sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மகாபாரத மாந்தர்கள் - 36

/

மகாபாரத மாந்தர்கள் - 36

மகாபாரத மாந்தர்கள் - 36

மகாபாரத மாந்தர்கள் - 36


ADDED : ஏப் 29, 2022 08:34 AM

Google News

ADDED : ஏப் 29, 2022 08:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திரவுபதியாகிய நான்...

ஐந்து பெண்களின் பெயர்களைக் கூறினால் ஒருவர் தன் அனைத்துப் பாவங்களிலிருந்தும் விடுபட்டு விடுவார் என்றனர் சான்றோர்கள். அந்தப் பட்டியலில் அகலிகை, குந்தி, தாரை, மண்டோதரி இவர்களோடு என் பெயரும் இருக்கிறது. மற்ற மூவரும் ராமாயணத்தில் இடம் பெறுகிறார்கள். குந்திதேவியும் நானும் மகாபாரத காலத்தைச் சேர்ந்தவர்கள்.

என் பிறப்பு வித்தியாசமானது. நான் எந்தத் தாயின் வயிற்றிலும் பிறக்கவில்லை.

துரோணருக்கும் என் தந்தை துருபதருக்கும் இடையே நடைபெற்ற போரில் துரோணர் வென்றார். பாஞ்சால ராஜ்ஜியத்தில் பாதியை எடுத்துக் கொண்டார் துரோணர். மீதிப் பாதியை துருபதருக்குப் 'பிச்சை அளித்தார்'. இதனால் மனம் குன்றிய துருபதர் துரோணரை எப்படியாவது பழி தீர்க்க வேண்டும் என்று விரும்பினார். அப்படிப் பழி தீர்க்க தனக்கு சக்திமிக்க ஒரு மகன் தேவை என்று எண்ணி ஒரு யாகத்தை செய்தார். அந்த யாகம் முடிந்ததும் அதை நடத்திய முனிவர்கள் யாகத்தின் பலனாக வந்த பிரசாதத்தை துருபதனின் மனைவியான ப்ரிஷடி என்பவரிடம் கொடுத்து அருந்தச் செல்ல, அவர் அதை உடனே அருந்தாமல் தான் நீராடிவிட்டு வந்த பிறகு அருந்துவதாகக் கூறிவிட்டு சென்றுவிட்டார். இதற்காகக் காத்திருக்க முடியாது என்று கருதிய முனிவர்கள் அந்தப் பிரசாதத்தை யாகத்தீயில் கொட்டி விட்டனர். யாகத் தீயிலிருந்து ஓர் இளைஞனும் ஓர் இளம்பெண்ணும் தோன்றினார்கள். அந்த இளம்பெண்தான் நான்.

நான் தீயிலிருந்து தோன்றியபோது ஓர் அசரீரி கேட்டது. 'கருநிறம் கொண்ட இந்த பெண் வருங்காலத்தில் மங்கையரில் முதன்மையானவளாகக் கருதப்படுவாள். அதேசமயம் பல க்ஷத்ரியர்களின் அழிவுக்கும் காரணமாவாள். 'யாகத்தில் என்னோடு தோன்றிய என் சகோதரனின் பெயர் திருஷ்டத்யும்னன். எனக்கு என் தந்தை வைத்த பெயர் கிருஷ்ணா. ஆனால் துருபதனின் புதல்வி என்பதால் என்னை திரவுபதி என்றே அழைத்தார்கள். என்னைப் பேரழகி என்று பிறர் கூறுவதுண்டு. என்னை சரியான வரனுக்கு மணமுடிக்க வேண்டுமே என்ற கவலை என் தந்தைக்கு எழுந்தது.

தீ வைக்கப்பட்ட அரக்கு மாளிகையிலிருந்து பாண்டவர்களும் அவர்கள் அன்னை குந்தியும் ஒருவாறு தப்பினர். உண்மை உருவத்தோடு தொடர்ந்தால் துரியோதனன் மீண்டும் தங்களுக்கு தீங்கு விளைவிப்பான் என்று கருதி பிராமணர்கள் உருவில் தோற்றமளிக்கத் தொடங்கினார்கள் பாண்டவர்கள். ஒரு கிராமத்து மக்களை சித்ரவதை செய்து வந்த பகாசூரன் என்ற அரக்கனை பீமன் கொல்ல, அந்த கிராமத்தினரின் அன்புக்கு பாண்டவர்கள் பாத்திரமானவர்கள். அந்த கிராமத்திலேயே அந்த ஆறு பேரும் கொஞ்ச காலம் தங்கினார்கள்.

