sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கிருஷ்ண ஜாலம் (19)

/

கிருஷ்ண ஜாலம் (19)

கிருஷ்ண ஜாலம் (19)

கிருஷ்ண ஜாலம் (19)


ADDED : பிப் 03, 2017 10:14 AM

Google News

ADDED : பிப் 03, 2017 10:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரா நகரில் குப்ஜா என்னும் பெண் வாழ்ந்தாள். கர்மவினை காரணமாக சற்று கூன் விழுந்த நிலையில் இருந்த இவளுக்கு திருமணம் என்பது எட்டாக்கனியாக இருந்தது. அதற்காக பருவ வயதில் இயல்பாக ஏற்படும் மாற்றம் ஏற்படாமல் போய் விடுமா? இதனால் தானே பருவத்தே பயிர் செய் என்று சொல்லி வைத்தார்கள். பருவம் வரும் முன்பே பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்து, புருஷனைக் கொண்டு ஆற்றுப்படுத்தி, அதுவே இல்லறம் நல்லறம் என்றார்கள்.

ஆனால், பாவம் குப்ஜைக்கு இல்லறம் என்பது இல்லை என்றாகி விட்டது. இந்த சூழலில், பிருந்தாவனத்தில் இருந்து கிருஷ்ணனை அக்ரூரர் அழைத்து வந்தார். கிருஷ்ணனைப் பார்த்த குப்ஜை மனம் சொக்கிப் போனாள். தன்னையும் மறந்தவளாக சந்தனக் கிண்ணத்தோடு அவன் முன் சென்றாள். “கிருஷ்ணா வா... மாதவா வா... முகுந்தா வா...” என்று வரவேற்று மகிழ்ந்தாள்.

மதுரா நகரமே இருபுறமும் நின்று மக்கள் கிருஷ்ணனை வரவேற்ற போதிலும், கூன் விழுந்த குப்ஜையின் வரவேற்பே அவனுக்கு பிரத்யேகமாக பட்டது. தன் வாழ்நாளிலேயே முதல் முறையாக ஒரு ஆண்மகனைக் காண்பதால், குப்ஜையால் கிருஷ்ணன் மீது வைத்த விழிகளை எடுக்க முடியவில்லை.

கிருஷ்ணனின் தேஜஸ்... அந்த கிரீடம், மயில் தோகை, மார்பில் அணிந்திருக்கும் மாலை, கையிலுள்ள புல்லாங்குழல், உடை உடுத்திய அழகு, திருப்பாதங்கள். அதில் செம்பவளம் போலிருந்த நகங்கள் பாதக்குறட்டின் மீது பளிச்சிட்ட விதம் என்று அனைத்திலும் மனம் ஈடுபட்டு, தன்னையே இழந்து விட்டிருந்தாள்.

அந்நிலையில், “கிருஷ்ணா.... என் இல்லம் வருவாயா? எனக்கு விமோசனம் தருவாயா?” என்று கேட்டாள்.

எத்தனையோ கடமைகள் இருக்கும் போது, குறிப்பாக கம்சவதம் என்னும் பிறவி நோக்கம் பிரதானமாக இருக்கும் போது, இந்த மாதிரி

உபசரணையை எப்படி பொருட்படுத்த முடியும்? அதற்காக அன்பை புறக்கணிக்கவும் முடியாதே?”

“வருகிறேன்... உனக்காகவே ஒருநாள் நிச்சயம் வருகிறேன்” என்று திருவாய் மலர்ந்தவனாக அவள் அளித்த சந்தனத்தை மார்பில் பூசிக் கொண்ட கிருஷ்ணன் ரதத்தில் ஏறிக் கொண்டு போய் விட்டான்.

சகல கடமைகளையும் நிறைவு செய்த நிலையில் மதுரா நகர் வந்த கிருஷ்ணன், குப்ஜையை எண்ணி அவன் இல்லத்திற்கு வந்து நின்றான்.

ஆனால் குப்ஜை இதை கற்பனை செய்து கூடப் பார்க்கவில்லை. அவனைப் பார்த்தது முதல், தன் புருஷனாக கருதிக் கொண்டு, 'கிருஷ்ணா... கிருஷ்ணா...' என்று விரகத் தீயில் தினமும் வெந்து கொண்டிருந்தாள்.

இப்படி பாழாய்ப்போன சிற்றின்ப நிலையிலா அவள் மூழ்கிக் கிடக்க வேண்டும்?

என்ன செய்ய? அவளின் சூழ்நிலை இப்படி செய்ய வைக்கிறது. இதில் யாரைக் குற்றம் சொல்ல முடியும்? ஒரு குப்ஜை தெரிந்து செய்தால், ஓராயிரம் கோபியர் தெரியாமல் இது போலச் செய்தனர். நல்ல மலரின் வாசத்தை மூக்கு, அனுமதி பெற்றா நுகர முடியும்? எழில் மிக்க காட்சிகளை கண்கள் அனுமதி பெற்ற பிறகா ரசிக்க முடியும்?

குளிர்ந்த காற்றை உடம்பு அனுமதி பெற்றா அனுபவிக்கும்? எல்லாமே அனிச்சை செயல்கள் தானே! அப்படித் தான் கிருஷ்ணனைக் கண்ட கண்கள், அவன் நினைவில் மூழ்கிப் போவது என்பதும்...

