sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தலவிருட்சங்கள் - 1

/

தலவிருட்சங்கள் - 1

தலவிருட்சங்கள் - 1

தலவிருட்சங்கள் - 1


ADDED : மே 12, 2023 04:34 PM

Google News

ADDED : மே 12, 2023 04:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை மீனாட்சியம்மன் கோயில் - கடம்பு

ஒரு கோயிலுக்கு சுவாமியைப் போல தலவிருட்சமும் முக்கியம். தலவிருட்சங்கள் கடவுளுக்குரிய பூக்களை தருவதோடு வழிபடுவோருக்கு அருளையும் தருகிறது.

கோயிலில் உள்ள விக்ரஹங்கள், கொடிமரம், தலவிருட்சம், கோபுரம், பிரகாரம், கருவறை என அனைத்தும் ஆன்மிகம், அறிவியலை இணைக்கும் பாலங்கள். உடலுக்கும், உள்ளத்திற்கும் புத்துணர்வு தரும் கோயில்களின் ஆன்மிக ஆற்றல் பிரமிக்கத்தக்கவை. கருவறையில் ஏற்படும் அதிர்வலைகள், மந்திரங்கள், திருநீறு, குங்குமம், தீர்த்தம் என எல்லாம் நம்மை மேம்படுத்தும் அதிசயங்கள். இவற்றை உணர்ந்தால் விஞ்ஞானியாக மட்டுமின்றி மெய்ஞானியாகவும் வாழலாம்.

அந்தக் காலத்தில் மனிதர்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் மரங்களே உணவு, இருப்பிடத்தை தந்தன. அந்த மரங்களைப் பாதுகாக்க உருவானதே தலவிருட்ச வழிபாடு.

கோயில்களில் சுவாமியை வழிபட்டதும் புறப்பட்டு விடுகிறோம். ஆனால் கோயில் பிரகாரத்தில் அல்லது நடைபாதையில் இருக்கும் கடவுளின் மறுவடிவமான தலவிருட்சங்களை யாரும் பொருட்படுத்துவதில்லை.

தலவிருட்சங்கள் கோயிலின் வரலாற்றை எடுத்துச் சொல்கின்றன. பெயர்ப்பலகை, வழிகாட்டி என எந்த அடையாளமும் இல்லாத அந்தக் காலத்தில் கடவுளின் இருப்பிடத்தை தலவிருட்சமே அடையாளப்படுத்தின. சில கோயில்களில் தலவிருட்சம் கருவறைக்கு பின்புறத்தில் இருக்கும். சுயம்பு மூர்த்தியாக மூலவர் உள்ள கோயில்களில் தலவிருட்சமே முதலில் தோன்றின.

மதுரையின் புராணப்பெயர் திருஆலவாய் என்னும் கடம்ப வனம். சக்தி பீடங்களில் ஒன்றான இது விநாயகரின் அறுபடை வீடுகளில் ஒன்று. தேவாரப் பாடல் பெற்ற பாண்டி நாட்டு தலங்களில் முதல் தலம் மதுரை. சுந்தரானந்த சித்தராக சிவபெருமானே இங்கு வந்ததால் இத்தலம் சித்தர் பீடமாகவும் உள்ளது. கடம்ப மரத்தை தலவிருட்சமாக கொண்ட மதுரையில் வழிபட்டே பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து தேவலோக அதிபதியான இந்திரன் விடுபட்டார்.

இப்பகுதியை ஆட்சி செய்த குலசேகர பாண்டிய மன்னரிடம், 'கடம்பவனமான இதை நகரமாக உருவாக்கு' என கனவில் தோன்றிய சிவபெருமான் ஆணையிட்டார். அவரது ஜடாமுடியில் உள்ள பிறையில் இருந்து மதுரம் (அமிர்தம்) சிந்தியதால் இத்தலம் 'மதுரம்' (மதுரை) எனப் பெயர் பெற்றது. இத்தலத்தில் தான் புலவர் தருமிக்காக வந்த சிவபெருமானிடம், 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என புலவர் நக்கீரர் வாதம் செய்தார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் பாடலை குமரகுருபரர் பாடியதும் இங்கு தான். குமரனை கிழவனாக்கியது, கல் யானைக்கு கரும்பு கொடுத்தது, பிட்டுக்கு மண் சுமந்தது என திருவிளையாடல்களை சித்தராக வந்த சிவன் இங்கு நிகழ்த்தினார்.

வினைகளால் தோன்றும் நோய்களை நீக்கி உடலுக்கு வலிமை தருவது கடம்ப மரம் என்கிறார் நாயன்மாரில் ஒருவரான திருநாவுக்கரசர்.

''நுாலால் நன்றா நினைமின்கள்

நோய்கெடப்

பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார்

காலால் ஊன்றுகந் தான்கடம்

பந்துறை

மேலா னாஞ்செய்த வல்வினை வீடுமே'' என்கிறது தேவாரம்.

