ADDED : ஏப் 27, 2023 03:03 PM

எனக்கே நோயா?
“உங்களுக்கு தேவானையம்மாவ தெரியுமா”
என் முன்பு இருந்த முப்பது வயதுப் பெண் கேட்ட கேள்வி வியப்பாக இருந்தது.
“பச்சைப்புடவைக்காரி மீது அவங்க வச்சிருக்கற பக்தி ஊரறிஞ்சதாச்சே! அவங்களுக்கு முக்காலமும் தெரியும். கஷ்டம்னு வர்றவங்களுக்கு வழி காட்டறவங்க”
“அவங்க உங்கள உடனே கூப்பிட்டாங்க”
“கிளம்பலாமா?”
ஊரின் எல்லையில் இருந்தது தேவானையம்மாவின் ஆசிரமம். அந்தம்மாவிற்கு ஐம்பது வயது. திருநீறும் குங்குமமும் பளிச்சென இருந்தது. முகத்தில் இருந்த அருள் உருக்கியது. என்னை அழைத்து வந்த பெண் வெளியேறினாள்.
“பத்து வயசுல குறி சொல்ல ஆரம்பிச்சேன். நாற்பது வருஷமா பச்சைப்புடவைக்காரி அருளால பொழைப்பு ஓடுது. என் முன்னால யார் வந்தாலும் அவங்க செஞ்ச பாவம், அதனால அவங்க அனுபவிக்கவேண்டிய துன்பம் எல்லாமே தெரிஞ்சிரும். அப்படியே சொல்லிருவேன்”
நான் பச்சைப்புடவைக்காரியின் படத்தையே வெறித்துப் பார்த்தபடி இருந்தேன்.
“ இதுவரை நான் சீக்கு வந்து டாக்டர்கிட்டப் போனதில்லை. நடுவுல கொஞ்ச நாளா வயித்து வலி இருந்தது. கைவைத்தியம் செஞ்சிக்கிட்டேன். வலி குறைஞ்சமாதிரி இருந்தது. திடீர்னு அதிகமாயிருச்சி. தாங்கமுடியாத நிலையில ரகசியமா டாக்டர்கிட்ட போனேன். டெஸ்ட் எடுத்தாங்க. கடைசியில் பெருங்குடல்ல புற்றுன்னு சொல்லிட்டாங்க. ஆப்பரேஷன் பண்ணனுமாம். அப்படியும் வியாதி குணமாவது நிச்சயம் இல்லையாம். இப்போ சாகாமச் செத்துக்கிட்டிருக்கேன்யா.யாருக்கும் துரோகம் செஞ்சதில்ல. மத்தவங்க மாதிரி பரிகாரம் பண்ணனும், ஒரு லட்சம் செலவாகும்னு கேட்டதில்ல. தெரிஞ்சதச் சொல்லுவேன். கொடுக்கறத வாங்கிப்பேன்.
எனக்கே புற்று நோய் வருதுன்னா என்ன அர்த்தம்? பச்சைப்புடவைக்காரிக்கு ஈரமில்லையா? ராட்சசியா மாறிட்டாளே”
குபுக்கென எனக்கு கண்ணீர் பொங்கியது. பச்சைப்புடவைக்காரி எனக்கு ஆயிரம் நோய்களை ஒரே சமயத்தில் கொடுத்தாலும் அவள் என் தெய்வம். நான் அவள் கொத்தடிமை. அவளை ராட்சசி என பழிக்கும் யாரும் எனக்குத் தேவையில்லை.
தேவானையம்மாவின் கண்கள் மூடியிருந்தன. கோபத்துடன் வெளியேறினேன். ஒரு பெண் வழிமறித்து, “வந்த வேலைய முடிக்காமல் போகிறாயே”
அவள் யாரென தெரிந்தவுடன் அழுகை வந்தது. “உங்களை ஈரமில்லாதவள், ராட்சசி என்கிறாள் இவள் சங்கார்த்தமே வேண்டாம்”
“இப்படிப்பட்டவர்களுக்கே உன் உதவி தேவை. உன் மனதில் அன்பு குறைந்ததால் தான் கோபம் வருகிறது”
நான் தலைகுனிந்தேன்.
“பாவம் தேவானை! வேதனையில் பேசிவிட்டாள். உன் கண்ணீர் ஒரு சொட்டு விழுந்தாலும் அவளுக்குத்தான் ஆபத்து”
பச்சைப் புடவைக்காரியை விழுந்து வணங்கினேன்.
“உன் மனம் முழுவதும் அன்பு இருக்கட்டும். பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அந்த அன்பை தேவானையிடம் கொண்டு சேர்க்கட்டும்”
மீண்டும் அறைக்குள் சென்றேன்.
“சொல்லுங்கய்யா, எனக்கே புற்று நோய் வருதுன்னா என்ன அர்த்தம்?”
நான் பேசவில்லை சீறினேன்.
“அது உங்களுக்குச் சரியான தண்டனைன்னு அர்த்தம். நீங்க செஞ்ச பாவத்திற்கு பச்சைப் புடவைக்காரி கொடுத்த தண்டனை குறைச்சல்னு அர்த்தம். பச்சைப்புடவைக்காரி அன்பின் மொத்த வடிவம்னு அர்த்தம்”
“என்ன உளறுறீங்க? குறி சொல்றதத் தவிர வேற எதுவுமே செய்யறதில்ல. யாரையும் ஏமாத்தல. நான் என்ன பாவம் செய்தேன்?”
