sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 18

/

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 18

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 18

தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் - 18


ADDED : மே 15, 2023 03:19 PM

Google News

ADDED : மே 15, 2023 03:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்கி

பிரம்மன் மீது பீமன் கோபம் கொண்டு, ''இப்படி ஒரு யுகத்தை படைக்கத்தான் வேண்டுமா'' என்று கேட்ட கேள்விக்கு மார்க்கண்டேயர் பதிலளித்தார். ''சாமானியனின் மனநிலையில் இப்படி கேட்கிறாய். உனக்கு சிருஷ்டியின் தன்மை பற்றிய தெளிவில்லை.

எந்த ஒன்றும் மாறாதிருந்தால் புதிய ஒன்று தோன்றாது. மாறாத ஒன்றோடு ரசனை மிகுந்த ஒரு வாழ்க்கையையும் யாராலும் வாழ முடியாது. நீ குழந்தையாக பிறந்தாய். அப்படியேவா... இப்போதும் இருக்கிறாய்? அப்படி இருந்தால் உலகை அறிவது எங்ஙனம்?

எப்படி உன் உடலில் திசுக்கள் வளர்ந்து ஆளாகி நிற்கிறாயோ அப்படியே உயிர்களும் மாற்றங்கள் கண்ட வண்ணம் உள்ளன. இதில் இறுதி மாற்றமே மரணம். உடம்புக்கு மரணம் போல உலகுக்கும் மரணம் உண்டு.

உலகின் மரணமே யுகத்தின் முடிவு. உடம்புக்கான மரணத்தில் உள் உறுப்புகள் பலமிழக்கும். மந்தகதி தோன்றும்.. ஒவ்வொரு அவயவமாக செயலிழக்கும். பின் ஒட்டு மொத்த உடலும் உயிரைத் துறந்து அழுகி நாற்றமெடுக்க தொடங்கும்.

உடம்புக்கு நிகழ்ந்தது உலகுக்கும் நிகழ்ந்தாலே யுகத்திற்கு ஒரு முடிவேற்படும்''

மார்க்கண்டேயர் விளக்கியதைக் கேட்டு பீமனும் தெளிந்தான். சகாதேவனோ, ''அப்படியானால் இந்த கலியுகத்தின் முடிவு எப்படி இருக்கும்?'' எனக் கேட்டான்.

''கலியுகத்தின் முடிவில் மனிதர்கள் பழக்க வழக்கங்களிலும் விபரீத மாற்றம் உண்டாகும். சிரார்த்தம், தேவ கார்யம் இரண்டும் அறவே நிற்கும். இதைச் செய்து வைக்க பிராமணன் இருக்க மாட்டான். இதனால் வேள்விகள் மறையும். நிலங்களில் பசுக்களை கட்டி உழுவார்கள், தானியங்களைப் பயிர் செய்தவர்கள், மயக்க வஸ்துக்களை பயிர் செய்து எப்போதும் போதையில் கிடக்க விரும்புவார்கள். இதனால் உழைப்பு என்பதே இல்லாமல் உணவுப் பஞ்சம் ஏற்படும்.

அரசன் வரிகளை மிகுதியாக்கி வாட்டி வதைப்பான். மாயப் பேச்சு பேசுபவன் பண்டிதன் எனக் கொண்டாடப்படுவான். யாரும் யாரையும் நம்ப மாட்டார்கள். மரம், செடி, கொடிகளில் கூட பூவுக்குப் பின் காய் பின் பழம் என்பது மாறிப் போகும். மேகமானது பருவம் தப்பி மழையை பொழிவிக்கும், பருவ காலம் நிலை குலைந்து குளிர், மழை, காற்று, வெப்பம் என்ற நான்கும் எந்த வேளையிலும் உண்டாகும்.

