sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

ஆண்டாளும் அற்புதங்களும் -- 24

/

ஆண்டாளும் அற்புதங்களும் -- 24

ஆண்டாளும் அற்புதங்களும் -- 24

ஆண்டாளும் அற்புதங்களும் -- 24


ADDED : மே 12, 2023 04:39 PM

Google News

ADDED : மே 12, 2023 04:39 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூமிபிராட்டி இட்ட மூன்று முடிச்சுகள்

நமக்கெல்லாம் பெண்கள் கழுத்தில் ஏறும் மூன்று முடிச்சு பற்றி தெரியும். பூமிபிராட்டி முடிந்து வைத்த மூன்று முடிச்சுகளை பற்றி தெரியுமா? மூன்று முடிச்சுக்கும் கோதையின் திருப்பாவைக்கும் என்ன சம்பந்தம்? அந்த தளத்தில் நுழையும் முன் இந்த நிகழ்வை பார்த்து விட்டு செல்லலாம் வாருங்கள்.

ஒருமுறை மகாலட்சுமியிடம், “தேவி... நீ போய் நம் கீதையின் சாரத்தை எடுத்துச் சொல்லி இந்த உலகத்தில் உள்ளவர்களுக்கு வழிகாட்டுகிறாயா?” என்றாராம் பெருமாள். அதற்கு மகாலட்சுமி என்ன சொன்னார் தெரியுமா? ''ராமாவதாரத்திலும் கிருஷ்ணாவதாரத்திலும் நான் பட்ட துன்பம் கொஞ்சமா நஞ்சமா! அப்பப்பா அதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. சற்று ஓய்வு கொடுங்கள். இப்படி பிழிந்து எடுக்காதீர்கள்” என மறுத்துவிட்டார். நம் வீட்டில் கூட கடைக்குப் போய் ஒரு பொருளை வாங்கி வரச் சொல்லும் போது ஒருவர் செய்ய மறுத்தால் அதை அடுத்த பிள்ளையிடம் கேட்போம் இல்லையா? அப்படித்தான் பெருமாளும் அடுத்து பூதேவியிடம் கேட்க, “ நீங்கள் என்னை போகச் சொல்வீர்கள் என எதிர்பார்த்து காத்திருக்கிறேன்” என முந்தானையில் போட்ட முடிச்சுகளோடு மகிழ்ச்சியாக வணங்கினாளாம்.

அட! இது என்ன மூன்று முடிச்சு? பொதுவாக ஆண்கள் தானே பெண்கள் கழுத்தில் மூன்று முடிச்சு இடுவார்கள். இது என்ன இது பூதேவி மூன்று முடிச்சுகள் போட்டு இருக்கிறாளே. அதுவும் எப்போது போட்ட முடிச்சுகள் அவை? வராக அவதாரத்தில், வராகத்தின் மூக்கின் மேலே அவள் உட்கார்ந்து இருந்தபோது அவன் சொன்ன மூன்று கட்டளைகளுக்காக போட்ட மூன்று முடிச்சுகள் தான் அவை. அந்த மூன்று கட்டளைகளை பார்ப்போமா? அவன் திருவடியில் மலரிட்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பது முதலாவது கட்டளை. அவன் திருநாமத்தை உரக்கச் சொல்ல வேண்டும் என்பது இரண்டாவது கட்டளை. அவன் திருவடியில் ஆத்ம சமர்ப்பணம் பண்ண வேண்டும் என்பது மூன்றாவது கட்டளை. ஆக இந்த மூன்றுக்காகவும் பூதேவி மூன்று முடிச்சுகளை இட்டுக் கொண்டாள்.

