவைக்காரி (8)


ADDED : நவ 21, 2019 02:17 PM

Google News

ADDED : நவ 21, 2019 02:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சண்டி ஹோமம் செய்தவரின் கதை

மனம் நிறைவாக இருந்தது. கண் முன் எரிந்த யாகத்தீயில் ஆயிரம் கண்ணுடையாள் ஜோதியாகத் தெரிந்தாள். என் கண்களில் வழிந்த நீரை காணிக்கையாக்கினேன்.

ஹோமத்திற்கு ஏற்பாடு செய்தவர் தொழிலதிபர் ராமலிங்கம். என் நீண்டகால நண்பர்.

“எங்க குடும்பத்து மேல நிறைய திருஷ்டி விழுந்திருக்கு. பாருங்க, என் பையனுக்கு நீட் பரீட்சையில நல்ல மார்க் கெடைக்கல. என் பொண்டாட்டிக்கு உடம்பு சரியில்ல. போன வாரம் என் பேக்டரில ஒரு சின்ன விபத்து. எல்லாத்துக்கும் பரிகாரமா ஆத்தா மனசக் குளிர்விக்க சண்டி ஹோமத்துக்கு ஏற்பாடு செஞ்சேன்.”

இரண்டு நாள் கழிந்தது. நள்ளிரவில் அப்போது தான் அசந்து படுத்தேன். அலைபேசி ஒலித்தது.

“மோசம் போயிட்டேன்... ஆடிட்டர் சார். என் பையனுக்குப் பெரிய ஆக்சிடெண்ட். அப்பல்லோ மருத்துவமனையில் உயிருக்குப் போராடுறான். எனக்கு மனசே விட்டுப் போச்சு... சார். ரெண்டு லட்ச ரூபா செலவழிச்சு யாகம் செஞ்சேன். நல்லது கொடுக்கலேன்னாக்கூடப் பரவாயில்ல. கெட்டதையாவது கொடுக்காம இருக்கலாம்ல? இப்படி செஞ்சா அப்புறம் பச்சைப்புடவைக்காரியை கும்பிட ஆளேயிருக்காதுன்னு சொல்லி வையுங்க.”

என்ன மனிதர் இவர்! ஆத்தாளையே மிரட்டுறாரே!

“ஒண்ணும் ஆகாது. பயப்படாதீங்க. உங்களை அவ கைவிடமாட்டா.”

போனைத் துண்டித்தார். படுத்தேன். துாக்கம் வரவில்லை. வீட்டை விட்டுக் கிளம்பினேன்.

மனம் போன போக்கில் நடந்தேன். போலீஸ் வண்டி ஒன்று உரசுவது போல அருகில் வந்தது. போலீஸ்காரர் ஒருவர் இறங்கினார்.

“யாரு நீங்க? என்ன செஞ்சிக்கிட்டிருக்கீங்க?”

யார் என்பதைச் சொன்னேன்.

“ஆதார், பான்கார்டு, டிரைவிங் லைசென்ஸ்னு ஏதாவது அடையாளம் காட்டுங்க.”

“எல்லாம் பர்ஸ்ல இருக்கு சார். பர்ஸ் வீட்டுல இருக்கு.”

“உங்க கதையை இன்ஸ்பெக்டர் மேடத்துகிட்ட சொல்லுங்க.”

என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போனார்.

“ஐ டி எதுவும் இல்ல மேடம்.”

“சரி நான் பாத்துக்கறேன். உங்க வீடு இந்தப் பக்கம் தானே! நீங்க கிளம்புங்க. நானே வண்டிய ஓட்டிக்கிட்டுப் போயிடறேன்.”

விரைப்பாக ஒரு சல்யூட் அடித்து விட்டு விடைபெற்றார் அவர்.

“என்னப்பா சண்டி ஹோமம் செஞ்சவருக்குக் கஷ்டம் ஏன் கொடுத்தேன்னு மனசு கொதிக்குதோ?”

இது போதாதா பச்சைப்புடவைக்காரியை அடையாளம் காண?

“வா... வண்டியில் ஏறு அவர் என்ன செய்தார் எனச் சொல்கிறேன்.”

“சென்ற மாதம் அவர் செய்ததை நீயே பார்.”

மதுரை புறநகர் பகுதியில் இருந்தது அந்த ராமலிங்கத்தின் தொழிற்சாலை. மோட்டார் வாகனங்களுக்கு உதிரிப்பாகங்கள் செய்து கொண்டிருந்தனர்.

அது நள்ளிரவு நேரம். தொழிற்சாலையின் மூன்றாவது ஷிப்ட் ஓடிக் கொண்டிருந்தது. பெரிய இயந்திரத்திற்கு அருகில் வேலை செய்த ஒரு தொழிலாளி ஒரு நொடி - ஒரே நொடி - கண் அயர்ந்தான். தலை லேசாகச் சாய்ந்தது. ஒரு பெரிய உருளை போல் ஓடிக்கொண்டிருந்த இயந்திரத்தில் அவனது தலைமுடி சிக்கியது. அடுத்த நிமிடம் அந்தத் தொழிலாளி அந்த இயந்திரத்திற்குள் உறிஞ்சப்பட்டான். கண்மூடிக் கண் திறப்பதற்குள் எல்லாம் முடிந்தது.

