sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

விட்டலனின் விளையாட்டு - 4

/

விட்டலனின் விளையாட்டு - 4

விட்டலனின் விளையாட்டு - 4

விட்டலனின் விளையாட்டு - 4


ADDED : ஏப் 06, 2023 12:11 PM

Google News

ADDED : ஏப் 06, 2023 12:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்பில் ஒளிந்து கொண்ட மாயவன்

துக்காராம் எழுதிய 'ஆபுல்யா மஹிமானே' எனத் தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.

'தன்னுடைய மகிமையால் இரும்பை கூட பரிசக் கல் தங்கமாக மாற்றி விடும். அதுபோல என் குற்றங்களை மனதில் கொள்ளாமல் அருள்புரிவாய் பாண்டுரங்கா. அசுத்தமான நீரை கங்கை அமங்கலமாகக் கருதுவதில்லை. கஸ்துாரி தன்னுடன் சேர்ந்த மண்ணுக்கும் வாசனையைக் கொடுக்கிறது அல்லவா?'.

...

'ஏகநாதர், ஞானேஸ்வரர், துக்காராம், சக்குபாய், சாவ்தாமாலி இவங்க மாதிரி சிலர் விட்டலன் பற்றி பாடிருக்காங்களாமே, யார் அவங்க?' என கேட்டான் மயில்வாகனன்.

'அவங்களை 'சந்த்'னு சொல்வாங்க' என்றார் பத்மநாபன்.

'அப்படின்னா?'. இந்த முறை கேள்வியைக் கேட்டது மைத்ரேயி.

'சாதுக்கள் என வெச்சுக்கலாம். வைணவ நெறியில் வாழ்ந்த சாதுக்கள். விட்டலனைப் போற்றி பாடியவங்க' என்றார் பத்மநாபன்.

'அவங்க பாடின பாடல்களை 'அபங்'னு சொல்றாங்களே அதற்கான விளக்கத்தை சொல்லுங்களேன்' எனக் கேட்டாள் பத்மாசனி.

'மராத்தியில் அபங் என்பதை தமிழில் அபங்கம்னு சொல்லலாம். பங்கமில்லாதது. அதாவது பூரணத்துவம் கொண்டது என்பது பொருள். இந்தப் பாடல்கள் ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளன. பண்டரிபுரத்தில் இந்த பாடல்களை அதிகளவில் கேட்கலாம்'.

'அப்பா இந்தப் பாடல்களை எழுதியவங்களைப் பற்றி சொல்லுங்கள்' என கேட்டான் மயில்வாகனன்.

'சொல்றேன். அவங்க ஒவ்வொருத்தர் கூடவும் கண்ணன் பழகியிருக்கான். விளையாடியிருக்கான். அவற்றை ஒவ்வொன்றாக சொல்கிறேன். சாவ்தா மாலியும் ஒரு சந்த்தான். ஏற்கனவே நான் சொல்லத் தொடங்கிய அவரது சரிதத்தைத் தொடர்கிறேன்' என பத்மநாபன் கூறியவுடன் மூவரின் முகங்களும் மலர்ந்தன.

...

சாவ்தா மாலி எழுதிய அபங்கங்கள் எந்த ஒரு பாசாங்கும் இல்லாதவை. அவர் தோட்ட வேலை செய்ததால் அது தொடர்பாகவே அவரது அபங் வார்த்தைகளும் அமைந்தன. ஒரு அபங்கத்தில் 'நான் தோட்ட வேலை செய்யும் ஜாதியைச் சேர்ந்தவன். கிணற்றிலிருந்து நீரிறைக்க என் கையில் வாளியும் கயிறும் உள்ளன. பூச்செடிகளுக்கு நீர் பாய்ச்சிட மன நிம்மதி எனும் சாமந்தி பூக்கிறது. அன்பு என்ற ஜாதிமல்லி வருகிறது. இதை கண்டு விட்டலன் ரசிக்கிறான்' என்கிறார்.

