ADDED : மார் 25, 2015 10:58 AM

பிரம்மரிஷி பிரஹதஸ்வர் நளனின் வரலாற்றைத் தொடர்ந்தார்.
''நளன் பொன் சிறகு கொண்ட பறவைகளைக் கண்டு அவைகளைப் பிடிக்க ஆசைப்பட்டான். கலிபுருஷனால் அனுப்பப்பட்ட அப்பறவைகள் ....'' என்று அவர் சொல்லி நிறுத்த, தர்மர் உள்ளிட்ட பாண்டவர்களிடம் திகைப்பு.
''இது என்ன கொடுமை.... கட்டிய துணியோடு காட்டுக்கு வந்தவனிடமுமா சோதனை?'' - என்று பிரஹதஸ்வரிடம் கேட்டான் தர்மன்.
''அது தானப்பா கலியின் தன்மை....! நெருப்பென்றால் தன்னுள் விழுவதை எல்லாம் எரித்து சாம்பலாக்க வேண்டும். மழை வெள்ளம் என்றால் வழியில் இருப்பதை எல்லாம் அள்ளி எடுத்துக் கொண்டு ஓடியாக வேண்டும். அதுபோல, கலிபுருஷன் என்றால், அவன் இறுதி வரை துன்பம் தந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவனுக்கான விதிப்பாடு...''
'அப்படியானால், கலிபுருஷன் வசம் ஒருவன் சிக்கினால், கடைத்தேறவே வழியில்லையா.... அவர்கள் நாசமாகித் தான் தீர வேண்டுமா?''
''ஆம்... யானை வாய் அகப்பட்ட கரும்பு சாற்றினை இழந்து, சக்கையாகிப் பின் அதுவும் சாணமாவது போன்றது தான் கலி மாயாவின் ஆற்றலும்....''
''என்ன மகரிஷி இப்படிச் சொல்கிறீர்கள்?''
நளப்பிரபு ஒரு பாவமும் செய்யாத நிலையில், அவரைக் கலிபுருஷன் ஆட்டி வைப்பது ஒருபுறம் இருக்கட்டும். இதை எல்லாம் வேடிக்கை பார்ப்பவரா இந்த கலி புருஷனையே படைத்த அந்த பரமாத்மாவான மாதவர்?'' என்று கேட்டான் நகுலன்
''நல்ல கேள்வி கேட்டாய் நகுலா..... இது போன்ற சோதனை எல்லோருக்கும் வருவதில்லை. சிலருக்கே இது போல நிகழும். முடிவில் என்னாகிறது என்பது தான் இதில் முக்கியம்...''
''முடிவு என்னாயிற்று?''
''அதை அறிய நளனின் கதையை நான் தொடர்கிறேன். தர்மா... இப்போதே உனக்கு நேரிட்ட இழப்பெல்லாம் பெரிய இழப்பே அல்ல என்ற எண்ணம் தோன்றியிருக்கும் என எண்ணுகிறேன்''
''இல்லை மகரிஷி! நளன் இத்தனை துன்பத்திற்கு இடையிலும், தன் மனைவியான தமயந்தியை சூதாட்டத்தில் பணயம் வைக்கவில்லை. ஆனால், நானோ பணயம் வைத்து விட்டேனே..?''
''உண்மை தான்! ஆனால், பணயம் வைத்திருந்தால் கூட பரவாயில்லை என்று நினைக்கும்படி, அவன் தமயந்தியைப் பொறுத்த வரையில் நடந்து கொண்டது தான் பெரிய கொடுமை.''
''அது என்ன?''
நளன் அந்த பொன் சிறகு கொண்ட பறவைகளை ஒரு சேர பிடிக்க விரும்பினான். அபூர்வமான அவற்றை, நகரத்திற்கு சென்று விற்றால் பணம் கிடைக்கும். அதன் மூலம் பசியாறவும், துணிமணி வாங்கவும் உதவியாக இருக்கும் என கருதியவன் அந்த பறவைகளைப் பிடிக்க, உடுத்தியிருந்த உத்தரியம் என்னும் வேட்டியை அவிழ்த்தான். அந்த நொடியே நிர்வாணமாகி விட்டான். அப்போது தமயந்தி தாகம் தணிய தடாகத்திற்குச் சென்றிருந்தாள்.
