ADDED : ஏப் 06, 2023 12:21 PM

கோவிந்தன் புகழ் பாடும் கோதை
கலியுகத்தில் கடவுளின் திருப்பெயர்களை உச்சரிப்பதே மோட்சம் அளிக்கும் என்கிறார்கள் ஆன்றோர்கள். அதனால் தான் குழந்தைகளுக்கு கடவுளின் பெயர்களை இட்டு அழைக்கிறோம்.
சிவனின் பெயர்களில் 'ஹர' என்பதற்கும் விஷ்ணுவின் பெயர்களில் 'கோவிந்தா' என்பதற்கும் தனிச்சிறப்பு உண்டு. தான் எடுத்த அவதாரங்களில் கிருஷ்ணாவதாரமே தனக்கு பிடிக்கும் என்று சொன்ன கண்ணன், தன் நாமங்களில் கோவிந்தா என்ற நாமமே மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறான். 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி மேலோங்க சொல்வதால் பாவம் பறந்தோடும். அந்தப் பெயரில் அப்படி என்ன மந்திர மாயம் இருக்கிறது? 'கோவிந்தா' என்ற இந்த ஒற்றைச் சொல் அவனது பத்து அவதாரங்களை குறிக்கும். கோ என்றால் உலகம் எனவும் விந்தன் என்றால் காப்பாற்றுபவன் என்றும் பொருள். உலகிலுள்ள உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவன் என்பது பொருள். கோ என்பதற்கு வேதம் என்ற பொருளும் உண்டு.வேதத்தை மீட்டுத் தந்த மச்சாவதாரத்தை குறிக்கிறது. கோ என்பதற்கு மலை என்றும் பொருளுண்டு. மலையைத் தாங்கிய கூர்மாவதாரத்தையும் கோவிந்தம் நினைவூட்டுகிறது.
இது மட்டுமா? இந்த பூமியைக் கோ எனலாம். கோவிந்தா என்று சொல்லும் போது இந்த பூமியை கொம்பினால் துாக்கிய வராக அவதாரம் மனதில் தோன்றுகிறது. அத்துடன் கோ என்றால் ஆயுதம் என்றும் நீள்கிறது. கடல் நீரை சரித்து பூமியை கலப்பையால் இழுத்ததால் பலராமனுக்கும் கோவிந்தன் எனப் பெயர் வந்தது. இன்னும் 'கோ' என்னும் சொல்லுக்கு பொருள் நீள்கிறது. 'கோ' என்றால் பசு. பசுக்களை ரட்சித்தவன் என்பதால் கண்ணனுக்கும் கோவிந்தன் என்று பெயர். அப்பப்பா எத்தனை பொருள்கள்! எத்தனை பெருமைகள்! இப்படி ஒவ்வொரு அவதாரத்திலும் கோவிந்த நாமம் ஒலிக்கிறது. அது மட்டுமல்ல, கோவிந்தா என்ற பெருமானின் திருப்பெயரை உரக்கச் சொல்லியே பழக்கம் நமக்கு. திருப்பதியில் காத்திருக்கும் போது இந்த நாமம் தான் நம் மனதை சமநிலைக்கு கொண்டு வந்து உற்சாகம் கொள்ள வைக்கிறது. ஸ்ரீரங்கம், திருப்பதியில் இந்த கோவிந்த கோஷம் பக்தர்களால் அதிகம் கையாளப்படுகிறது.