மீனாட்சியம்மன் கையிலுள்ள கிளி இங்குள்ள தலவிருட்சமான கடம்ப மரத்தை சுற்றி விட்டு பறந்ததாகவும், அதைத் தொடர்ந்தே இத்தலம் நிர்மாணிக்கப்பட்டதாக புராணம் கூறுகிறது. பச்சை நிற இலைகள், அடர் மஞ்சள் நிற உருண்டை பூக்களை கொண்ட கடம்ப மரங்கள் பூத்துக் குலுங்கும் போது கிளைகளில் கிளிகள் இருப்பது போல இருக்கும். செம்மஞ்சள் நிறம் கொண்ட கடம்ப பழங்களை கிளிகள் விரும்பி உண்ணும். மீனாட்சியம்மனின் கிரீடத்தின் உச்சி இடது பக்கம் சாய்ந்து கடம்ப மலர் போல காட்சி தரும். அம்மனின் கிளியும், அலங்கார கொண்டையும் கடம்ப மரத்தின் பெருமையை பறை சாற்றுகின்றன. கடம்பவன வாசினி, கடம்பவனப் பூவை என மீனாட்சியம்மனுக்கு பெயருண்டு. சுவாமி சன்னதியின் பிரகாரத்தில் பழமையான கடம்ப மரம் வெள்ளி தகடு போர்த்தி பாதுகாக்கப்படுகிறது.

காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால்

ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்கும்

கடம்பா முருகா கதிர்வேலா நல்ல

இடங்காண் இரங்காய் இனி.

திருமுருகாற்றுபடை

மீனாட்சியம்மனின் மகனான முருகனுக்கு உரியதாக கடம்ப மரம் உள்ளதால் அவரை 'கடம்பன்' என அழைப்பர். மஞ்சள், வெள்ளை, நீலம், நீர்க்கடம்பு என்னும் கடம்ப மரத்தில் நான்கு வகை உள்ளன. இவற்றில் மஞ்சள் கடம்பு மதுரையின் தலவிருட்சமாகும்.

இதன் பெயர்கள், மருத்துவ குணங்கள் பற்றி சித்தர்கள் பாடியுள்ளனர்.

போகர் பாடிய பாடல் இது.

''கடம்பின் பேர்தனையே கருதக்கேளு

கனமான னீயோதுாற்றிக தம்பசிவாஞ்

கடம்பான சுவர்னமாம் விருத்தபுட்பஞ்

சூபுரங் கரணபூ ராக்கியமுமாகும்

விடம்பான விசுவலோப காரகமாகும்

விடங்கான பலபத்திரப் பிரியப் பிரேத்தம்

படம்பான பாரதிகிப் பிரியதாதி

பாடினதோர் கடம்பினிட பாங்குமாமே''

நீயோதுாற்றி, கதம்பசிவம், சுவர்னம், விருத்தபுட்பம், கரண பூராக்கியம், விசுவ லோபகாரகம், பலபத்திரம், பிரியப் பிரேத்தம், பாரதி, பிரியாத்தீ என கடம்பின் பெயர்களாகக் குறிப்பிடுகிறார்.

அகத்தியர் பாடிய பாடல் இது.

''கடப்பம் விதைக்குக் கடிவிடமு முண்டோ?

தொடுப்புமண்டை நீருந் தொலையும் - இடக்கான

வாத வகையொழியும் மந்தங்கள் ஏகிவிடுங்

கீதமொழி மாதே கிளத்து''

கடம்பின் விதைகள் விஷக்கடி, வாதநோய், மந்தம், தலைநோய் போக்க வல்லது என்கிறார்.

சித்தரான தேரையர் பாடிய பாடல் இது.

''தொந்தித் தகலாத தோடச் சுரமகன்று

சிந்தைக் கனுகூலஞ் சேரவென்றால் - வந்தித்துத்

தாப சுரமுமறச் சஞ்சலமி வாதருந்து

நீபப் புரணிகுடி நீர்''

கடம்பமர பட்டையை கஷாயம் செய்து குடிக்க பலவித ஜுர நோய்கள் தீரும்.

உடல் சூட்டைத் தணிக்க கடம்ப மரப்பட்டையும், பெண்களின் கருப்பை பிரச்னை, வெள்ளைப்படுதல் தீர கடம்பமர பழங்களையும் சித்த மருத்துவம் பயன்படுத்துகிறது. ஜுரத்தை போக்க கடம்ப மரப்பட்டையால் ஆன கஷாயத்தைக் குடிப்பர். கடம்ப இலைச் சாற்றில் நாட்டுச்சர்க்கரை கலந்து சாப்பிட்டால் வாய்ப்புண் தீரும்.

கடம்ப மரத்தின் தாவரவியல் பெயர் ஆன்த்தோசெபாலஸ் கடம்பா. இது ரூபியேசியே குடும்பத்தை சார்ந்தது. 45 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை.

இலைகளை உண்பதற்கு பட்டாம் பூச்சிகளையும், பழங்களை உண்ண கிளிகளையும் வரவழைத்து கோயிலைச் சோலையாக மாற்றும் மரமான கடம்பினை பெருமைப்படுத்தவே சிவபெருமான் சுயம்பு லிங்கமாக இதனடியில் குடியிருக்கிறார். சிறப்பு மிக்க மதுரைக் கோயிலை நமக்கு அளித்த சொக்கநாதர், மீனாட்சியம்மனை நன்றியுடன் வழிபடுவோம்.

-தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

98421 67567

jeyavenkateshdrs@gmail.com






      Dinamalar
      Follow us