ADDED : மே 15, 2023 03:20 PM

நதியில் மிதந்து வந்த நாமதேவர்
ஸந்த் துக்காராம் எழுதிய 'சலா பண்டரீஸீ ஜாவூ' எனத் தொடங்கும் 'அபங்' பாடலின் பொருள்.
மக்களே வாருங்கள் பண்டரிபுரம் செல்வோம். அங்கு ரகுமாயியின் கணவனைக் காண்போம். அங்கு விட்டல தரிசனத்தால் நம் கண்களும் நாம சங்கீர்த்தனத்தால் நம் காதுகளும் இன்பம் அடைகின்றன. இதனால் நம் மனமும் நிம்மதி அடைகிறது. அங்கு சந்த்களுடனான சந்திப்பு நிகழ்கிறது. ஆனந்தத்துடன் சந்திரபாகா நதியின் கரையில் நர்த்தனம் ஆடுவோம். பண்டரிபுரம் எல்லாப் புண்ணியத் தலங்களின் பிறந்த வீடு. அனைத்து சுகங்களும் நிறைந்த தலம். அங்கு சென்றவர்களுக்கு மறுபிறவியே கிடையாது என்பது எனது வாக்குறுதி.
...
விட்டலனின் அணுக்கமான பக்தர்களில் ஒருவரான நாமதேவரின் பிறப்பு பற்றி பரவசத்துடன் பத்மநாபன் விவரிக்கத் தொடங்கினார் என்றாலும் சிறுவனான மகன் மயில்வாகனன் மனம் வேறு எங்கோ லயித்திருப்பதை அவரால் புரிந்து கொள்ள முடிந்தது.
'அப்பா, பரம பக்தையான கானோபாத்ரா இறுதியில் விட்டலனின் கோயிலுக்குள் மரமாக மாறிய நிகழ்வு ஆச்சரியமாக இருக்குது' என்றான்.
'அப்படியானால் உனக்கு மீராபாயின் இறுதி நாளைப் பற்றித் தெரியாது எனப் புரிகிறது' என்றார் பத்மநாபன் புன்னகையுடன்.
'அது என்ன சொல்லுங்கள் கேட்போம்' என்றபடி ஆர்வத்துடன் வந்து சேர்ந்தாள் பத்மாசனி.
'மீராபாயின் கதை உனக்குத் தெரிந்திருக்கும். ஒரு கட்டத்தில் மீராபாய் இந்த உலக வாழ்வைத் துறக்க எண்ணினாள். துவாரகையில் உள்ள கண்ணனின் கோயிலுக்குச் சென்று கதறினாள். முற்றிலும் எதிர்பாராத விதமாக, அங்கு இருப்போர் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் உடல் மாயமாய் மறைந்தது. சில நொடிகளில் கண்ணனின் சன்னதிக் கதவுகள் தாமாக மூடிக்கொண்டன. பின்னர் கதவுகளைத் திறந்த போது மீராபாய் எந்த புடவையை உடுத்தியிருந்தாரோ அது கண்ணனின் மீது படிந்திருந்தது. மீராவின் ஆன்மா கண்ணனுடன் ஒன்றியதை சந்தேகமற ஏற்றுக் கொண்டனர்'. இதைப் பகிர்ந்து கொண்ட பத்மநாபன் நாமதேவரின் பிறப்பைத் தொடர்ந்தார்.
...
'குணா, நீ கண்ட கனவால் உனக்கு ஆனந்தம் ஏற்பட்டிருக்கிறது. அதை நான் சிதைக்க விரும்பவில்லை. ஆனால் நாளைக்கு உனக்குக் குழந்தை பிறக்கும் என்று அந்தக் கனவு வாக்கு கூறியதாக குறிப்பிடுகிறாய். ஒரே நாளில் எப்படிக் குழந்தை பிறக்கும்?' என்று கணவர் தாம்சேட்டி கூறியதற்கு குணாபாயிடம் எந்த பதிலும் இல்லைதான்.
ஆனால் குணாபாய் கண்ட கனவு நனவாகிக் கொண்டிருந்தது. மகாபாரத காலத்தில் வாழ்ந்த உத்தவர் என்ற முனிவரை மீண்டும் அவதரிக்க வைத்து பக்தி மார்க்கத்தை பரவச் செய்ய வேண்டும் என்று கண்ணன் தீர்மானித்தான்.
மனைவியின் கனவு குறித்து குறை கூறிவிட்டு கிளம்பிய தாம்சேட்டி சந்திரபாகா நதியில் நீராடத் தொடங்கினார். அப்போது அவரது கண்களில் தென்பட்டது நதிக் கரையோரமாக ஒதுங்கிய ஒரு பிரம்மாண்ட வடிவில் அமைந்திருந்த முத்துச் சிப்பி. அதனுள்ளே இருந்து ஒரு குழந்தையின் அழுகுரல் வெளிப்பட்டது.
