sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வ தரிசனம் (17)

/

தெய்வ தரிசனம் (17)

தெய்வ தரிசனம் (17)

தெய்வ தரிசனம் (17)


ADDED : பிப் 10, 2017 11:26 AM

Google News

ADDED : பிப் 10, 2017 11:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''பண்டரிபுரம் யாத்திரை ஆத்ம சுகத்தை அளிக்கும்,'' என்றார் நாமதேவர்.

''பரப்பிரம்ம சொரூபமே பாண்டுரங்கன். அவனது நாமங்களைச் சொல்லி வழிபடுங்கள்,'' என்கிறார் ஆதிசங்கரர்.

24 மணி நேரமும் பகவானுடைய நாம சங்கீர்த்தனம் ஒலித்துக் கொண்டிருக்கும் திருத்தலம் பண்டரிபுரம்.

இங்குள்ள சந்திரபாகா நதிக்கரையில் விட்டலன் என்கிற பாண்டுரங்கனும், ருக்மணி என்கிற ரகுமாயியும் குடி கொண்டிருக்கிற புராதனமான கோவில் அமைந்துள்ளது.

ருக்மணியுடன் கிருஷ்ணன் நிரந்தரமாகத் தங்கி விட்ட இந்தப் பண்டரிபுரத்தில் எங்கு திரும்பினாலும், கிருஷ்ண கோஷம்தான். 'பூலோக வைகுண்டம்' என்று போற்றப்படுகிற பண்டரிபுரத்தை பக்தர்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் தரிசித்து விட வேண்டும்.

''சந்திரபாகாவில் புனித நீராடுவது, விட்டலனைத் தரிசனம் செய்வது, ஆலயத்தை வலம் வருவது, நாமசங்கீர்த்தனம் முழங்குவது ஆகிய இவற்றையெல்லாம் பண்டரிபுரத்தில் செய்தால் பிறவி முழுமை பெறுகிறது. பாவம் விலகுகிறது,'' என்பார் துக்காராம். கங்கையை விட பழமையும், புனிதமும் உடையது சந்திரபாகா நதி.

விட்டலன் ஆலயம் வீற்றிருக்கும் வீதியில் நடந்தாலே, நாமசங்கீர்த்தன ஒலி காதுகளை நிறைக்கும். ஆலயம் செல்கிற வழியில் நாமசங்கீர்த்தனத்துக்குத் தேவையான வாத்தியக் கருவிகள், துளசிமணி மாலை, சந்தனக் கட்டை, பூஜைப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

விட்டலன் ஆலயத்தைப் பிரம்மாண்டமானது என்று சொல்ல முடியாது. கச்சிதமான, பழமையான ஆலயம்.

சரி... கிருஷ்ணன் இங்கே விட்டலனாகக் கோவில் கொண்டது எப்படி?

புண்டரீகன் என்பவன் தன் தாய் மற்றும் தந்தையாரைப் பராமரித்துக் கொண்டிருந்தான். எப்படிப்பட்ட பராமரிப்பு...?

அவர்களுக்கு அனைத்து விதமான உபசாரங்களையும் செய்து, உணவு ஊட்டிவிட்டு, படுக்க வைத்து ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தான். தாய்க்கும், தந்தைக்கும் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருந்தான்.

அப்போது துவாரகையில் ஆட்சி புரிகின்ற கிருஷ்ணன் வாசலில் வந்து நிற்கிறான். அவன் நிற்கும் இடம் சேறும் சகதியுமாக இருக்கிறது.

'தாய் தந்தைக்கு எவன் ஒருவன் சேவகம் செய்து, அவர்களைப் பராமரித்து வருகிறானோ, அவன் என்னைத் தேடி வர வேண்டாம். அவன் இருக்கிற இடம் தேடி நானே வருவேன்,'' என்று கிருஷ்ணன் அருளி இருக்கிறான்.

இப்போது புரிந்திருக்கும்... சேறும் சகதியும் நிறைந்த இந்த வாசல் பகுதியில் அவன் ஏன் நின்று கொண்டிருக்கிறான் என்று!

தாய்க்கும் தந்தைக்கும் சேவை செய்கிற புண்டரீகனை ஜன்னல் வழியே பார்த்து, ''ஏ, புண்டரீகா...'' என்று அழைத்தான்.

புண்டரீகன் எட்டிப் பார்த்தான்., வாசலில் வந்து காத்திருப்பது ஒரு அவதார புருஷர் என்று தெரிந்தும், ''என் தாயும் தந்தையும் உறங்கிய பின் தான் உன்னை வந்து பார்க்க முடியும்'' என்றான்.

கிருஷ்ணன் அவனிடம், ''சரி, நீ வரும் வரை நான் எங்கே நிற்பது? இந்த இடமே சரியில்லயே?''

