ADDED : மே 21, 2023 03:18 PM

காஞ்சி மஹாபெரியவரின் பக்தர் ஒருவர் திருச்சியில் இருந்தார். தினமும் காலையில் மஹாபெரியவரை வழிபட்ட பிறகே வேலையை ஆரம்பிப்பார். ஒருமுறை காஞ்சி மஹாபெரியவர் ஆந்திராவிலுள்ள கர்நுாலில் முகாமிட்டிருந்தார். அப்போது அங்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. திருச்சி பக்தர் சுவாமிகளை தரிசிக்க வேண்டும் என விரும்பியதால் அன்று காலையில் ரயிலில் புறப்படத் தயாரானார்.
வீட்டைப் பூட்டி விட்டு கிளம்பும் முன் மனதில் நெருடல் ஏற்பட்டது. சுவாமிகளுக்கு நைவேத்யம் வைக்காமல் கிளம்புகிறோமே என்ற எண்ணினார். அவசரம் அவசரமாக பாலைக் காய்ச்சி நைவேத்யமாக வைத்து வழிபட்ட பின் ரயிலில் கிளம்பினார். கர்நுாலில் எங்கு திரும்பினாலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சற்று துாரத்தில் மணற்குவியல் மீது நின்று தரிசிக்க முயன்றார். வெயிலின் கடுமையால் கால்கள் சுட்டன. பிறகு வந்து பார்க்கலாம் என கனமான மனத்துடன் சிறிது துாரம் நடக்கையில் யாரோ கூப்பிடுவது போல் இருந்தது. திரும்பிப் பார்த்தார். ஒருவர் அருகில் வந்து, “ நீங்க திருச்சி தானே?”
“ஆமாம்” என பதிலளித்தார்.
“பெரியவா... உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்”
“என்னையா?'' என வியப்புடன் கேட்டார்.
“நீங்க போட்டோகிராபர் தானே ?”
“ஆமாம்”
“ அப்படியானால் உங்களைத் தான்... வாருங்கள்”
பக்தரை அழைத்துக் கொண்டு மஹாபெரியவர் முன் நிறுத்தினார். கை கூப்பியபடி தன்னை மறந்து நின்றார்.
“ என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு துாரம் வந்துட்டு... கடைசியில் பார்க்காமலே போனால் எப்படி?” எனக் கேட்டார் மஹாபெரியவர்.
“கூட்டமாக இருந்தது. அதனால் அப்புறம் வரலாமே என்று'' என இழுத்தார் போட்டோகிராபர்.
“சரி... சரி.. சாப்பிட்டாயா''
“சாப்பிட்டேன் சுவாமி”
அப்போது மஹாபெரியவர்,“என் வாயைப் பார்த்தாயா?” என நாக்கை காட்டினார். சூடுபட்டது போல் சிவந்திருந்தது. “ உதடு புண்ணாகி விட்டது'' பக்தருக்கு என்ன சொல்வதென தெரியவில்லை.
“நீ பாலை கொதிக்க கொதிக்க வச்சு சாப்பிடுன்னுட்டே... அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா... அதான்!''
பரபரப்புடன் பால் நைவேத்யம் செய்தது அப்போது தான் பக்தருக்கு நினைவுக்கு வந்தது. சாஷ்டாங்கமாக திருவடியில் விழுந்து, “சுவாமி... என்னை மன்னியுங்கள்'' எனக் கதறி அழுதார் பக்தர். அவருக்கு பிரசாதம் கொடுத்து மஹாபெரியவர் ஆசியளித்தார்.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* எல்லோரும் நலமுடன் வாழ கடவுளை வேண்டுங்கள்.
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசியுங்கள்.
* தேய்பிறையில் செய்யும் வழிபாடு பிரச்னையை போக்கும்.
* வளர்பிறையில் செய்யும் வழிபாடு வளர்ச்சியை தரும்.
* ஈர ஆடையுடன் வழிபாடு செய்யக்கூடாது.
* தாய் மதத்தை பழிப்பது தாயை பழிப்பதற்கு சமம்.
* மனதை கெடுக்கும் எந்த நிகழ்ச்சிகளையும் பார்க்காதீர்கள்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
எஸ்.கணேச சர்மா
ganesasarma57@gmail.com