நட்சத்திரங்கள் ஒளி குன்றும். பிராணிகளின் இனங்கள் ஒவ்வொன்றாய் அழியும். சூரியன் உதய காலத்திலும் அஸ்தமன வேளையிலும் ராகுவால் விழுங்கப்படுவான். அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு காடுகள் முற்றாக அழியும். கழுகுகளும், ராஜாளிகளும் வீட்டுக்கூரை மீது வந்து அமர்ந்து கொண்டு பசித்துன்பம் காரணமாக, மனிதர்களை கொத்தித் தின்னப் பார்க்கும் இவ்வேளையில் தான் கல்கியின் அவதாரமும் நிகழ்ந்து அதர்மம் புரியும் அவ்வளவு பேரையும் அழிக்கும் ஒரு நிலை உருவாகிடும். இதன் உச்சமாய் கடலானது பொங்கி நிலப்பரப்பு அவ்வளவும் நீரால் மூழ்கி பூமி என்பது ஒரு ஜலப்பந்தாக மாறிவிடும்''

மார்க்கண்டேயர் சொல்லி நிறுத்தவும் பாண்டவர்கள் அப்படியே உறைந்து போயிருந்தனர். திரவுபதி சிலை போல் மாறியிருக்க கிருஷ்ணன் மட்டும் புன்னகையோடு இருந்தான். அதைக் கண்ட சத்யபாமா கிருஷ்ணனிடம், ''எப்படி இவ்வளவையும் கேட்டு விட்டு உங்களால் சிரிக்க முடிகிறது?'' எனக் கேட்டாள்.

''சலனப்பட கிருஷ்ணன் என்ன பீமனா...'' என திருப்பிக் கேட்டார் மார்க்கண்டேயர்.

''மகரிஷி... புன்னகை கூட என் வரையில் சலனமே... வருத்தங்களை அழுது தான் உணர்த்த வேண்டும் என்பது கிடையாது. அர்த்தமுள்ள புன்னகையாலும் அதைக் கடத்தலாம். போகட்டும் அடுத்த யுகம் எப்படி பிறக்கும். அதையும் கூறி விடுங்கள்''

கிருஷ்ணன் மார்க்கண்டேய மகரிஷியை நெறிப்படுத்தவும் அவரும் தொடரலானார்.

''உலகும் அதன் உயிரினங்களும் ஜலத்தில் மூழ்கி அழிந்த நிலையில் விண்ணில் சூரியன், சந்திரன், பிரகஸ்பதி ஆகிய மூவரும் புஷ்ய நட்சத்திர மண்டலத்தில் ஒன்று கூடுவர். அப்போது பூமியின் நீரானது நான்கில் ஒரு பங்கு ஆவியாகி நிலப்பரப்பு தோன்றும். இதில் சில நாட்களிலேயே தாவரங்கள் முளைக்கத் தொடங்கி விடும். விண்ணிலும் மற்ற நட்சத்திர மண்டலங்கள் ஒளிரத் தொடங்கும். அவைகளின் கதிர்கள் பூமி மீது பட்டு, நிலப்பரப்பில் அவைகளின் அம்சங்களாய் புழு பூச்சிகள் முதல் உயிரினங்கள் உயிர்த்தெழும்.

நட்சத்திர மண்டலங்களைத் தொடர்ந்து கிரகங்கள் தங்கள் அம்சமுள்ள உயிரினங்கள், தாவரங்களை தோற்றுவிக்கும். எப்படி கலியின் தொடக்கத்தில் இமயத்தின் உச்சி நிலப்பரப்பு மட்டும் மூழ்கிடாமல் அங்கே சப்தரிஷிகள் அடைக்கலமாகி பின் அவர்களால் மானிடர்கள் குலம் கோத்திரங்களுடன் தோற்றுவிக்கப்பட்டார்களோ அப்படியே இப்போதும் மானிட இனம் உருவாகும்.

இம்மானிடர்கள் மிகுந்த ஒழுக்கம், தியாகம், கருணை, வாத்சல்யம், தயை, வைராக்கியம், பக்தி, பாசம் என்ற எண்வகை உணர்வு நிலைகளுடன் வாழ்பவர்களாக இருப்பர். கலியை முடிவுக்கு கொண்டு வர மகாவிஷ்ணு கல்கியாக தோன்றி புதிய யுகத்தை வழிநடத்துவார். இந்த யுகமே கிருதயுகம் என்கிற முதல்யுகமாக திரும்பத் தோன்றிடும்.