கோவிந்தன் விஷ்ணு சகஸ்ர நாமத்தில் 187வதாக வரும் பெயர். விஷ்ணுவின் 12 பெயர்களில் நான்காவது பெயராகவும் ஆன்மிக சிறப்பு மிக்க பெயர்களில் முக்கியமான ஒன்றாகவும் திகழ்கிறது. நம் பிறப்பு, இறப்பு போன்ற துன்பங்களை போக்க வல்ல பெயர் என்கிறது புராணங்கள். எப்படிப்பட்ட பாவங்களை செய்தவர்களும் கோவிந்தன் என சொன்னால் உயர்ந்த பேற்றினை அடைவர். உடலை தகனம் செய்யும்போது 'கோவிந்தா கோவிந்தா' என்று சொல்லி தீயிட்டால் இறந்தவர் மோட்சத்தை அடைவார். அப்படிப்பட்ட ஞானத்தின் தெய்வமான, குறையொன்றும் இல்லாத கோவிந்தனை போற்றி வணங்கினால் தசாவதாரங்களையும் ஒருசேர வணங்கிய பலன் கிடைக்கும். இதை உணர்ந்த கோதை, குறைகள் அனைத்தையும் தீர்த்திடும் கோவிந்த நாமாவளியை பாடி மகிழ்கிறாள். திருப்பாவையில் ஆண்டாள் 27, 28, 29 பாடல்களில் மூன்று முறை கோவிந்தனை அழைக்கிறாள்.
''கூடாரை வெல்லும் சீர்கோவிந்தா,
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா,
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா'' என்கிறாள்.
இந்த 28ம் பாசுரத்தில் வரும் குறை ஒன்றுமில்லாத கோவிந்தா என்ற வரி தான் எத்தனை சிறப்பு பெற்றது! இந்த வரியை அடித்தளமாக வைத்தே, “குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா... குறையொன்றுமில்லை கண்ணா... குறையொன்றுமில்லை கோவிந்தா'' என்று ராஜாஜி பாடல் எழுதினார். மிக அழகிய இந்த வரிகள் நம் உள்ளத்தை உருக்கி அமைதிபடுத்தும் ஆற்றல் வாய்ந்தது. இந்த வார்த்தையை பாருங்களேன்.
“ குறை ஒன்றும் இல்லாத” இதில் குறை என்னும் சொல்லும் சரி, இல்லாத என்னும் சொல்லும் சரி, இரண்டுமே எதிர்மறை வார்த்தைகள். ஆனால் இரு எதிர்மறை வாக்கியங்கள் இணையும் போது - x - - = + என்னும் சூத்திரத்திற்கு ஏற்ப ஒன்றும் என்ற சீரான வார்த்தையுடன் இணைந்து அதன் உண்மையான தன்மை நீர்த்துப்போய் நிறை என்ற அளவில் நம் மனதை பூரணமாக்குகிறது. இது ஒரு அரிதான சொல் பிரவாகம். ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டில் தொடங்கி வைத்தது இன்று எங்கும் பொதுவெளியில் உணரப்பட்டு கொண்டாடப்படுகிறது. அவள் அடியொற்றி வரும் அத்தனை செயல்களும் துலங்கும் என்பது கண்கூடு.
மனித மனம் தான், எனது என பெருமை பாராட்டுவதில் மகிழ்ந்திருந்தாலும் பிறப்பு, செல்வம், பண்பு என ஏதோ ஒரு குணம் குறித்த குறை நம்முள் இருந்து ஆட்டி வைக்கிறது. அந்த கோவிந்தனை சரணடைகிற போது குறையுள்ளவர்களாகவே தான் சரணடைகிறோம். அப்படி இருக்க, அவன் நம் குறைகளை சுட்டிக் காட்டுவதோ பெரிதுபடுத்துவதோ கிடையாது. பக்தனுடைய குறைகள் ஒன்றையும் பொருட்படுத்தாது அவனுக்கு அருள்கிறவன். அவனிடம் சரணடைந்து விட்டால் அவன் நம்மை கண்டு காப்பவனாக இருக்கிறான். அதனாலேயே அவன் நம் குறைகள் எதையும் மனதில் கொள்ளாத கோவிந்தன் என்பது எத்தனை பொருத்தமாக இருக்கிறது!