விட்டலன் பக்தர்களுடன் நேரடியாகவே விளையாடினான். அவன் தெய்வம் என்பதை உணர்ந்தும் கூட பக்தியுடன் நட்பையும் வளர்த்துக் கொண்டனர் அவர்கள். அவர்களில் முக்கிய இருவர் நாமதேவர், ஞானேஸ்வரர்.

ஒருநாள் கோயிலுக்கு சென்றபோது அங்கே விட்டலன் அதிர்ச்சி தகவலை ஒன்றைக் கூறினார். 'நான் நேரடியாகச் சென்று ஒரு பக்தனைப் பார்க்க வேண்டும். அவனுக்கு தரிசனம் தர வேண்டும். சில நாட்களுக்கு இங்கு இருக்க மாட்டேன்' என்றான்.

ஏற்க மறுத்தனர் நாமதேவரும் ஞானேஸ்வரரும். விட்டலனை விட்டு பிரிய அவர்கள் மனம் ஒப்பவில்லை. அன்று மாலை இருவரும் கோயிலுக்குச் சென்ற போது விட்டலன் சிலை அங்கு தான் இருந்தது. ஆனால் துளசி மாலையில் இருந்து வெளிவரும் நறுமணம் காணப்படவில்லை. ஆக விட்டலன் கிளம்பிவிட்டான்!

கூர்ம தாசர் என்ற பக்தன் இருப்பிடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த விட்டலனின் காதுகளை வழியில் ஒரு தோட்டத்தில் இருந்து கிளம்பி வந்த சாவ்தா மாலியின் கானம் கட்டிப்போட்டது. விட்டலன் புன்னகையுடன் சிறு நாடகம் நடத்த தீர்மானித்தான்.

பூ கொய்தபடி சாவ்தா மாலி பாடிக் கொண்டிருந்தார். அருகில் யாரோ வருவது போல தோன்றியது. ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தது சாட்சாத் விட்டலன்தான்.

நான் இருக்கும் இடத்திற்கு விட்டலன் வருகை தந்து விட்டானா! மனம் பொங்கியது. விட்டலனை நோக்கி ஓடி அவன் பாதங்களில் தலையைப் பதித்தார். ​'சாவ்தா, எழுந்திரு. ஆபத்தில் இருக்கிறேன். ஒரு உதவி தேவை' என்றான் விட்டலன்.

கடவுளுக்கு உதவியா? சாவ்தா மாலிக்கு தர்க்கரீதியாக சிந்திக்கத் தோன்றவில்லை. விட்டலனை நேரில் கண்ட பரவசத்திலிருந்து அவர் மீளவில்லை.

'என்ன வேண்டும்? கட்டளையிடுங்கள் விட்டலா' என்றான்.

சற்று தொலைவில் நாமதேவரும் ஞானேஸ்வரரும் வந்து கொண்டிருந்ததை உணர்ந்த விட்டலன் புன்னகைத்தான். பக்தர்களோடு விளையாடுவது தனி சுகம் தான். தவிர விளையாட்டு என்பதைத் தாண்டி சாவ்தா மாலியின் பேரன்பை உலகுக்கு உணர்த்த வேண்டிய நேரம் இது.

'இரண்டு திருடர்கள் துரத்திக் கொண்டு வருகிறார்கள் சாவ்தா' என்றான் விட்டலன்.

'விட்டலனுக்கு ஆபத்தா? அவர்களை அடித்து விரட்டட்டுமா?' என பதட்டமானார் சாவ்தா மாலி.

'வேண்டாம். ஒளிந்து கொள்ள ஒரு இடம் வேண்டும்' மூன்றே அடிகளில் பிரபஞ்சத்தையே அளந்த வாமனனின் மறுஉருவம் அப்போது ஒளிந்து கொள்ள இடம் கேட்டது!

'அதோ அந்த மரத்தின் பின் ஒளிகிறீர்களா?'

