sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பச்சைப்புடவைக்காரி - 48

/

பச்சைப்புடவைக்காரி - 48

பச்சைப்புடவைக்காரி - 48

பச்சைப்புடவைக்காரி - 48


ADDED : ஏப் 06, 2023 12:22 PM

Google News

ADDED : ஏப் 06, 2023 12:22 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜோசியம் பொய்த்தது

முன்னறிவிப்பின்றி என் அறைக்குள் நுழைந்தவரைப் பார்த்து அதிர்ந்தேன். ராஜாமணி. பெரிய ஜோசியர்.

“பயமா இருக்கு. உங்ககிட்ட சொல்லிட்டு என் தொழிலையே விடலாம்னு இருக்கேன்”

“என்னாச்சு?”

சேதுராமன் என்னும் செல்வந்தர் மந்தை வெளியில் உள்ள ஒரு சிறிய ஜோசியரிடம் ஜாதகத்தைக் காட்டிப் பலன் கேட்டிருக்கிறார். சேதுராமனுக்கும் அவரது சகோதரர் முருகேசனுக்கும் சொத்து விஷயமாக பல வருடமாக வழக்கு நடக்கிறது. முடிவு எப்படி இருக்கும் என கேட்டிருக்கிறார்.

ஜோசியர் ஒரு பெரிய குண்டைத் துாக்கிப் போட்டார்.

“இன்னும் ஐந்தே நாளில் உங்களுக்கு மரணம் சம்பவிக்கும்”

“ஐயையோ! ஏதாவது பரிகாரம்''

“ ஏது பரிகாரம்? கடவுளைக் கும்பிடுங்க. அடுத்த பொறப்பு நல்லபடியா இருக்கும்”

அதிர்ந்த சேதுராமன் ராஜாமணியிடம் ஓடினார்.

ஜாதகத்தை பார்த்தவுடன் மரணம் வரவிருப்பதைக் கண்டுபிடித்து விட்டார் ராஜாமணி. என்றாலும் சொல்ல மனம் வரவில்லை.

“அவசரமா ஊருக்குப் போறேன். அடுத்த வாரம் வாங்களேன்”

“அதுக்குள்ள செத்திருவேனே! மந்தைவெளி ஜோசியக்காரன் சொல்லிட்டானே!”

“சேச்சே! அவன் போட்ட கணக்கு தப்பு. எண்பது வயசு வரை இருப்பீங்க”

மனமறிந்து பொய் சொன்னார் ராஜாமணி.

நடந்ததை எல்லாம் சொல்லி புலம்பினார் ராஜாமணி.

“அந்தாளோட ஜாதகத்த எந்த கத்துக்குட்டிக்கிட்ட காட்டினாலும் அஞ்சு நாள்ல செத்திருவான்னு சொல்லிருவான். எனக்கு அப்படிச் சொல்ல மனசு வரல”

“நல்லது தானே! நல்லவனா நடந்திருக்கீங்க. இதுக்கா என்ன தேடி வந்தீங்க?”

“இல்ல. ஒரு வாரம் கழிச்சி சேதுராமன் போன் செஞ்சாரு. நாலஞ்சு நாள்ல என்னப் பாக்க வர்றேன்னு சொன்னாரு”

“சந்தோஷமான விஷயம் தானே!”

“என் ஜோசியம் தப்புன்னு ஆயிருச்சே? இனிவாழ்ந்தா என்ன செத்தா என்ன'' “ஜோசியத்தையும் தாண்டி அற்புதம் நடந்திருக்கு. அதை பச்சைப் புடவைக்காரிதான் நடத்தியிருக்கணும்”

“ஜாதகப்படி மரணம் நிச்சயம். ஜாதகத்துல ஒளிஞ்சிக் கிட்டிருந்த ஏதோ ஒண்ணுதான் பொழைக்க வச்சிருக்கு. அது ஏன் என் கண்ல படல? காரணம் தெரியற வரைக்கும் ஜோசியம் பார்க்கமாட்டேன். ஒருவேளைதான் சாப்பிடுவேன். தாய் மீது ஆணை”

“வேண்டாம். உங்களுக்கு பிரஷர், சுகர் எல்லாமே இருக்கு''

“நா சாகணும்னு நெனசிட்டா போல”

ஜோசியர் சென்றவுடன் தொய்வுடன் படிகளில் இறங்கினேன். கடைசிப் படியில் ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.

“யாரும்மா வழிய மறிச்சிக்கிட்டு?”

“வழியே நான்தான்”

தாயை வணங்கினேன்.

“ஜோசியர் கணிப்பில் தவறில்லை. அவன் எப்படி பிழைத்தான் எனச் சொல்கிறேன்”

காட்சி விரிந்தது. அன்று சேதுராமனின் மரணம் சம்பவிக்கவேண்டிய நாள். அவர் வீட்டிலிருந்து அலுவலகத்திற்குக் காரில் சென்று கொண்டிருந்தார்.

சேதுராமனின் அலுவலக வாசலில் ஆயுதங்களுடன் அவரது அண்ணன் முருகேசன் அனுப்பிய கூலிப்படையினர் நின்றிருந்தனர். சேதுராமன் இறங்கியவுடன் அவரை கண்ட துண்டமாக வெட்டி விட்டு ஓடுவது திட்டம்.

சேதுராமனின் மனதில் மரண பயத்தையும் தாண்டி அதீத உளைச்சல் இருந்தது. ஜோசியர் சொன்னது உண்மையானால் இன்று இறந்து விடுவார். சாகும்போது சகோதரனுடன் பகை எதற்கு? விட்டுக் கொடுத்தால் என்ன? எனத் தோன்றியது.