ஒரு தோழி அவருடைய மற்றொரு தோழியை எனக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது “அவளிடம் பார்த்து நடந்து கொள். இல்லாததையும் பொல்லாததையும் திரித்து பேசுவாள் என எச்சரித்தால் என்ன ஆகும்? அவளிடம் உள்ள 100 நல்ல விஷயங்களை பின்னுக்குத் தள்ளிவிடும். நம் மனம் அதையே பற்றிக் கொண்டு திரியும் தானே! இது தான் அவனுக்கும் நமக்குமான வித்தியாசம்.
குறைகள் பல இருந்தாலும் நாம் எல்லோரும் ஏதோ ஒரு விஷயத்தில் பெருமைப்பட்டுக் கொள்கிறோம். அப்படி ஆயர் குலத்தவருக்கோ அந்த கண்ணனே தங்கள் குடியில் வந்து தோன்றினான் என்று பெருமை. அந்தக் குலத்தில் உள்ள முன்னோர் எத்தனை புண்ணியம் செய்திருந்தால் ஒரு குலம் அப்படி ஒரு பாக்கியத்தை பெறும். அது குறித்த பெருமிதம் அவர்களுக்குள் இருக்கிறது. இது ஒருவிதத்தில் கவலையற்ற, சகலத்தையும் அவன் பாதங்களில் சமர்ப்பித்து விடும் வாழ்க்கை. வேறு எந்த தவங்களோ தினங்களோ வேண்டாத வாழ்க்கை. நம் கோதைக்கு இந்த ஆயர்குல வாழ்வில் பெருமிதம் உண்டு. ஆனால் இந்த பெருமிதம் எங்கே மற்றவர்களுக்குள் ஒரு அகங்காரத்தை தோற்றுவித்து விடுமோ என்ற சந்தேகம். அதனால் தன்னை முற்றிலும் சமர்ப்பணம் செய்து கொண்டு இந்த பாசுரத்தை இப்படி பாடுகிறாள்.
கண்ணா, நாங்கள் மிகவும் எளிய ஆயர்கள். மாடுகளை மேய்த்து பிழைப்பு நடத்துபவர்கள். எங்கள் முன்னோர்களின் புண்ணியத்தால் உன்னை எங்கள் குலத்தில் பெற்றோம். அதனால் உனக்கும் எங்களுக்குமான உறவானது மாற்ற முடியாது. நீ எங்கள் வீட்டுப்பிள்ளை ஆகிறாய். நீ கோகுலத்தில் அத்தனை கோபியர்களோடு நடனமாடியது போல் என் ஆய்ச்சியர் மனதோடும் நீ விளையாடுகிறாய். இதனால் அவர்கள் உன்னை திருடா, வா, போ என மரியாதை குறையுமாறு அழைத்து விட்டாலும் நீ கோபித்துக் கொள்ளாதே. உன் கோபம் எல்லாம் கூட பகைவர்களுக்கு அருள்வதாகவே முடிந்திருக்கிறது என்பதை உன் முந்தைய அவதாரங்கள் எடுத்துரைக்கின்றன. ஆனால் அப்படி கோபம் ஏதும் கொள்ளாமல் எளியவராகிய எங்களுக்கு அருள் தந்தால் போதும் என வேண்டுகிறாள் கோதை.
திரவுபதியின் ஆடையை துச்சாதனன் வலுக்கட்டாயமாக இழுத்தபோது அவள், கண்ணனை நினைத்து அவன் திருநாமங்களைச் சொல்லி அழைக்க அவளது சேலை வளர்ந்து அவள் மானம் காத்தது நாம் அறிந்ததே. கோவிந்தனுக்கும் குறையில்லை. அவனைக் கைதொழும் அடியவர்களுக்கும் குறை இல்லை. அப்படி கோதையின் கைப்பற்றி கோவிந்தனின் அருள்பெற்று தொடர்ந்து பயணிப்போம்... வாருங்கள்.
-தொடரும்
பவித்ரா நந்தகுமார்
82204 78043
arninpavi@gmail.com