நளன் வேட்டியை வலை போல வீசி, பறவைகளைப் பிடிக்க முயன்றான். ஆனால், அவை ஒன்றாகக் கூடி அந்த வேட்டியுடன் வானில் ஏறிப் பறக்கத் தொடங்கின.
நளன் திகைத்து நிற்க, தமயந்தி ஆடையில்லாமல் நின்றவனைக் கண்டு மனம் பதைத்தாள். பின் புடவையின் முந்தியைக் கிழித்துக் கொடுத்தாள். அதையே துண்டு போல அவனும் கட்டிக் கொண்டான்.
பின் அங்கிருந்து இருவரும் நடந்தனர்.
ஓரிடத்தில், பல வழி பாதைகள் குறுக்கிட்டன. ஒன்று அவந்தி நகருக்கும், இன்னொன்று ருஷவான் மலை வழியாக தென்னாட்டிற்கும், மூன்றாவது விதர்ப்ப தேசத்திற்கும், நான்காவது கோசல தேசம் நோக்கியும் செல்வதாக இருந்தன.
அந்த கூட்டுச் சந்திப்பில் நின்ற நளன், ஆண்டியான தன்னோடு தமயந்தி வருவதை விரும்பவில்லை.
''அன்பே! நீ இந்த பாதை வழியே உன் தேசத்திற்குச் செல். உன் தந்தை ஒரு குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வார். என்னோடு வந்து கஷ்டப்படாதே. விதியின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் எனக்கு, ஆடை கூட சொந்தமில்லை. விதிப்பாவை எட்டுத் திக்கும் என்னை உதைத்து உருட்டி விளையாடுகிறாள். நீயாவது சந்தோஷமாயிரு,'' என்றான்.
ஆனால், தமயந்தி அதை ஏற்க மறுத்தாள்.
''பிரபோ.... என்னை விலக்கி வைக்க, எப்படி உங்களால் முடிகிறது? மனைவி என்பவள் இன்ப, துன்பத்தில் பங்கு கொள்பவள் தானே? அதிலும், இப்போதிருக்கும் நிலையில், நான் பிரிந்து சென்றால் என்னை விட ஒரு பெரும்பாவி யாருமில்லை. மறந்தும் இப்படி பேசாதீர்கள். அதைத் தாங்கும் சக்தி எனக்கில்லை,'' என்றாள்.
நளனால் ஏதும் பேச முடியவில்லை.
மனைவி அருகில் இருக்கிறாள் என்ற ஆறுதலும் கூட அவனுக்கு இருக்க கூடாது என்பது தான் கலிபுருஷனின் விருப்பம்.
அதை நிறைவேற்றும் நேரமும் வந்தது.
அன்று இரவு ஒரு காட்டுக்குள் மரத்தடியில் இருவரும் படுத்திருந்தனர்.
நள்ளிரவில் விழித்த நளன், சந்திர ஒளியில் தமயந்தியைக் கண்டான். அவள் தேவதை போலத் தென்பட்டாள்.
கண்ணீரோடு பார்த்த அவன், மனதிற்குள் மன்னிப்பு கேட்டவனாக, நடுக்காட்டில் அவளை விட்டுப் பிரிந்தான். பொழுது புலர்ந்தது. தமயந்தி நளனைக் காணாமல் மனம் துடித்தாள்.
''எங்கே போய் விட்டீர்கள்?'' என்று காடு முழுவதும் தேடினாள். நளனைக் காணவில்லை.
மாறாக, அவளை ஒரு மலைப்பாம்பு வெறித்துப் பார்த்தது.
கோரப்பசியோடு கிடந்த அதற்கு, தமயந்தி அறுசுவை அன்னமாகத் தெரிந்தாள். அவளும் அறியாதபடி, வாலினால் வளைத்துப் பிடித்தது. பின், அவளை விழுங்கவும் முயன்றது.
பாம்பின் வாயில் சிக்கிய அவள், அலறினாள்.
அப்போதும் உயிர் விடுவதை எண்ணிக் கவலைப்படாமல், '' பிரபோ... தங்களைப் பிரிந்த நான் இந்த உலகையும் பிரியும் நேரம் வந்து விட்டதே! உங்களுக்கு உதவி செய்ய முடியாமல் போனதே....... '' என்று வருந்தினாள்.
அப்போது கையில் வாளோடு வந்து கொண்டிருந்த வேடன் ஒருவன், பாம்பு தமயந்தியை விழுங்குவதைக் கண்டு விக்கித்துப் போனான்.
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்