கல்கியால் மீண்டும் கோயில்கள் எழும்பும். யாகங்கள் நிகழும். எங்கும் மகிழ்ச்சி நிலவும். பசி, பட்டினியற்ற தர்ம ராஜ்ஜியம் உருவாகும். அதில் பிராமணன் தர்மத்தில் இருந்து பிசகாமல் நடப்பான். வைசியன் நெறி தவறாமல் வர்த்தகம் புரிவான். சத்திரியன் சகல உயிர்களையும் கண் போல திகழ்ந்து காப்பான்.

சூத்திரர்களால் நிலப்பரப்பு பசுஞ்சோலையாகும். அவர்களில் இருந்து பல்கலை வித்தகர்களும் தோன்றுவர்'' என மார்க்கண்டேயர் புதிய கிருதயுகம் குறித்தும் கல்கி குறித்தும் கூறி முடித்தார். இனிய கிருதயுகத்தின் தொடக்கம் பாண்டவர்களை மகிழச் செய்தது.

''மகரிஷி... கலியுகம் பிறக்க இன்னும் எவ்வளவு காலம் உள்ளது. நிகழ்ந்திடும் இந்த துவாபரம் எப்போது முடியும். இந்த யுகத்தில் நாங்கள் இனி செய்ய வேண்டியது என்ன?'' என தர்மர் கேட்க, மார்க்கண்டேயர் பதில் கூறினார்.

''தர்மா... உங்கள் வனவாசம் முடிந்து உங்களால் ஹஸ்தினாபுரம் ஆளப்படும் காலம் வரும். உங்கள் ஆட்சியின் போதே கலி பிறந்து விடும். ஆனாலும் அதன் தொடக்கம் அதன் முடிவைப் போல கொடியதாக இருக்காது. எனவே நீ பிறக்கப் போகும் கலியுகம் குறித்து கவலை கொள்ளாதே.

உனது தர்மமும் உங்கள் போராட்டங்களும் கலியில் பெரிதும் சிந்திக்கப்படும். திரவுபதி எளியோரின் தெய்வமாகக் கருதி வணங்கப்படுவாள். ஸ்ரீகிருஷ்ண நாமமும், ராம நாமமுமே கலியுகத்தில் உற்ற துணையாக இருந்திடும்'' என கலி குறித்த செய்திகளை கூறி முடித்தார். அதன்பின் அவர் விடை பெற்றுச் செல்ல, கிருஷ்ணனும் துவாரகை நோக்கி புறப்பட்டான். அப்போது துரியோதனன், சகுனியிடம் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறிச் சென்றான்.

கிருஷ்ணனும், சத்யபாமாவும் சென்ற சில நாட்களிலேயே ஒரு பிராமணன் யாத்ரீகன் வடிவில் பாண்டவர்கள் ஆசிரமத்திற்கு யாசகம் கேட்டு வந்தான். திரவுபதி வணங்கி வரவேற்று உணவளித்து அவனிடம் ஆசி பெற்றாள்.

அந்த பிராமணன் பாண்டவர்கள் ஐவரையும் ஆசீர்வதித்தான். அவர்களின் வனவாச காலமும் ஒரு முடிவை நோக்கி நெருங்குவதை அந்த வேளையில் அறிந்தவன், ''விரைவில் நீங்கள் இழந்த செல்வம் சகலத்தையும் பெற்றிட வாழ்த்துகிறேன்'' என்று கூறி புறப்பட்டான்.

அப்படிப் புறப்பட்டவன் அடுத்து நேராக சென்று சேர்ந்த இடம் ஹஸ்தினாபுரம்! பின் துரியோதனின் தகப்பனும் விசித்திர வீரியனின் புத்திரனுமான திருதராஷ்டிரன் எதிரில் போய் நின்றான். அவனை வரவேற்ற திருதராஷ்டிரனும், ''நான் தங்களுக்கு செய்ய வேண்டியது யாது?'' என கேட்டான்.

''மன்னா! நான் துவைத வனத்தில் இருந்து வருகிறேன். அங்கே திரவுபதி சமதே பாண்டவர்களை சந்தித்தேன். அவர்கள் குறித்து பேசவே வந்துள்ளேன்'' என்றான்.

பாண்டவர்கள் குறித்து கவலையில் இருந்த திருதராஷ்டிரனுக்கு பிராமணன் அப்படிச் சொல்லவும் தேன் குடித்தது போலானது.

--தொடரும்

இந்திரா செளந்தர்ராஜன்






      Dinamalar
      Follow us