ADDED : ஏப் 29, 2022 08:35 AM
சிதம்பரத்தை சேர்ந்த சிவனடியார்கள் மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம். குரு சிஷ்யரான இவர்கள் சந்தித்த விதம் சுவாரஸ்யமானது. அந்தணரான உமாபதிசிவம் ஒருநாள் நடராஜருக்குப் பகல் பூஜையை முடித்துவிட்டு, வீட்டிற்கு பல்லக்கில் சென்று கொண்டிருந்தார். அதன் முன்பாக ஒருவன் தீவட்டியுடன் சென்றான்.
வழியில் நின்ற மறைஞானசம்பந்தர், பல்லக்கை கண்டார். பகலில் சூரிய ஒளி இருக்க, தீவட்டி எதற்கு என்ற பொருளில், “பட்ட மரத்தில் பகல் குருடு' என உரக்கச் சப்தமிட்டார். இதைக் கேட்ட உமாபதி சிவம் அதிர்ந்தார். பல்லக்கில் இருந்து குதித்து, மறைஞானசம்பந்தரை நோக்கி ஓடினார். எப்படியாவது அவரைத் தன் குருவாக ஏற்க வேண்டும் என்ற எண்ணம் உமாபதி சிவத்திற்குத் தோன்றியது. பிடிகொடுக்காமல் ஓடிய மறைஞானசம்பந்தர் ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டார். அந்த வீட்டினர் அவரது கைகளில் கூழ் ஊற்றினர். அவரும் 'சிவப்பிரசாதம்' என்று சொல்லி குடிக்கத் தொடங்கினார்.
இதற்குள் உமாபதி சிவம் ஓடி வந்து, மறை ஞானசம்பந்தரின் கைகளில் வழிந்த கூழைக் 'குருபிரசாதம்' என்று சொல்லிக் குடித்தார். அவரது குருபக்தியை கண்ட மறை ஞானசம்பந்தர் சீடராக ஏற்றார். இவரே சிந்தாந்த சாஸ்திரங்களில் எட்டு நுால்கள் எழுதியுள்ளார்.