சில கோபியர் கண்களைத் திறந்து வைத்துக் கொண்டால் வேண்டாத காட்சிகள் கண்ணில் பட்டு மனதில் தோய்ந்து கிடக்கும் கிருஷ்ணரின் சவுலப்யம்(அழகு) கலங்கி விடுமோ என்று, மூடிக் கொண்ட கண்களைத் திறக்கவே இல்லை.

இப்படி கோபியர் ஒருபுறம் கிடக்க, குப்ஜையும் கிருஷ்ணா...கிருஷ்ணா... என்று உருகிக் கொண்டிருந்த தருணத்தில் தான் அவளது வீட்டுக் கதவைத் தட்டினான் கிருஷ்ணன்.

“யாரது?”

“வந்து பார் தெரியும்”

“என்னால் வர இயலாது. நான் பெரும் துன்பத்தில் இருக்கிறேன். யாரையும் பார்க்கும் பொறுமை எனக்கு இல்லை. திரும்பிச் செல்லுங்கள்...”

“அப்படியானால் சரி.... கிருஷ்ணனாகிய எனக்குத் தான் உள்ளே நுழையும் பாக்கியமில்லை என்று எண்ணிக் கொள்கிறேன்”

இப்படி ஒரு பதிலை கிருஷ்ணன் சொன்ன நொடியில், “யாரது கிருஷ்ணனா... ஐயோ பாவி நான்.... போய்விடாதே கிருஷ்ணா...

அங்கேயே நில்,” என்று தன் கூன்பட்ட உடம்பை இழுத்துக் கொண்டு வந்தாள் குப்ஜை.

கதவைத் திறந்து பார்த்தாள். வாசலில் புன்னகை பூத்த முகத்துடன் கிருஷ்ணன் நின்றிருந்தான்.

கிருஷ்ணா... இது கனவு அல்லவே... நிஜம் தானே”

“நிஜம் தான். ஆமாம். எங்கே உன் சந்தனம். அதைப் பூசிக் கொண்டே உள்ளே நுழைவேன்....”

“ஓ...சந்தனமா... இதோ வந்து விடுகிறேன். வேலை இருக்கிறது என்று திரும்பிப் போய் விடாதே...” என்று வீட்டிற்குள் ஓடிய குப்ஜை சந்தனக் கிண்ணத்தோடு வந்தாள். பாவம் அவளது கூன் உடம்பு தான் மூச்சிறைத்தது.

சந்தனக் கிண்ணத்தை கிருஷ்ணனின் முன் நீட்டினாள்.

“நீயே பூசி விடு குப்ஜா...” கிருஷ்ணன் கொஞ்சும் குரலில் கேட்டான்.

“நானேவா....ஓ...” என்று பூரித்துப் போன குப்ஜை, நடுங்கியபடி விரலால் சந்தனத்தை அள்ளி கிருஷ்ணரின் உடம்பின் மீது பூசினாள். அப்போது கிருஷ்ணன் அவளது கைகளைப் பற்றிக் கொண்டான். அவள் பரவச நிலைக்குப் போய்விட்டாள்.

கூனும் நிமிர்ந்தது! அவள் தன்னை புதியவளாக உணர்ந்தாள். கண்களில் ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள். கிருஷ்ணன் அவள் கைகளைப் பற்றியபடி, தன் மார்பின் மீது அவளது முகம் புதைய அணைத்துக் கொண்டான். அந்த நொடியில் குப்ஜையை போன்ற ஆயிரமாயிரம் கோபியர் உடம்பிலும் பரவச நிலை உண்டானது. தன்னை மறந்த பேரானந்த நிலையில் அனைவரும் ஆழ்ந்தனர்.

ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்று கலந்த நிலை என்று இதனைக் கூறலாம்.

“கிருஷ்ணா... கிருஷ்ணா....” என்று குப்ஜை முனங்கினாள். பிறகு அது கூட மெல்ல அடங்கி அமைதியான சூழலுக்கு ஆட்பட்டாள்.

சிறிது நேரம் சென்ற நிலையில் கிருஷ்ணன் குப்ஜையை விட்டு விலகியவனாக, “குப்ஜை... உன் விருப்பத்தை நிறைவேற்றி விட்டேன். வரட்டுமா? ” என்று கேட்டான்.

“கிருஷ்ணா....”

“சொல் குப்ஜை”

“செல்லத் தான் வேண்டுமா நீ...?”

“தேகம் தான் விலகிச் செல்கிறது. நாமம் உன் வசமே உள்ளது. அதை நீ சொல்லும் போதெல்லாம், நான் உன்னுடன் தான் இருப்பேன்”

“எனக்கான இந்த வரத்தை அனைவருக்கும் அளிப்பாயா கிருஷ்ணா?”

“நிச்சயமாக... நீ ஒரு நல்ல கோபிகை என்பதை நிரூபித்து விட்டாய். தான் பெற்ற இன்பம் பிறர் பெற நினைப்பதே மேலான பக்தி”

“உன் சம்பந்தமே எனக்கு அதை அளித்தது. என் ஆசைக்கும் உன்னால் ஒரு ஞானம் பிறந்தது”

“இந்த ஞானம் உனக்குள் தூய பக்தியாக மணம் வீசட்டும். நான் வருகிறேன்...”

என்ற கிருஷ்ணன் அவளை விட்டுப் பிரிந்ததும், குப்ஜை பக்தி பரவசத்தால் 'கிருஷ்ணா... கிருஷ்ணா....' என்று ஜெபிக்கத் தொடங்கினாள்.

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us