“நீங்க செய்யறது பாவம்னே உங்களுக்குத் தெரியல. அறியாமையில செஞ்சிட்டீங்க. இருந்தாலும் நீங்க பாவம் செஞ்சீங்கன்னு நான் சொல்லும்போது உங்களுக்கு எப்படி பொத்துக்கிட்டு கோபம் வருது? கண்ணீர் முட்டிக்கிட்டு நிக்குது?
“குறிகேட்டு வரவங்களும் அப்படித்தான். எது சரி, எது தப்புன்னு தெரியாம பாவம் பண்றாங்க. பச்சைப்புடவைக்காரி அருளால அவங்க செஞ்ச பாவம் உங்களுக்கு அப்பட்டமாத் தெரியுது. நீங்க அவங்களக் திட்டறீங்க. அவமானப்படுத்தறீங்க. அழ வைக்கறீங்க. நொந்துபோய் வந்தவங்கள இன்னும் நோகடிக்கறீங்க. ஒரு தெய்வத்தோட சக்திய உங்களுக்குக் கொடுத்திருக்கா, பச்சைப்புடவைக்காரி. ஆனா ஒரு மனுஷியோட அன்புகூட இல்லேன்னா எப்படி? அளவுக்கு மிஞ்சின சக்தியும் அளவு குறைந்த அன்பும் சேர்ந்து இருந்தா அங்க முதல்ல அகந்தைங்கற நோய் வரும். அகந்தை நோயின் அறிகுறிதான் இந்தப் புற்று நோய்”
குறிகேட்டவர்களை எல்லாம் அழ வைத்த தேவானையம்மா பெருங்குரலில் அழுதாள். நான் மவுனம் காத்தேன். சில நிமிடத்தில் கண்களைத் துடைத்தபடி பேசினாள்.
“என்னய்யா செய்யட்டும்? புற்று நோய அவ கொடுத்த பிரசாதமா நெனச்சி உயிர விடவா?”
“வேண்டாம்மா. இன்னும் நாற்பது நாளைக்கு குறி சொல்லாதீங்க. கஷ்டமா இருந்தா வேற ஊருக்குப் போயிருங்க. விரதம் இருந்து பச்சைப்புடவைக்காரிகிட்ட மடியேந்தி பிச்சை கேளுங்க”
“என்னய்யா கேக்கட்டும்?”
“அவ அன்பே வடிவானவ. அந்த அன்பையே பிச்சை கேளுங்க. அதுக்கப்பறம் குறி சொல்ல ஆரம்பிங்க. கூடியமட்டுல மக்கள் செஞ்ச பாவங்கள ஞாபகப்படுத்தாதீங்க. அவங்க செய்ய வேண்டிய நல்ல காரியங்கள மட்டும் சொல்லுங்க. கொலைகாரனே வந்தாலும் அன்பா பேசுங்க. ஆறுதலா இருங்க”
“அப்படி செஞ்சா நோய் குணமாயிருமா?”
“தெரியாது. உங்க நோய ஆரம்பக் கட்டத்துலயே கண்டுபிடிச்சிட்டாங்க. சரியான சிகிச்சை எடுத்தீங்கன்னா பூரண குணமாயிரும். இல்லாட்டியம் கவலப்படாதீங்க. அன்பின்மை நோயோட செத்தா அடுத்த பொறப்பு சிக்கலாயிரும். புற்றுநோயால செத்தா அந்த பிரச்னை இருக்காது”
“மன்னிச்சிருங்க. பச்சைப்புடவைக்காரிய ராட்சசி கல்மனசுக்காரின்னு சொல்லிட்டேன்.”
“அதனால கோச்சிக்கிட்டு நான் வெளியேறிட்டேன். ஆனா அந்த ராட்சசிதான் என்னைத் தடுத்து தேவானை தெரியாம செஞ்சிட்டா. அவகிட்ட அன்பா பேசுன்னு உள்ள அனுப்பி வைச்சா”
'அம்மா' என அலறியபடி சாய்ந்தாள் தேவானையம்மா. நான் மவுனமாக வெளியேறினேன். தெரு முனையில் பச்சைப்புடவைக்காரி நின்றிருந்தாள்.
“அவளுக்கு வழிகாட்டி விட்டாய். உனக்கு என்ன வேண்டும் சொல்.”
“ஒரு பெரிய பட்டியலே வைத்திருக்கிறேன்”
“சொல்”
“தேவானையம்மா முற்றிலும் குணமாக வேண்டும்”
“தந்தேன்”
“துன்பத்திலிருப்பவர் யாராவது என்னை நாடி வந்தால் அவருக்காக பிரார்த்திக்கும் மனதை மட்டும் கொடுங்கள். அவர்களின் கடந்த காலம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ எனக்கு எதுவும் தெரியவேண்டாம்.”
“ஏன்?”
“முக்காலமும் உணரும் வல்லமை வந்துவிட்டால் அகந்தை வந்துவிடும். அன்பு போய்விடும்.”
“என்னளவு சக்தியை உனக்கு தரலாம் என்றிருந்தேன்.”
“வேண்டாம் தாயே! உங்கள் அளவு அன்பைக் கொடுங்கள் போதும்.”
“அடுத்த கணமே நீ என்னுடன் ஒன்றிவிடுவாய். பரவாயில்லையா?”
“அப்படியென்றால் அதுவும் வேண்டாம். காலமெல்லாம் உங்களுக்குக் கொத்தடிமையாக இருக்கும் பேறு மட்டும் போதும்”
அழகாகச் சிரித்துவிட்டு மறைந்தாள் அகிலாண்டேஸ்வரி.
-தொடரும்
வரலொட்டி ரெங்கசாமி
varalotti@gmail.com