அப்போது என் தந்தையாகிய பாஞ்சால மன்னன் துருபதன் எனக்கு சுயம்வரம் நடத்தப்போவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு பாண்டவர்களையும் எட்டியது. அதைப் பார்வையிட பாண்டவர்கள் தீர்மானித்தனர். பாஞ்சாலம் நோக்கி வரத் தொடங்கினார்கள்.

என் தந்தைக்கு அர்ஜுனரையே தன் மாப்பிள்ளை ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று விருப்பம். ஆனால் பாண்டவர்கள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியாத நிலை. அதே சமயம் உயிரோடு இருந்தால் சுயம்வர அறிவிப்பைக் கேட்டு விட்டு அர்ஜுனர் எப்படியும் அதில் அவர் கலந்து கொள்ள வருவார் என்றும் நம்பினார். அர்ஜுனர் வில்வித்தையில் கைதேர்ந்தவர் என்பதால் வில்வித்தையை அடிப்படையாகக்கொண்டு சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சக்திவாய்ந்த கிந்தூரா என்ற வில் வைக்கப்பட்டது. உயரமான பகுதியில் தங்க மீன் ஒன்று சுற்றிச் சுற்றி வரும் வகையில் நிறுவப்பட்டிருந்தது. வில்லில் நாணேற்றி அம்பினால் அந்தத் தங்க மீனை வீழ்த்த வேண்டும். இதில் இன்னொரு சவாலும் இருந்தது. நேரடியாக அந்தத் தங்க மீனை நோக்கியபடி அம்பை விடக் கூடாது. அந்த தங்க மீனின் உருவம் பிரதிபலிக்கும் வகையில் கீழே ஒரு சிறிய குளம் உருவாக்கப்பட்டிருந்தது. குளத்தில் தெரியும் அந்த பிம்பத்தை பார்த்தபடிதான் அம்பை மேல்நோக்கி விட்டு அந்த மீனை வீழ்த்த வேண்டும்.

பாரதத்தின் பல பகுதிகளிலிருந்தும் அரசர்களும் இளவரசர்களும் அந்தப் போட்டிக்கு வந்து சேர்ந்தனர். எல்லோரையும் என் தந்தையாகிய பாஞ்சால மன்னன் மனதார வரவேற்றார். பதினாறு நாட்கள் விருந்தோம்பல் நடைபெற்றது. சுயம்வரத்தைக் காண பல அந்தணர்களும் கூட வந்திருந்தனர். அவர்களோடு அந்தணர்கள் உருவத்தில் பாண்டவர்களும் அமர்ந்திருந்தனர்.

என் சகோதரன் திருஷ்டத்யும்னன் அனைவரையும் வரவேற்றார். வந்திருந்த மன்னர்களின் பெயரை அறிவித்தார். கவுரவர்களும் கர்ணனும் கூட வந்திருந்தனர். யாதவ குலத்தைச் சேர்ந்த கிருஷ்ணர், பலராமர், சாத்யகி போன்றவர்களும் வந்திருந்தார்கள்.

யாதவர்களில் யாரும் போட்டியில் பங்கு பெறக்கூடாது என்று கண்ணன் கூற, அதை மற்றவர்கள் ஏற்றனர்.

கண்ணன் பலராமரை நோக்கி பிராமணர்கள் நடுவே பஞ்சபாண்டவர்கள் அங்கு அமர்ந்து இருந்ததை காட்டினார். அரக்கு மாளிகையில் நடைபெற்ற தீ விபத்திலிருந்து தப்பித்துவிட்ட பாண்டவர்களைப் பார்த்து பலராமர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் இந்தப் பின்னணியெல்லாம் எனக்கு அப்போது தெரியாது.

