sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 12

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 12

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 12

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 12


ADDED : ஏப் 06, 2023 12:11 PM

Google News

ADDED : ஏப் 06, 2023 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்க்கண்டேயர்

மார்க்கண்டேயர் பற்றி கிருஷ்ணன் கூறவும் பாண்டவர்களிடம் ஒரு ஆச்சரிய அமைதி!

''கிருஷ்ணா! எங்களைப் பொறுத்தவரை உன்னிலும் மேலான ஒருவர் இல்லை. நீயோ மார்க்கண்டேய மகரிஷியை உயர்வாக கூறுவது வியப்பளிக்கிறது'' என்றான் சகாதேவன்.

''என் மீதுள்ள அன்பால் இப்படி கூறுகிறாய். மார்க்கண்டேயர் காலத்தையும் அந்த காலத்தை வைத்து கடமையாற்றும் மிருத்யுவான எமனையும் வென்றவர். மேலினும் மேலாய் நித்ய இளமையை தன்வசம் கொண்டவர்.

உலகில் மாறாத ஒன்றே கிடையாது. வடிவில் மாற்றம் இல்லாவிட்டாலும் செயலில் பெரும் மாற்றம் உடையவர்கள் சூரிய சந்திரர்கள். இந்த பூமி கூட ஊழிக்காலத்தில் நீரில் மூழ்கி பின் புதிதாகத் தோன்றிய ஒன்றே! இந்த மாற்றமே உயிர்களின் வாழ்வை ரசமுள்ளதாக்குகிறது. மாற்றமற்ற ஒன்றைக் கல்லான ஜடம் என்போம். கல் கூட அக்னி, நீர், காற்றால் ஆக்கிரமிக்கப்படும் போது மாறிவிடும். அதற்கு நெடுங்காலம் தேவை. நீயும் நானும் கூட மாற்றங்களாலேயே இப்போது இப்படி இருக்கிறோம். நம் குழந்தைப் பருவத்தை இளம்பருவம் விழுங்கியது. இளம்பருவத்தை விடலைப் பருவமும், விடலைப் பருவத்தை வாலிபப் பருவமும் விழுங்கின. வாலிபத்தை கிரகஸ்த பருவம் விழுங்கியது. அந்த கிரகஸ்த பருவத்தை முதுபருவம் விழுங்கும்.

இப்படி நீ, நான், நாம், மற்ற எல்லாமுமே மாற்றம் மாற்றம் என மாறிக் கொண்டிருப்பவர்களே! மாறிக் கொண்டிருப்பவைகளே...!ஆனால் மார்க்கண்டேயர் விதிவிலக்கு. இளமை மாறாதவர். அப்படி ஒரு வரசித்தி அவருக்கு! இப்போது சொல்லுங்கள். அவர் என்னிலும் மேலானவர் தானே?''

கிருஷ்ணரின் விளக்கம் பாண்டவரை வாயடைக்கச் செய்தது. அடுத்து ஆகாய கங்கையில் நீராடி வந்த மார்க்கண்டேயரின் தோற்றம் பிரமிக்க வைத்தது.

முருக்கான இளமை, மேகம் போன்ற கேசம், செதுக்கியது போல புஜங்கள், மார்பு மீது யோக வஸ்திரம், ருத்திராட்ச மாலை, விபூதி மணம் கமழ புன்சிரிப்புடன் மார்க்கண்டேயர் பாண்டவரை ஆசீர்வதித்தார். முன்னதாக கிருஷ்ணனைக் காணவும், அவன் கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றினார்.

'மகரிஷியைக் காண்பதில் மகிழ்ச்சி' என்றான் கிருஷ்ணன்

''எனக்கும் தான்'' என்றார் மார்க்கண்டேயர்.

''மகரிஷி... இவர்களே பாண்டவர்கள்'' அறிமுகப்படுத்தினான் கிருஷ்ணன்.

