sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வ தரிசனம்! (16)

/

தெய்வ தரிசனம்! (16)

தெய்வ தரிசனம்! (16)

தெய்வ தரிசனம்! (16)


ADDED : பிப் 03, 2017 09:57 AM

Google News

ADDED : பிப் 03, 2017 09:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முருகப் பெருமான் அருளுகின்ற ஆலயங்களில் அவருக்கு தேவியர்களாக வலப்பக்கம் வள்ளியும் இடப்பக்கம் தெய்வானையும் திருக்காட்சி தருவார்கள். தெய்வானையை கிரியா சக்தி என்பர். அவளை முருகன் திருமணம் செய்து கொண்ட தலம் திருப்பரங்குன்றம். இச்சா சக்தியான வள்ளியை காதல் மணம் புரிந்து கொண்ட தலம் வள்ளிமலை.

வள்ளி பிறந்து வசித்த பகுதிதான் இன்றைக்கு உள்ள 'வள்ளிமலை'. அதற்கு முன் இந்தத் திருத்தலத்தின் பெயர் பர்வதராஜ குன்று. வேலூரில் இருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது.

வள்ளியின் அவதாரக் கதையைத் தெரிந்து கொள்வோம்.

தொண்டை நாட்டில் மேற்பாடி என்னும் ஊரின் அருகில் இருந்த வள்ளிமலையையும், அதைச் சார்ந்த வனப்பகுதியையும் நம்பிராஜன் என்கிற வேடுவ அரசன் ஆண்டு வந்தான். அவனது மனைவி பெயர் மோகினி. இவர்களுக்குக் குழந்தைப்பேறு இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நாள் வேட்டைக்கு சென்றான். வழியில் விசித்திரமான மான் ஒன்றைக் கண்டவுடன் அப்படியே நின்றான். நம்பிராஜன் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், குட்டி ஒன்றை ஈன்றது அந்த மான். ஆனால், அந்தக் குட்டி ஒரு மானாக இல்லாமல், பெண் குழந்தையாக இருந்தது.

நம்பிராஜன் ஆச்சரியம் விலகாமல் சிசுவையும், சிசுவை ஈன்ற மானையும் பார்த்துக் கொண்டிருந்தான். குழந்தையை ஈன்ற சில விநாடிப் பொழுதிலேயே தாய் மான், சிசுவை அங்கேயே விட்டு விட்டுப் போய்விட்டது. குழந்தை அழுது கொண்டிருந்தது. அதை அள்ளி எடுத்துக் கொஞ்சி தன் அன்பை

வெளிப்படுத்தினான். இப்போது குழந்தை சிரித்தது.

இல்லத்துக்கு வந்தவுடன் என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தான். வள்ளிக்கிழங்கு அகழ்ந்தெடுத்த குழியில் குழந்தை கண்டெடுக்கப்பட்டதால், 'வள்ளி' என்று பெயர் வைத்தான்.

மானுக்கு எப்படி மனிதரூபத்தில் குழந்தை பிறக்கும் என்ற சந்தேகம் வரலாம். இதற்கும் புராணத்தில் விளக்கம் உண்டு.

மகாவிஷ்ணு ஒரு முறை பூலோகத்தில் தவம் இருந்தார். ஸ்ரீராமன் இருக்கும் இடம்தானே சீதைக்கு அயோத்தி! எனவே, அவர் தவம் இருந்த வனத்தின் பக்கம், மான் வேடத்தில் சுற்றித் திரிந்தாள் லட்சுமிதேவி. ஒரு கட்டத்தில் விஷ்ணுவுக்கு முன்னால் மான் வந்து நிற்க... பார்வை பரிமாறப்பட... மான் கருவுற்றது. அந்த மானுக்கு (லட்சுமிக்கு) தான் பெண் குழந்தை பிறந்தது. இந்த சிசுதான் நம்பிராஜன் கையில் கிடைத்தது.

முருகப்பெருமான் வள்ளியை மணந்த கதை சுவாரஸ்யமானது.

வள்ளி கன்னிப் பருவத்தை எய்தியதும், குலவழக்கப்படி தினைப்புனம் காக்கும் பணிக்கு அனுப்பப்பட்டாள்.

அறுவடைக்குத் தயாராக இருக்கும் தினையை உண்ண வரும் குருவி, மைனா, கிளி உள்ளிட்ட பறவைகளை விரட்ட வேண்டும். இதுதான் வள்ளிக்கு உண்டான பணி. நித்தமும் தோழிகளுடன் சென்று இந்தப் பணியை மேற்கொள்வாள் வள்ளி. அழகு ததும்பும் வள்ளியை வனத்தில் சந்தித்த நாரதர், பிரமித்து நின்றார். இறை அவதாரம் பூர்த்தி ஆக வேண்டாமா? எனவே, நாரதர் மனதில் 'ஆஹா... இந்த வள்ளி, முருகப்பெருமானுக்கு மனைவியாக வேண்டும்' என்று தீர்மானித்து, சிவ மைந்தனான முருகனிடம் போய் விஷயத்தைச் சொன்னார். முருகப்பெருமானும் தினைப்புனம் வந்து, முதியவர் கோலத்தில் வள்ளியை நெருங்கி, அவளை ஆட்கொள்ள முயன்றார். வள்ளியும் மெல்ல பழக ஆரம்பித்தாள். தம்பியின் காதலுக்கு அண்ணனான விநாயகப்பெருமான் உதவினார்.

