sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 28, 2025 ,கார்த்திகை 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

மலரட்டும் மகிழ்ச்சி (10)

/

மலரட்டும் மகிழ்ச்சி (10)

மலரட்டும் மகிழ்ச்சி (10)

மலரட்டும் மகிழ்ச்சி (10)


ADDED : மார் 25, 2015 10:54 AM

Google News

ADDED : மார் 25, 2015 10:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காலை வேளை... கண்ணனும் அர்ஜுனனும் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.

''என்ன இருந்தாலும் அர்ஜுனா....! கர்ணனின் கொடைக்குணத்திற்கு இந்த உலகில் எதையுமே உவமை சொல்ல முடியாது.'' கண்ணனின் வார்த்தைகள் அர்ஜுனனை லேசாக முகம் சுளிக்க வைத்தன. கண்ணன் அதே ரீதியில் தொடர்ந்து பேசிக்கொண்டே போக, அர்ஜுனனுக்குக் கோபமே வந்துவிட்டது.

''நிறுத்து, கிருஷ்ணா! எனக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்துப் பார் என்னுடைய கொடைக்குணம் கர்ணனுடையதைவிட எந்த விதத்திலும் குறைந்ததில்லை என்று நிரூபிக்கிறேன்.''

மாயக்கண்ணன் கையில் இருந்த புல்லாங்குழலை லேசாக அசைத்தான். உடனே முன்னால் ஒரு பெரிய தங்கமலை தோன்றியது.

''இந்த மலையில் இருக்கும் தங்கத்தை இந்த ஊர் மக்களுக்கு இன்று இரவுக்குள் தானம் செய்.. பார்க்கலாம்.''

அர்ஜுனன் உடனே ஊரில் உள்ளவர்களை எல்லாம் அழைத்தான். வரிசையில் நிற்கச் செய்தான். கை வலிக்க வலிக்க அந்த மலையில் இருந்து தங்கத்தை வெட்டி எடுத்து ஒவ்வொருவருக்கும் வேண்டிய அளவு கொடுத்தான். கூட்டம் பெருகிக்கொண்டே போனது. அனைவரும் அர்ஜுனனை மனமார வாழ்த்தினார்கள். வள்ளல் குணத்தில் அந்தக் கர்ணனையே மிஞ்சிவிட்டான் என்று அவன் காதுபடவே சொன்னார்கள். அர்ஜுனன் கண்ணனைப் பார்த்துப் பெருமிதத்துடன் சிரித்தான். பதிலுக்கு மாயவனும் சிரித்தான்... ஆனால், அந்தச் சிரிப்பில் குறும்புத்தனமே மிஞ்சியிருந்தது.

அர்ஜுனன் அசராமல் மலையை வெட்டிக் கொடுத்துக் கொண்டேயிருந்தான். என்றாலும் மலை அப்படியே இருந்தது. குன்றிமணி அளவு கூடக் குறையவில்லை. இரவு வந்தது. அர்ஜுனனுக்கு உடம்பெல்லாம் வலி... மக்கள் வரிசை இன்னும் நீண்டுகொண்டே போனது. தங்கமும் அப்படியே இருந்தது. அவன் சோர்ந்து மயங்கி விழுந்துவிட்டான்.

மறுநாள் கர்ணன் முன்னால் அதே போல் ஒரு தங்க மலையை உருவாக்கினான் கண்ணன். அதை அனைவருக்கும் கொடுக்கச் சொன்னான்.

அந்தப் பக்கம் முதலில் வந்த ஒரு ஊர்ப்பெரியவரை அழைத்தான் கர்ணன்.

''ஐயா இது தங்க மலை. உங்களுக்கு வேண்டிய அளவு தங்கம் எடுத்துக் கொண்டு மீதம் உள்ளதை மக்களுக்குக் கொடுத்துவிடுங்கள்.''

''யார் கொடுத்தது என்று சொல்லட்டும், மன்னா?''

''என் பெயர் வெளியே வர வேண்டாம்.. இது கண்ணன் எனக்குக் கொடுத்த பரிசு. ஆகையால், உங்கள் பெயரையும், கண்ணன் பெயரையும் சொல்லி இதை எல்லோருக்கும் கொடுத்து விடுங்கள்.''

இதைப் பார்த்த அர்ஜுனன் வெட்கத்தில் தலை குனிந்தான். கண்ணன் அர்ஜுனனுக்கு ஒரு குட்டி கீதோபதேசமே செய்தான்.

''உன்னிடம் உள்ள பிரச்னை என்ன தெரியுமா அர்ஜுனா? நீ தங்கத்தைக் கொடுக்க ஆசைப்பட்டாய் என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கொடையில் உன் பெயர் விளங்க வேண்டும் என்று விரும்பினாய். உன் கையாலேயே அதை மக்களுக்குக் கொடுத்து அவர்கள் நன்றியையும் வாழ்த்தையும் பெற வேண்டும் என்று நினைத்தாய். கர்ணன் கொடையினால் வரும் பெருமையையும் சேர்த்தே கொடுத்துவிட்டான். அதனால், அவன் உன்போல் நாளெல்லாம் தங்கத்தை வெட்டிக் கொண்டிருக்கவில்லை. அதுதான் உண்மையான தர்மம்.''

இன்று நல்லவர்களிடம் காணப்படும் மிகப்பெரிய பலவீனம் இதுதான். ''நான் என் கையால் நல்லது செய்ய வேண்டும்'' என்றுதான் நினைக்கிறார்களே தவிர 'யார் செய்தால் என்ன.. நல்லது நடந்தால் சரி' என்று நினைப்பதில்லை.