ஒவ்வொரு அரசராக அழைக்கப்பட்டனர். அவர்களில் எவராலும் சரியான முறையில் அம்பைத் தொடுத்து மீனை வீழ்த்த முடியவில்லை. அந்த வில்லில் நாணேற்றத் தொடங்கியபோதே பலரும் துாக்கி எறியப்பட்டனர். அவ்வளவு வலிமை வாய்ந்ததாக இருந்தது அந்த வில். சிசுபாலன், ஜராசந்தன், துரியோதனன் போன்ற ஒவ்வொருவரும் இந்த முயற்சியில் தோல்வி கண்டனர். கர்ணனும் மயிரிழையில் தோல்வி கண்டார். இவர்களின் தோல்வியைக் கண்ட பல மன்னர்கள் அந்த போட்டியில் பங்கு பெறாமல் பின்வாங்கினர். ஒரு கட்டத்தில் சுயம்வரத்தில் போட்டியில் வெல்ல யாருமே இல்லாத நிலை உண்டாக, என் தந்தை மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

அப்போது அர்ஜுனர் எழுந்து அந்தப் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தார். கூடியிருந்த பிராமணர்களில் ஒரு பகுதியினர் மகிழ்ச்சி ஆரவாரம் செய்ய, மீதிப்பேர் அரச வம்சத்தினராலேயே செய்ய முடியாத ஒரு காரியத்தை பிராமணனான இவன் எப்படி செய்யப் போகிறான் என்று வியப்பாகப் பார்த்தனர். தான் போட்டியில் கலந்து கொள்ளலாமா என்று அர்ஜுனர் கேட்க, என் சகோதரன் சம்மதித்தார்.

அர்ஜுனர் கண்மூடிப் பிரார்த்தனை செய்தார். பின் அம்புகளை அந்தத் தங்க மீனை நோக்கி குறி பார்த்துச் செலுத்த, அந்த மீன் கீழே விழுந்தது. நான் அர்ஜுனருக்கு மாலையிட்டேன்.

பாண்டவர்கள் அப்போது ஒரு மண்பாண்டம் செய்பவரின் வீட்டில் தங்கியிருந்தனர். அந்த வீட்டுக்குச் செல்லும் வழியில் பாண்டவர்கள் தங்களைப் பற்றிய உண்மையை எனக்குத் தெரிவித்தனர்.

தனது புதல்வர்கள் சுயம்வரத்தை வேடிக்கை பார்க்கச் சென்றதாகத்தான் அன்னை குந்தி நினைத்துக் கொண்டிருந்தார். என்னை அழைத்துச் சென்ற அர்ஜுனர் வாசலில் நின்றபடி 'அம்மா, நான் ஒரு விலை மதிக்க முடியாத பரிசைக் கொண்டு வந்திருக்கிறேன்' என்று என்னைப் பற்றி அறிவிக்க, விவரம் அறியாத குந்திதேவி உள்ளே இருந்தபடி,'நீங்கள் ஐவருமே அதைப் பங்கிட்டுக் கொள்ளுங்கள்' என்று கூறிவிட்டார்.

அன்னையின் ஆணையை முழுவதுமாக செயல்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்த பாண்டவர்கள் திடுக்கிட்டனர். உண்மையை உணர்ந்து கொண்டதும் குந்தி தேவியும் அதிர்ச்சி அடைந்தார். தான் கூறியதை நிறைவேற்ற வேண்டாம் என்றார். இந்த நிலையில் 'அர்ஜுனன் மட்டுமே திரவுபதியை மணம் முடிப்பான். நாங்கள் நால்வரும் துறவறம் பூணுவோம்' என்றார் யுதிஷ்டிரர். துறவறம் என்பது அடுத்த பிறவிக்கு சமம். எனவே 'இந்தப் பிறவியில்' அன்னையிட்ட ஆணையை நிறைவேற்றாதது குற்றமாகாது என்ற நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்பது அவர் எண்ணம். ஆனால் தன் சகோதரர்கள் நான்கு பேரும் துறவறம் பூண்டால் அந்த நிலையில் அர்ஜுனனும் நானும் எப்படி நிம்மதியாக வாழ்க்கை நடத்துவோம் என்ற கேள்வி எழுந்தது.