சைரன் ஒலிக்கவே, ஓடிக் கொண்டிருந்த இயந்திரங்கள் நிறுத்தப்பட்டன. ஆனால் காரியம் கை மீறியது. அந்தத் தொழிலாளி இறந்தான்.

ஆம்புலன்ஸ் வருகை, மருத்துவமனை, பிரேதப் பரிசோதனை என சடங்குகள் தொடர்ந்தன.

இறந்து போனவனுக்கு 35 வயது. நான்கு ஆண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை.

விபத்து நடந்த இரண்டு வாரம் கழித்து ஒரு நாள். ராமலிங்கத்தின் அலுவலகம். அவரிடம் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கைகட்டி நின்றிருந்தார்.

“ஐயா அந்த ராஜேந்திரன் இறந்ததுக்கு நாம இன்னும் நஷ்ட ஈடு கொடுக்கல. அவன் மனைவி நாலஞ்சு முறை தேடி வந்துட்டா. எவ்வளவு கொடுக்கலாம்னு சொன்னீங்கன்னா.. “

“சட்டப்படி எவ்வளவு கொடுக்கணும்?”

“அவன் தினக்கூலிக்காரன் தான். அதனால சட்டத்துல பெரிசா நிர்ப்பந்தம் இல்ல. ஆனா ரெண்டு லட்சம் கொடுத்தா அந்தப் பொண்ணு எப்படியாவது பொழைச்சிப்பாங்கய்யா.”

“உங்க அப்பன் வீட்டுக் காசா? நீ பாட்டுக்கு அள்ளி விடற? ஐந்தாயிரம் கொடு போதும். வக்கீல்கிட்டக் கேட்டு நல்லா விவரமா எழுதி வாங்கிட்டு கொடு. அன்னிக்கு வேலைக்கு வரும் போதே அவன் குடிச்சிட்டு வந்த மாதிரி ரெக்கார்ட தயார் பண்ணு. கோர்ட் கேசுன்னு வந்தா சவுகரியமா இருக்கும்.”

“சரிங்கய்யா.”

“எதுக்கும் நாலஞ்சு வெள்ளப் பேப்பர்ல கையெழுத்து வாங்கி வச்சுக்கோ. அந்தாளுக்கு வேற யாராவது வாரிசு இருக்காங்களான்னு விசாரி. இருந்தா அவங்களுக்கும் ஆயிரமோ ரெண்டாயிரமோ கொடுத்துக் கையெழுத்து வாங்கி வச்சிக்கோ'' அதிகாரி தயங்கினார்.

“ராஜேந்திரன் நல்ல வேலைக்காரன். நாள் கூலியாவே மாசம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிச்சிக்கிட்டு இருந்தான். அவன் பொண்டாட்டி பாவங்க ஐயா. அவ்வளவா படிக்காத பொண்ணு. பெண் குழந்தை வேற இருக்கு. ஏதாவது வேலை கொடுத்தீங்கன்னா''

“அதெல்லாம் வேண்டாம். பின்னால பிரச்னை வரும். சொன்னதச் செய்''

''சே! இப்படிப்பட்டவர் செய்த ஹோமத்தில் கலந்து கொண்டேனே...தாயே!''

“நோய் போல தீமையை பார்க்க வேண்டும் என நான் கற்றுத் தந்த பாடத்தை மறந்தாயா''

“மன்னியுங்கள்.”

“அவன் ஹோமம் நடத்திய பணத்தை ராஜேந்திரனின் மனைவிக்குக் கொடுத்திருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்''

“ராமலிங்கத்திடம் என்ன சொல்லட்டும்?”

“இப்போதும் ஒன்றும் கெடவில்லை. கணிசமான நஷ்ட ஈடு, அந்தப் பெண்ணிற்கு ஒரு வேலை கொடுக்கச் சொல். அவன் மகனை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“நீங்களே வந்து சொன்னீர்கள் எனச் சொல்லட்டுமா?”

“வேண்டாம். அது பிரச்னையாகி விடும். பிரச்னையை மலைநாட்டு மாந்திரீகனிடம் சொன்ன போது அவன் சொன்ன தீர்வாகச் சொல்”

“உங்கள் ஆணை... தாயே!”

“நீ ஏனப்பா அழுகிறாய்?”

“தவறு செய்தவன் மேலும் தீங்கிழைத்தவன் மேலும் இவ்வளவு அன்பு காட்டுகிறீர்களே... உள்ளன்போடு உங்களை வணங்கும் உத்தமர் மீது எவ்வளவு அன்பு காட்டுவீர்கள் என நினைத்தேன். அழுகை வந்தது.”

அன்னையின் புன்முறுவலுக்கு அகிலத்தையே கொடுத்தாலும் ஈடாகாது.

“உன் வீடு வந்தாச்சு; இறங்கிக் கொள்.”

அன்னையின் காலில் விழுந்து வணங்கி விடைபெற்றேன்.

இன்னும் வருவாள்

தொடர்புக்கு: varalotti@gmail.com

வரலொட்டி ரெங்கசாமி






      Dinamalar
      Follow us