சிவன் கோயிலுக்கு விளக்கு தானம் செய்வது புண்ணியம்தான். ஆனால் அந்த விளக்கு ஒளியை மறைக்கும் வகையில் இன்னார் விளக்கு உபயம் என்று எழுதிவைப்பது அந்த நல்ல செயலையே கேலிக் கூத்தாக்கிவிடுகிறது.

நாங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலம். அந்தக் காலத்தில் தீபாவளி வந்துவிட்டால் பட்டாசு வெடிப்பதுதான் எங்களுக்கு மிகவும் பிடித்தமான வேலை. என் தந்தை ஒரு சாதாரண வேலையில் இருந்தார். நாங்களோ நான்கு குழந்தைகள். எல்லோருக்கும் சேர்த்து 100 ரூபாய்க்குப் பட்டாசு வாங்கிக்கொடுத்தால் அதிகம். அதைப் பத்து பதினைந்து நிமிடங்களில் காலி செய்துவிடுவோம்.

எங்கள் வீட்டிலிருந்து இரண்டு வீடு தள்ளி ஒரு பணக்கார சேட்டு வீடு இருந்தது. அவர்கள் வீட்டில் ஒரே பையன். அவர்கள் வீட்டில் தீபாவளிப் பட்டாசுக்குப் பல ஆயிரங்கள் செலவழிப்பார்கள்.

பத்தாயிரம் வாலா, ராக்கெட், புஸ்வாணம், ராட்சத சங்கு சக்கரம் என்று தெருவையே திமிலோகப்படுத்துவார்கள்.

''இருந்தால் அப்படியல்லவா இருக்க வேண்டும்,'' என்று ஒரு முறை என் ஆதங்கத்தை என் தந்தையிடம் சொல்லிவிட்டேன். என் தந்தை அன்று சொன்ன வார்த்தைகள் இன்றும் என் காதில் ஒலிக்கின்றன.

''முட்டாள்! பட்டாசு யார் வெடித்தால் என்ன? நாமும் அதை ரசித்துப் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம்? புஸ்வாணத்தை யார் பற்ற வைத்தாலும், அது அழகாக அக்னிப் பூக்களை அள்ளி வீசுகிறதுதானே! அந்த அழகைப் பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு அந்த புஸ்வாணத்தை நானே பற்ற வைக்க வேண்டும் என்று நினைப்பது அகங்காரம்! நமக்கு அந்த அளவு பட்டாசு வாங்க வசதியைக் கொடுக்கவில்லையே என்று கடவுள் மேல் கோபம் கொள்ளாதே. நம் வீட்டுப் பக்கத்திலேயே இலவசமாக அழகான வாண வேடிக்கை பார்க்கும் வாய்ப்பைக் கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லு.''

நானே புஸ்வாணத்தைப் பற்ற வைத்துப் பார்க்க வேண்டும் என்று நினைப்பது அர்ஜுனனின் மனநிலை. யார் பற்ற வைத்தால் என்ன அந்த அழகைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்பது கர்ணனின் மனநிலை.

என் தந்தை வாணவேடிக்கைக்குச் சொன்ன அந்த அறிவுரை அனைத்திற்கும் பொருந்தும். சாமர்செட்மாம் என்ற எழுத்தாளர், பெண்கள் பெரும் சொத்தாக மதிக்கும் அழகிற்கு, என் தந்தையின் வார்த்தைகளைப் பொருத்தும் அழகைப் பாருங்களேன்.

''அழகு இறைவன் தரும் பரிசு. அபூர்வமான விலைமதிப்பில்லாத பரிசு. அந்தப் பரிசு நமக்குக் கிடைத்தால் நாம் இறைவனுக்கு

நன்றியுடையவர்களாக இருப்போம். கிடைக்கவில்லையென்றாலும் நாம் நன்றி உடையவர்களாக இருப்போம். - நாம் கண்டு மகிழ்வதற்காக இறைவன் மற்றவர்களை அழகாகப் படைத்திருக்கிறானே என்று.''

இன்று ஒரு கதையோ கவிதையோ நன்றாக இருந்துவிட்டால் அது என்னுடையது என் கற்பனையில் உதித்தது என்று சண்டை

போடுகிறார்கள். சிலர் அடுத்தவரின் படைப்பைத் தன்னுடையது என்று கூறிக்கொள்கிறார்கள்.

ஆனால், பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய வேதங்களையும் மிகப் பெரிய தத்துவங்களின் சங்கமமாக விளங்கும் உப

நிஷதங்களையும் யாரும் என்னுடையது என்று உரிமை கோரவில்லை. அவற்றை 'அபௌருஷேயம்' - அதாவது மனிதனால் படைக்கப்படாதது - என்றுதான் சொல்கிறார்கள். அவற்றை முதன்முதலில் இந்த உலகிற்குச் சொன்ன மகான்களுக்கு, 'இதை நான் படைத்தேனாக்கும்' என்று சொல்லும் அளவிற்குச் சின்ன புத்தி இல்லை.

''இவற்றையெல்லாம் இறைவன் என் மூலமாகக் கொடுத்தான். அதனால் இவற்றைப் படைத்தவன் இறைவன் தான்,'' என்று

சொல்லாமல் சொல்லிவிட்டுப் போனார்கள்.

'நல்லது நடக்க வேண்டும். அது என் மூலமாக நடந்தாலும் சரி.. இல்லை... வேறு யார் மூலமாக நடந்தாலும் சரி... மகிழ்ச்சியே!'

என்று நாம் அனைவரும் நினைக்கத் தொடங்கிவிட்டால், இந்த உலகமே சொர்க்கமாகிவிடும்.

- இன்னும் மலரும்

வரலொட்டி ரெங்கசாமி






      Dinamalar
      Follow us