“வண்டியை அண்ணன் வீட்டுக்கு விடு” என்றார். டிரைவர் வியப்புடன் பார்த்தான்.

அண்ணன் வீட்டில் நுழையப்போன சேதுராமனை அடியாட்கள் தடுத்தனர். சத்தம் கேட்டு முருகேசன் ஓடிவந்தார்.

“ரெண்டே நிமிஷம்.பேசிட்டு போயிடறேன்”

முருகேசன் கையசைக்க ஆட்கள் விலகினர்.

“நிலத்துல யாருக்கு முன்பாதி, யாருக்குப் பின்பாதின்னு பத்து வருஷமா கேஸ் நடத்திக்கிட்டிருக்கோம். மொத்த நிலத்தையும் நீங்க எடுத்துக்கங்க. சொத்தவிட எனக்கு நீங்க தான் முக்கியம். என்ன மன்னிச்சிருங்க. எனக்கு ஏதாவது ஆச்சின்னா வராம இருந்துராதீங்க”

முருகேசன் ஓடிவந்து தம்பியைத் தழுவினார்.

“தம்பி எதுவும் ஆகாதுடா நுாறு வருஷம் இருப்ப. அந்தச் சொத்த வித்து சரி பாதிய உனக்கும் தர்றேன்.”

“வேண்டாம்ணே. என் பங்க வச்சி நம்ம ஊர் பள்ளிக்கூடத்துக்கு கட்டடம் கட்டிக்கொடுங்க”

“ஏண்டா தம்பி திடீர்ன்னு இப்படி பேசற?”

“நான் செத்திருவேன்னு மந்தைவெளி ஜோசியன் சொல்லிட்டான். அடுத்த ஜென்மத்துல அண்ணன் தம்பியா பொறப்போமா தெரியாது. ஜென்மம் முடியும்போது எதுக்கு பகை? என் சாவுக்கு நீங்க வரணும்னே!”

இருவரும் பாசமழையில் நனைந்தனர்.

காட்சி முடிந்ததும் பச்சைப் புடவைக்காரியிடம், “சேதுராமன் செத்து விடுவார் என ஜாதகம் தெளிவாகக் காட்டியதே! ஜோசியர்களும் சரியாகத்தானே சொன்னார்கள். அந்த மனிதர் எப்படி பிழைத்தார்?”

“பத்து வருடங்களுக்கு முன்பு திருவான்மியூர் நிலம் விஷயமாகச் சண்டை வந்த போது நண்பர்கள் துாண்டுதலால் அண்ணனையும் அவனது குடும்பத்தையும் கண்டபடி பேசி விட்டான். வழக்கு தொடுத்தான். அவன் மனதில் போட்ட துவேஷ விதை அவனையே அழிக்கும் விஷ மரமாக வளர்ந்தது. மரணம் நிகழப் போகிறது என்பதை ஜாதகமும் காட்டிவிட்டது.

“இன்னும் ஐந்து நாளில் சாகப் போகிறோம் என்ற அதிர்ச்சியில் சேதுராமன் மனதில் ஞானம் பிறந்தது. சொத்தைவிட சகோதரனின் அன்பு முக்கியம் என புரிந்துகொண்டான். அந்த புரிதல்தான் அவன் உயிரைக் காப்பாற்றியது”

“யாரிடம் கதை விடுகிறீர்கள்? சேதுராமனைக் காப்பற்றியது நீங்கள். ஐயோ பாவம் மனதில் நிறைந்திருக்கும் வன்மத்தால் மரணமடையப் போகிறாரே என பரிதாபப்பட்ட நீங்கள் மந்தைவெளி ஜோசியனிடம் அனுப்பி வைத்தீர்கள். ஜோசியனை ஐந்து நாட்களில் மரணம் எனச் சொல்லவைத்து அதிர்ச்சி வைத்தியம் செய்தீர்கள். மரண பயம் என்ற ஊசியின்மூலம் சேதுராமனிடம் அன்பென்னும் அமுதத்தைச் செலுத்தி சாவைத் தடுத்தீர்கள். அது இருக்கட்டும், இந்தக் கூத்தில் ராஜாமணியை ஏன் இழுத்தீர்கள்?”

“அவன் மனதில் அகங்காரம் முளைவிட ஆரம்பித்திருக்கிறது. அதைக் கிள்ளியெறிய அவனையும் நாடகத்தில் சேர்த்துக்கொண்டேன். ராஜாமணியிடம் என்ன சொல்லப்போகிறாய்?”

“கிரக சஞ்சாரங்களை பார்த்து நீங்கள் வருங்காலத்தைக் கணிக்கிறீர்கள். அந்தக் கிரகங்கள் எல்லாம் பச்சைப்புடவைக்காரியின் கால் சுண்டுவிரலின்கீழ் அவள் ஆணைக்காகக் காத்திருக்கும் சிறு பூச்சிகள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்பேன்”

“துவண்டு விடுவானே!”

“மாட்டார் தாயே! சேதுராமனிடம் அவர், 'உங்க ஆயுசு கெட்டி, எண்பது வயது வரை இருப்பீங்கன்னு ஆறுதலுக்காகச் சொன்னது உண்மையாகி விட்டதே”

-தொடரும்

வரலொட்டி ரெங்கசாமி

varalotti@gmail.com






      Dinamalar
      Follow us