ADDED : நவ 21, 2019 02:14 PM

காஞ்சி மகாசுவாமிகளின் தரிசனத்திற்காக பக்தர்கள் காத்திருந்தனர். அதில் இருவர் வித்தியாசமானவர்களாகத் தென்பட்டனர். ஒருவர் கறுப்புச் சட்டை அணிந்த கடவுள் நம்பிக்கை இல்லாதவர். அவரது மனைவியோ கூடை நிறைய பழம், பூக்கள் வைத்திருந்தாள்.
அனைவருக்கும் சுவாமிகள் குங்குமப் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்தார். வரிசை மெல்ல நகர, குறிப்பிட்ட தம்பதி சுவாமிகளின் முன் வந்தனர். அந்த பெண் மட்டும் நமஸ்கரித்தாள். கணவரோ அமைதியாக நின்றார். இருவரையும் பார்த்த சுவாமிகள், ''ஏம்மா...உன் கணவருக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லை போலிருக்கே?'' என்றார்
''ஆமாம் சுவாமி. அவர் பகுத்தறிவுவாதி''
''அப்படி சொல்லாதே. கடவுள் நம்பிக்கை இல்லாதவர், நாத்திகர் என்று சொல். பகுத்தறிவு என்பது பகுத்துப் பகுத்து அறிவது. அப்படி அறியும் போது கடவுள் இருக்கிறார் என்ற முடிவுக்கு வர வேண்டும் இல்லையா?'' என்றார்.
அந்த பெண் தலையசைத்தாள்.
அமைதி காத்த சுவாமிகள் மீண்டும், ''ராமாயண காலத்திலேயே நாஸ்திகம் இருந்திருக்கு. அதில் வரும் மகரிஷி ஜாபாலி நாஸ்திகர் தான். அது போகட்டும். நாஸ்திகரா இருந்தும் நீ வற்புறுத்தியதால் தானே இங்கு வந்திருக்கிறார்?''
''ஆமாம் சுவாமி''
''பார்த்தாயா? கொள்கையில் முரண்பட்டாலும் மனைவிக்காக இங்கு வந்திருக்கிறார் என்றால் என்ன காரணம்?
உன் மீதுள்ள அன்பு. அதை உணரத்தான் முடியும். அது மாதிரி தான் பகவான். ஆனால் இவர்கள் பகவானை நேரில் பார்க்காததால் சந்தேகப்படுகிறார்கள். அவ்வளவு தான்!
எந்தக் கொள்கை இருந்தால் என்ன?
நல்லவனாக வாழ்ந்தால் போதும்...அவரவர் கொள்கை அவரவருக்கு. அதற்காக மற்றவர் கொள்கையை மனம் நோக விமர்சிப்பது மட்டும் கூடாது. அவ்வளவு தான்.
உனக்காக இவ்வளவு துாரம் வந்திருக்கிறார் இல்லையா? உன் மீது அவருக்கு எத்தனை அன்பு என்பதை புரிந்து கொள். இதோ... குங்குமம் பிரசாதம்'' என்றார்.
அதை பெற்றதும் கணவரைப் பார்த்தாள் அந்தப் பெண். அவரது கண்களில் வியப்பு மேலிட்டது.
தொடர்புக்கு: thiruppurkrishnan@hotmail.com
திருப்பூர் கிருஷ்ணன்
காஞ்சிப்பெரியவர் உபதேசங்கள்
* காபி, டீ குடிப்பதை தவிருங்கள்.
* பட்டு ஆடை உடுத்தாமல், பருத்தி ஆடை உடுத்துங்கள்.
* மனதை பாழ்படுத்தும் சினிமா, 'டிவி' தொடர்களை பார்க்காதீர்கள்.
* தாய் மதம், தாய் மொழி, தாய் நாட்டை நேசியுங்கள்.