''நான் வருகிற வரை இதன் மேல் ஏறி நில்'' என்று ஒரு செங்கல்லை எடுத்து ஜன்னல் வழியே வீசினான் புண்டரீகன். பிறகு, சேவையைத் தொடர்ந்தான்.

அந்த செங்கல்லில் ஏறி, இடுப்பின் இரு பக்கமும் இரு கைகளை வைத்தபடி காத்திருந்தான் கிருஷ்ணன்.

பெற்றோர் நன்றாக உறங்க ஆரம்பித்த பின், வாசலுக்குப் போய் கிருஷ்ணனை வணங்குகிறான். கிருஷ்ணன் நெகிழ்ந்து புண்டரீகனை ஆசீர்வதித்து, ''என்ன வரம் வேண்டும்?'' என்று கேட்க... ''எனக்குக் காட்சி தந்து அருளியது போல எல்லோருக்கும் நீ இதே கோலத்தில் தரிசனம் தந்து அருள் புரிய வேண்டும்,'' என்றான்.

அந்த பக்தனின் விருப்பப்படி பரந்தாமன், அதே கோலத்தில் அங்கே சன்னிதி கொண்டான். புண்டரீகனின் பெயரால், அந்த ஊருக்கு பண்டரிபுரம் என்று பெயர்

சூட்டப்பட்டது.

ஒரு ஆடி மாதத்தில் தான் பண்டரிபுரத்தில் வந்து அமர்ந்தான் விட்டலன். எனவே, ஆடி மாதத்தில் (ஜூலை) வருகிற ஏகாதசி 'ஆஷாட ஏகாதசி'யாக பக்தர்கள் வெகு சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

சாதாரண ஏகாதசி அன்றே, பண்டரிபுரம் பக்தர்கள் கூட்டத்தில் தத்தளிக்கும் என்றால், ஆஷாட ஏகாதசியன்று எண்ணிலடங்கா மக்கள் வருவார்கள். நம்மூரில் பழநிக்குப் பால் காவடி எடுத்துச் செல்வது போல், மகாராஷ்டிர பக்தர்களும் காவடி எடுத்துச் செல்கிறார்கள். காவடி கிளம்பியதில் இருந்து பண்டரிபுரத்தில் காவடியைக் கீழே இறக்கி வைக்கும் வரை, 'விட்டல விட்டல, பாண்டுரங்கா..

பண்டரிநாதா' என்று விட்டலனின் நாமங்களை முழங்கிக் கொண்டே செல்வார்கள். முழுக்க முழுக்கப் பாத யாத்திரை தான்.

இங்கே பால் மற்றும் தயிர் காவடி மட்டுமே எடுக்கப்படும். இதை விட்டலன் சன்னிதியில் பக்தர்கள் அர்ப்பணிப்பார்கள். செல்கிற வழியெங்கும் காவடி சுமந்து வரும் பக்தர்கள் தங்க பெரிய பந்தல்கள் போடப்பட்டு, உணவும், ஓய்வுக்கு இடமும் வழங்கப்படும். இதை அப்பகுதி பணக்காரர்கள் உபயமாக செய்து கொடுக்கிறார்கள்.

பண்டரிபுரம் விட்டலன் ஆலயத்துக்குள் காலடி வைத்ததும், இனம் புரியாத ஒரு பரவசம் நம்மை ஆட்கொள்ளும். ஆலயத்தினுள் அழகான சிற்பங்கள் நிறைந்த கல் துாண்கள், ஆண்டுகள் பலவற்றைக் கடந்தும், நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. கையெழுத்தினால் எழுதப்பட்ட மகாபாரத புத்தகத்தை, ஒரு கண்ணாடிப் பேழைக்குள் பலரும் தரிசிக்கும் வகையில் வைத்திருக்கிறார்கள். இதை ஒரு பொக்கிஷமாகக் கருதுகிறார்கள்.

கருவறையில் அருளுகின்ற விட்டலனின் அருகே சென்று அவனது திருப்பாதங்களில் தலை வைத்துப் பிரார்த்திக்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது. விட்டலின் பாதங்களைப் பற்றுகிற ஒவ்வொரு பக்தரும், சாட்சாத் கிருஷ்ணனின் திருப்பாதங்களையே பற்றி விட்டது போல் மகிழ்கிறார்கள்.

தன் இரு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கம்பீரமாக நம்மைப் பார்த்து, 'என்னைத் தரிசனம் செய்ய வந்து விட்டாயா?' என்று கேட்பது போல் தோன்றுகிறது விட்டலனின் தோற்றம்.

ஆலயம் முழுக்க துளசியும் சந்தனமும் நறுமணம் பரப்பி, கோவிலின் தெய்வீகத் தன்மையை மேலும் மெருகூட்டுகிறது.

விட்டலனைத் தரிசித்தால் நம் நெஞ்சமெல்லாம் நிறைந்து விடும்.

இன்னும் தரிசிப்போம்...

பி. சுவாமிநாதன்






      Dinamalar
      Follow us