''பாண்டுவின் வம்சாவளிகளோ... சந்திர வம்சத்தின் மந்திர புஷ்பங்கள் ஆயிற்றே''

''சரியாக சொன்னீர். ஐந்து பூதங்களின் பிரதிநிதிகள். திரவுபதி இவர்களின் யாக புஷ்பம்''

''அது மட்டுமா... அக்னி புஷ்பமும் அல்லவா'' என கிருஷ்ணன் சொன்னதை வைத்து மேற்கொண்டு அவராக தங்களைப் பற்றி கூறியதைக் கேட்ட பாண்டவர்கள் இன்னும் அதிகம் வியந்தனர்.

''மகரிஷி பெரிதும் வியப்பளிக்கிறாரா'' எனக் கேட்டார் கிருஷ்ணன்.

''ஆம் எங்கள் வம்சம் முதல் சகலமும் அறிந்தவராக இருக்கிறாரே''

''அந்தளவுக்கு பிரசித்தமாகி விட்டீர்கள். அதிலும் துரியோதனனிடம் சூதாடிய அந்த கட்டம் இருக்கிறதே அது காலத்தால் அழிக்க முடியாத வரலாறாகவே ஆகி விட்டது! மார்க்கண்டேயரோ திரிகால ஞானி. அப்படி இருக்க உங்களை அறியாமலா இருப்பார்?''

தர்மனின் அப்போதைய நிலைக்கு காரணமான சூதாட்டம் பற்றிக் குறிப்பிடவும் தர்மனின் முகம் வாடித்தான் போனது. அதைக் கண்ட மார்க்கண்டேயரோ, ''பரந்தாமா விதியை உருவாக்கிய நீயே, அதை உணராத பாமரன் போல பேசலாமா?'' எனக் கேட்டார்.

மார்க்கண்டேயரின் கேள்வி அர்ஜுனனுக்குள் அது தொடர்பான கேள்விகளை எழுப்பியது.

''தங்கள் பதிலில் இருந்து நடப்பவை எல்லாமே விதிப்படி நடப்பதாக தெரிகிறது. அப்படியானால் மனிதன் கையில் ஏதும் இல்லையா?'' என கேட்டான் அர்ஜுனன்.

''ஏன் இல்லாமல்...''

அனைத்தும் விதிப்படி தான் நடக்கும், நடக்கவும் முடியும் என்ற பட்டறிவு மனிதனுக்கு மட்டும் தானே அருளப்பட்டுள்ளது''

''அப்படியானால் துரியோதனன் செய்தவை பாவச் செயல் இல்லையா? அவன் அப்படி எங்களுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்பது அவன் விதியா''

''ஆம்... அவன் அப்படி நடந்தால்தானே, நீங்கள் வனவாசி ஆகி என் போன்றோரை சந்திக்கும் நிகழ்வு நடக்கும்''

''மகரிஷி உங்கள் பதில் மனநிறைவை தர மறுக்கிறது. ஒரு பாவமும் அறியாத நாங்கள் வனத்தில். பாவத்தையே மூச்சாக கொண்ட துரியோதனாதியர்கள் அரச சபையில்! இது நியாயமா? ஒரு விதி இப்படி அநியாயமாகவும் இருக்க முடியுமா?''

'' நீ எப்படி பார்க்கிறாய் என்பதை பொறுத்தது. எங்கிருந்து பார்க்கிறாய் என்பதையும் பொறுத்தது. உண்மையில் நியாயம், அநியாயம் என்ற ஒன்று கிடையாது.

காட்டில் பாம்பு ஒன்று இருக்கிறது என வைத்துக் கொள். அதைக் கண்டால் தவளை நடுங்கும். அதையே கருடன் கண்டால் உற்சாகமாக உணவு கிடைத்ததாக கருதும்.

பாம்பு இதை நிகழ்த்தவில்லை. அது அதுவாகவே உள்ளது. சுற்றி நடப்பவை அதனதன் தன்மைக்கேற்ப நடக்கின்றன. இதுவே படைப்பின் அமைப்பு''

''மகரிஷி... அறிவு சார்ந்து கேட்ட கேள்விக்கு உணர்வு சார்ந்த உதாரணத்தை சொல்லியுள்ளீர்கள். இது பொருத்தமாக தோன்றவில்லை. எல்லாம் விதிவசம் என்றால் அந்த விதி எவர் வசம்'' என வினா எழுப்பினான் அர்ஜுனன்.