'கண்டுபிடித்து விடுவார்கள். சீக்கிரமாக எனக்கு உரிய இடத்தை காட்டு'

சட்டென சாவ்தா மாலிக்கு அந்த எண்ணம் உதித்தது. விட்டலனுக்குரிய இடம்! அது தன் இதயம் அல்லவா? இதயத்தில் அவனுக்கு எப்போதும் இடம் கொடுத்து வந்திருக்கிறேன். இப்போதும் கொடுக்கலாமே.

இருவரும் நெருங்கிக் கொண்டிருந்தனர். துளசி மணம் கமழும் நந்தவனத்துக்குள் நுழைந்தனர். சாவ்தா மாலி சட்டென செயல்பட்டார். அங்கிருந்த கத்தியால் தன் மார்பை கிழித்துக் கொண்டார். 'இதற்குள்ளே ஒளிந்து கொள்ளுங்கள் விட்டலா' என்றார்.

பக்தன் இதயத்தில் ஒளிய மறுப்பாரா என்ன? மாய வடிவில் மார்புக்குள் மறைந்தார்.

ஒரு துணியால் உடலின் மேற்பகுதி போர்த்திக் கொண்டார் சாவ்தா மாலி. இல்லையென்றால் பெருக்கெடுக்கும் ரத்தம் விட்டலன் இருக்கும் இடத்தை காட்டிக் கொடுத்து விடுமே!

விட்டலனைத் துரத்தும் இவர்களை சும்மா விடக்கூடாது என எண்ணியபடி பார்த்த சாவ்தா மாலிக்கு திகைப்பு உண்டானது. 'ஞான ஒளி வீசுகிறதே. கடவுள் அருளை பெற்றவர்களாகத் தோன்றுகிறதே'

நாம தேவருக்கும் ஞானேஸ்வரருக்கும் கூட பெரும் குழப்பம். அந்த தோட்டக்காரனை தாண்டி சென்றால் துளசி மணம் குறைகிறது. அதேசமயம் விட்டலன் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கவும் முடியவில்லை.

'தோட்டக்காரா, என்ன நடக்கிறது உண்மையைச் சொல்' என்று நாமதேவர் கேட்டார். ஞானேஸ்வரர் அந்தத் தோட்டக்காரனின் துணியிலிருந்து வெளிப்படும் ரத்தத்தை சுட்டிக்காட்டினார்.

விபரீதமான எண்ணம் தோன்ற இருவரும் 'விட்டலா' என அலறினர்.

விட்டலன் வெளிப்பட்டான். சாவ்தா மாலியின் மார்பில் ஏற்பட்ட காயம் சரியானது.

நடந்ததை அறிந்ததும் மூவரும் பிரமித்தனர். வந்த 'இரு திருடர்களும்' யாரென்பதை அறிந்த சாவ்தா மாலி அவர்களின் காலில் விழுந்தார்.

'விட்டலனின் பேரருள் பெற்றவர் நீங்கள். உங்களைத் தேடி விட்டலன் வந்திருக்கிறான். நாங்கள் அல்லவா உங்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்' என்றபோது அவர்கள் கைகள் குவிந்தன.

'உண்மையான திருடன்' மூவரையும் பார்த்து புன்னகைத்தான்.

'உன் பக்தி அளவற்றது சாவ்தா மாலி. தேவையான வரத்தைக் கேள்' என்றான் விட்டலன்.

'எந்த நாளும் உன்னை மறவாத நிலைவேண்டும் விட்டலா' என்றார்.

அருளினான் விட்டலன். பிறகு 'நாம் மூவரும் உடனடியாக வகுளாபுரிக்குச் செல்ல வேண்டும்' என்றான். 'உடனடியாக' என்ற வார்த்தையில் அழுத்தம் இருந்தது.

நால்வரும் கிளம்பினர்.

-தொடரும்

ஜி.எஸ்.எஸ்.,

aruncharanya@gmail.com






      Dinamalar
      Follow us