ஒரு நாள் யானை வடிவில், விநாயகன் வந்து வள்ளியை பயமுறுத்த... அப்படியே ஓடோடிப் போய் முதியவர் கோலத்தில் இருந்த முருகப்பெருமானை அணைத்துக் கொண்டாள். இப்படியே நாட்கள் சுவாரஸ்யமாகப் போயிற்று. பின்னாளில்தான், முதியவரின் சுயரூபம் வள்ளிக்குப் புரிந்து பிரமித்தாள். இருவரும் மணம் புரிய முடிவெடுத்தனர்.

ஒருநாள் வள்ளியுடன் முருகப்பெருமான் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கே வள்ளியின் தந்தை நம்பிராஜன் வந்து விட்டார். அந்த வேளையில் 'ஆகா... தந்தையிடம் சிக்கிக் கொண்டால் என்னாவது?' என்கிற பயத்தில் வள்ளி தவிக்கும்போது சட்டென்று ஒரு வேங்கை மரமாகத் தன்னை உருமாற்றிக் கொண்டு விட்டார் முருகன். எனவேதான் வள்ளிமலையின் தல விருட்சம் வேங்கை மரம்.

பின்னாளில் நம்பிராஜனுக்கு விஷயம் தெரிய வர... தன் மகளை சந்தோஷமாக முருகப்பெருமானுக்கு மணம் முடித்து வைத்தார். வள்ளியை முருகப்பெருமான் மணம் புரிந்து கொண்ட குகையை இன்றும் காணலாம். நம்பிராஜனின் வேண்டுகோளின்படி எந்த இடத்தில் இவர்களது காதல்

மலர்ந்ததோ, அங்கும் எழுந்தருளினார் முருகப் பெருமான். அதுவே இன்று நாம் தரிசிக்கும் வள்ளிமலை.

வள்ளிமலை சுவாமிகள் என்று அழைக்கப்படும், திருப்புகழ் சுவாமிகள் இங்கே பல காலம் தங்கி இருந்து திருப்பணி புரிந்திருக்கிறார். முருகப் பெருமானின்

பரிபூரண தரிசனமும் ஆசியும் பெற்ற சுவாமிகள் 1950 நவம்பர் 22ல் சமாதி அடைந்தார். வள்ளிமலையில் அவர் தவம் செய்த குகையிலேயே திருச்சமாதி உள்ளது.

வனத்துக்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், மஞ்சள் அரைத்து தேய்த்து நீராடிய சுனை, முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரியஒளி படாத தீர்த்தம், யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர் மலை வடிவில் அமர்ந்திருக்கும் யானைக்குன்று, முதியவர் உருவில் வந்த முருகப் பெருமானுக்குத் தேனும் தினைமாவும் தந்து உபசரித்தபோது, தாகம் எடுத்ததால் நீர் எடுத்துத் தந்த சுனை... இப்படிப் பல இடங்கள் இன்றைக்கும் இருப்பது நடந்த புராணத்தை நம் கண் முன்னே காட்டுவதாக உள்ளது.

திருமணம் தாமதம் ஆகிறவர்கள், வள்ளிமலை சென்று முருகப் பெருமானை தரிசித்தால் பிரார்த்தனை கைகூடும். அடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் வள்ளிக்குத் தனி சன்னிதி உண்டு. வள்ளியின் திருக்கரத்தில் பறவைகளை விரட்டும் உண்டி வில், கவண் கல் ஆகியவை உள்ளன. அடிவார முருகப் பெருமானைத் தரிசித்து விட்டு 445 படிகள் ஏறினால் மலைக்கோவிலை அடையலாம்.

மாசி பிரம்மோற்ஸவ விழாவின் இறுதி நாளான மாசி பவுர்ணமியன்று வள்ளி கல்யாணம் நடக்கும். அன்றைய தினம் தங்கள் இனப் பெண்ணுக்கு நடக்கின்ற திருமணம் என்பதால், கல்யாணத்துக்குத் தேவையான புடவைகள், திருமாங்கல்யம், மலர்மாலை மற்றும் சீர்பொருட்களை மேள தாளத்துடன் கொண்டு வருவார்கள் வேடுவ மக்கள். அதோடு, தங்கள் மருமகனான முருகனுக்குத் தேனும் தினைமாவும் படையலிட்டு வணங்குவார்கள்.

வேத மந்திரம் முழங்க திருக்கல்யாணம் நடக்கும். திருமணத்தைக் காண வந்திருக்கும் பக்தர்கள், முருகன் மற்றும் வள்ளிக்கு மொய்ப்பணம் தந்து, கல்யாண விருந்து சாப்பிட்டுச் செல்வார்கள். இரவில் வீதி உலா பிரமாதப்படும். வள்ளிமலையுடன் திருத்தணியையும் தரிசித்தால், வள்ளிதேவியின் பரிபூரண அருள் கிடைக்கும்.

இன்னும் தரிசிப்போம்...

பி. சுவாமிநாதன்






      Dinamalar
      Follow us