''அது ஆதிசக்தியின் வசம். அதுதான் ஆரம்பம். அதுவே மூலம்''

''அப்படியானால் ஆதிசக்தியே நாங்கள் கஷ்டப்படவும், துரியோதனாதியர் பாவம் செய்யவும் காரணமா''

''ஆம்''

''என்றால் எங்கள் துன்பத்திற்கு காரணம் விதி என்பது எப்படி பொருந்தும்? அந்த ஆதிசக்தியல்லவா காரணம்''

''அர்ஜுனா! உணர்ச்சிப் பெருக்கில் பேசுகிறாய். சிந்தித்துப் பேசு. உங்களுக்கான வாழ்வை விளையாட்டாக எடுத்துக் கொள். உண்மையும் அதுதான்! விளையாட்டில் வெற்றி, தோல்வி உண்டு. இதில் வெற்றி எப்போதும் விருப்பத்திற்கு உரியது. அதனால் தோல்வியை தவிர்க்க நாம் முற்படுவோம். நம்மை போலவே எதிர்த்து விளையாடும் எதிரியும் முற்படுவான். இதனால் போட்டி உருவாகும். அங்கு தான் விதி முளைக்கிறது! அந்த விதி இரு சாராருக்கும் பொதுவானது. அதனாலேயே இரு சாராரும் குறுக்குவழிகளை நாடாமல் தங்கள் திறமையை பயன்படுத்துவர். இதில் வெற்றி இலக்கை நோக்கி நடப்பது தான் திறமை என்றால், உன்னை தடுத்து விழச் செய்து நீ வெற்றியை அடைய முடியாதபடி செய்வதே எதிரியின் திறமை.

அந்த வகையில் உன்னை எதிரி தடுத்திடும் போது, எதிரியை நீயும் தடுப்பாய். மொத்தத்தில் இங்கே திறமை என்பது கவனமாய் திறமையாய் விளையாடுவது என்பது மட்டுமல்ல. அதே அளவு எதிரியை தடுத்து நிறுத்துவதும் தான்!

ஒரு கத்தியானது பழத்தையும் நறுக்கும். அதை நறுக்குபவர் விரலையும் நறுக்கும். கத்திக்கு வெட்ட மட்டுமே தெரியும். அதற்கு புத்தி கிடையாது. விதியும் கத்தியைப் போன்றே செயல்படும். அப்படிப்பட்ட விதியின் வசம் நாம் எப்படி சிக்குகிறோம் என்பதில் தான் எல்லாமே உள்ளது''

மார்க்கண்டேய மகரிஷியின் விளக்கம் பாண்டவர்களுக்கு புரிதலை தந்தாலும் மனநிறைவைத் தரவில்லை.

இதை கவனித்த கிருஷ்ணன், ''அர்ஜுனா! நான் எவ்வளவோ கூறியுள்ளேன். என் உபதேசங்களை நீ உணரவில்லை என்பது புரிகிறது. அவற்றை ஞாபகப்படுத்தி அசை போடு. மார்க்கண்டேய மகரிஷி சொன்னதன் பொருள் விளங்கும். வனவாசிகளாய் நீங்கள் திரிவதால் அதை தாழ்வாகவும், அரியணையில் அமர்ந்து நாடாள்வதால் துரியோதனன் உயர்வாகவும் தெரிவதெல்லாம் மாயை!

மாயை என்றால் நிரந்தரமற்றது என்பது அதற்கான இன்னொரு பொருள்.

உங்களின் இப்போதைய வனவாழ்வும் சரி, துரியோதனனின் அரசாட்சியும் சரி மாறும் ஒன்றே. நிரந்தரமானது என்பது மாயைக்கு நடுவில் நீங்கள் காட்டும் தெளிவும், தீர்க்கமுமே. இது போன்ற ஞானியர் தரிசனங்களும், அவர்களின் உபதேசங்களையும் மனதில் வை!'' என்றான் கிருஷ்ணன்.

-தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us