அப்போது கண்ணன் அங்கு வந்து சேர்ந்தார். 'திரவுபதி, நீ ஓர் இளவரசி மட்டுமல்ல ஹஸ்தினாபுரத்தின் வருங்கால மகாராணி ஆகவிருப்பவள். எனவே மக்கள் கோணத்திலும் நீ யோசிக்க வேண்டும். இப்போதைய சூழலில் நீ யாரையும் திருமணம் செய்து கொள்ள மறுத்து உன் தந்தையிடமே கூட சென்று விடலாம். ஆனால் அம்பைக்கு நேர்ந்த கதி உனக்கும் நேர்ந்து விடக்கூடாது. அத்தனை பேர் நடுவில் அர்ஜுனன் உனக்கு மாலையிட்டு இருக்கிறான். இதன் காரணமாக வேறு யாருமே உன்னைத் திருமணம் செய்து கொள்ள முன் வராமலும் போகலாம். அர்ஜுனனைத் தவிர மீதி நான்கு பாண்டவர்களும் துறவறம் பூண்டால் அர்ஜுனனும் வாழ்க்கையில் சுவாரசியத்தை இழந்து விடுவான். அவன் மனம் குற்ற உணர்வில் குன்றிப்போகும். குந்தி தேவியும் வேதனையில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடும். இப்படிப்பட்ட சூழலில் துரியோதனன் ஆட்சிக்கட்டிலில் அமர வாய்ப்பு அதிகம். மக்களுக்கு நல்லாட்சி கிடைக்காமல் போகும்' என்று பலவாறாக எடுத்துக் கூறினார். நானும் ஐவரையும் மணமுடிக்க சம்மதித்தேன். தவிர இதற்கு வேறொரு முக்கிய பின்னணியும் இருந்தது. அதை அடுத்துப் பகிர்ந்து கொள்கிறேன்.

-தொடரும்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள புத்துாரில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த இடத்தைச் சுற்றி முன்பு நிறைய பாம்புப் புற்றுகள் இருந்ததாகவும், அதனாலேயே இந்தப் பகுதி புற்றுார் என அழைக்கப்பட்டு, நாளடைவில் புத்துார் என்றானதாகவும் சொல்வர். மன்னர்கள் போருக்குப் புறப்படும் முன் இங்கு சிறப்பு பூஜைகள் செய்வது அக்கால வழக்கம். கிழக்கு நோக்கிய இக்கோயிலில் அழகிய முகப்பு மண்டபத்தைக் கடந்ததும் மகா மண்டபம் உள்ளது. அதை அடுத்துள்ள கருவறையில் அன்னை திரவுபதி அமர்ந்த நிலையில் இருக்கிறாள்.

இடதுபுறம் அனுமன், சிவன், முருகர், சத்திய நாராயணர், விஷ்ணு துர்கை சன்னதிகளும், வலதுபுறம் தட்சிணாமூர்த்தி, நடராஜர், சிவகாமி, கிருஷ்ணர் சன்னதிகளும் உள்ளன.

கருவறையின் இடதுபுறம் தனி சன்னிதியில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் அருள்புரிகிறார். அன்னையின் கருவறை முகப்பில் கற்பக விநாயகர். பால முருகன் உள்ளனர். மகாமண்டப வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் உள்ளனர். பிரகாரத்தில் காலபைரவர் இருக்கிறார். அரசு, வேம்பு, வன்னி ஆகியவை தல விருட்சமாக உள்ளன.

தை மாத வெள்ளியன்று திரவுபதி அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கும். சித்திரை மாத பவுர்ணமியில் பாற்குட ஊர்வலம் நடக்கிறது. ஆடி வெள்ளியன்று கூழ் வார்க்கும் திருவிழாவும், நவராத்திரி விழாவும் சிறப்பாக நடத்தப்படுகின்றன. கன்னி பெண்கள் இங்கு வேண்டினால் விரைவில் திருமணம் நடைபெறும்.

ஜி.எஸ்.எஸ்.

aruncharanya@gmail.com






      Dinamalar
      Follow us