வேகமாக அந்தப் பகுதிக்குச் சென்ற தாம்சேட்டி அழுது கொண்டிருந்த சிசுவை கையில் எடுத்தார். அந்தக் குழந்தை உடனே அழுகையை நிறுத்தியது. தன் மனைவியின் கனவு நினைவுக்கு வந்தது. குழந்தையுடன் வேகமாக வீட்டை அடைந்தார். திகைத்து நின்ற மனைவியிடம் நடந்ததைக் கூறியபடி குழந்தையை கொடுத்தார். குழந்தையை அன்போடு அணைத்துக் கொண்டாள் அந்தத் தாய்.
குழந்தைக்கு நாமதேவன் எனப் பெயரிட்டனர். வெகு சிறப்பாக வளர்ந்தான். கல்வி கேள்வியில் நிகரற்று விளங்கினான். அதேசமயம் அளவில்லாத பக்தியும் இருந்தது. தினமும் தாம்சேட்டி தன் மகனுடன் விட்டலன் கோயிலுக்குச் செல்வார். மனைவி குணாபாய் சமைத்துத் தந்த உணவை பாண்டுரங்கனுக்கு அர்ப்பணிப்பார். அப்போது அதை வேறு யாரும் பார்த்து விடக்கூடாது என்பது போல் விட்டலனுக்கு முன்பாக திரையிட்டு மறைவாக நைவேத்தியம் படைப்பார்.
ஒருநாள் தாம்சேட்டி வெளியூர் செல்ல நேரிட்டது. மனைவியிடம் 'நாளை மறக்காமல் உணவு சமைத்து நாமதேவனிடம் கொடுத்து விட்டலனுக்கு நைவேத்தியமாக்கு' என்று சொல்லிக் கிளம்பினார்.
அடுத்த நாள் காலையில் உணவை ஒரு தட்டில் வைத்து மூடி மகனிடம் கொடுத்து அனுப்பினார் குணாபாய். நாமதேவனோ உணவை விட்டலன் தினமும் உண்மையாகவே உண்டு விடுவதாக எண்ணிக் கொண்டிருந்தான். விட்டலன் உண்டது போக மீதி உணவுதான் பிரசாதமாக வீட்டுக்கு எடுத்து வரப்படுகிறது என அவன் நம்பியிருந்த நிலையில் கோயிலுக்கு அன்று சென்றான்.
விட்டலனின் எதிரில் உணவை வைத்தான். விட்டலன் அதை உண்பான் என எதிர்பார்த்தான். நேரம் கடந்தது. விட்டலனும் வரவில்லை, உணவும் உண்ணப்படவில்லை. நாம தேவன் தவித்தான். 'சீக்கிரம் சாப்பிடு விட்டலா, எனக்கும் பசிக்கிறது. நானும் வீட்டுக்குச் சென்று சாப்பிட வேண்டும்' என்று கெஞ்சினான். எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கட்டத்தில் சிறுவன் நாமதேவனுக்கு விரக்தி அதிகமாக, 'என்னை வேண்டாம் என்று ஒதுக்குகிறாயா விட்டலா' என கத்திக் கொண்டே அங்கிருந்த துாண் ஒன்றில் தன் தலையை மீண்டும் மீண்டும் முட்டி கொள்ளத் தொடங்கினான். அவன் தலையில் இருந்து ரத்தம் பீறிட்டது.
அடுத்த கணமே சிலை வடிவில் இருந்து மாறி சங்கு சக்கரத்தோடு காட்சியளித்தான் விட்டலன். நாமதேவன் கொண்டு வந்த தட்டிற்கு எதிரே அமர்ந்து, 'வா, இருவருமே சாப்பிடலாம்' என்றான் விட்டலன்.
சிறுவன் நாமதேவன் விட்டலனுக்கு உணவின் முதல் கவளத்தை ஊட்ட, அடுத்த கவளத்தை விட்டலன் நாமதேவனுக்கு ஊட்ட, அங்கு நடந்தேறியது ஓர் அற்புத நிகழ்வு பின் சன்னதியில் இருந்த சந்தனத்தை எடுத்து நாமதேவனின் உடலில் பூசி விட்டான் விட்டலன். தனது பீதாம்பரத்தை அவனுக்கு அணிவித்தான். பின்னர் மீண்டும் சிலை வடிவம் ஆனான்.
-தொடரும்
ஜி.எஸ்.எஸ்.,
aruncharanya@gmail.com