சரி, பெருமாள் கட்டளை பிறப்பித்தாயிற்று. இனி பூலோகம் சென்று பிறப்பு எடுக்க வேண்டியது தான் பாக்கி. “எங்கே போவாய்? யாரிடம் பிறப்பாய்? எனக் கேட்ட போது, ''நீங்கள் எனக்கு உதவ மாட்டீர்களா என்ன” என சிரித்தபடி புறப்பட்டாள் பூமிதேவி. இறுதியில் ஸ்ரீவில்லிபுத்துார் வேதியர் கோன் விஷ்ணு சித்தரின் மகளாக பூமியில் அவதரித்தாள். வராக மூர்த்தியின் வாக்கை தானே எடுத்துக்காட்ட வேண்டும் என்பதற்காக துளசி வனத்திலே அவதரித்தாள் அன்னை. அதற்குப் பின் நடந்ததெல்லாம் நமக்குத் தெரியுமே. பிறக்கும்போதே மேன்மை உடையவளாய் ஆழ்வாரின் திருமகளாய் வளர்ந்து கண்ணனுக்கு இரு மாலைகள் கட்டினாள். ஒரு மாலை திருப்பாவை என்னும் பாமாலை. மற்றொரு மாலை பூ மாலை. ஒன்றை பாடி சமர்ப்பித்தாள். மற்றொன்றை சூடி சமர்ப்பித்தாள். சரி பெருமாளின் மூன்று கட்டளைகளை நிறைவேற்றினாளா என்றால்... ஆம், திருப்பாவையை பாடி அதை நிறைவேற்றினாள் நம் கோதை. திருப்பாவையில் இந்த மூன்று கட்டளைகள் எங்கே வருகிறது?

திருப்பாவையின் முதல் பத்து பாசுரங்களில் அவன் திருநாமத்தை சொல்லு என நமக்கு உணர்த்துகின்றன. இரண்டாவது பத்து பாசுரங்கள் “உயர்ந்ததான அவன் திருவடியை அர்ச்சனை செய்து பாரு” என்கின்றன. மூன்றாவது பத்தில், “ அவன் திருவடிகளில் ஆத்ம சமர்ப்பணம் பண்ணு என்று சொல்கின்றன. ஆக வராக மூர்த்தியிடம் அன்று கேட்ட மூன்று விஷயங்களை 30 பாசுரங்களாக பாடி ஆண்டாள் அவதாரத்தில் செய்து முடித்தாள் பூமிபிராட்டி. திருப்பாவை என்பது ஒரு நுால் மட்டுமல்ல. கோதை செய்த வேள்வி அது.

ஆண்டாள் நமக்கு கீதையின் வழியை காட்டி அவனையே திருக்கல்யாணமும் செய்து கொண்டாள். வேலை முடிந்ததும் பறவைகள் கூட்டை அடைவது போல, நாமெல்லாம் வீட்டை அடைவது போல ஆண்டாள் சேர வேண்டிய இடத்தில் போய் சேர்ந்தாள். அப்படிச் சேர்ந்ததில் நமக்கெல்லாம் ஒரு நல்ல வழிகாட்டல் இருக்கிறது. வராக மூர்த்தி சொன்னதை அனுசரித்து அவள் அவனை அடைந்தது போல நாமும் அவனை அடையலாம்.

இந்த வராக அவதாரம் எப்படி மற்றவற்றைக் காட்டிலும் பெருமை வாய்ந்தது? உலகையே தன் ஒரு திருவடியால் அளக்க முனைந்தது வாமன அவதாரம். அதே உலகமானது இந்த வராக அவதாரத்தில் பகவானின் மூக்கிலே ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றால் பாருங்கள். ஏதோ ஒரு சின்ன அழுக்கு போல கொஞ்சமே கொஞ்சம் கண்ணை ஏமாற்றுவது போல ஒட்டிக் கொண்டிருக்கிறது. “ நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹச் எம் டா” என திரைப்படத்தில் ஒரு வசனம் வருமே... அதுபோலத்தான் இதுவும். உலகையே தன் மூக்கின் மேல் தரிக்கிறான் என்றால் வராக மூர்த்தியின் பிரம்மாண்டம் விளங்கும். இது எவ்வளவு பெரிய சிறப்பு! என்னுடைய விஸ்வரூபத்தை எவன் ஒருவன் உணர்கிறானோ, எவன் என் திருநாமத்தை வாய்விட்டு உரக்கச் சொல்கிறானோ, எவன் என் திருவடியில் சமர்ப்பணம் பண்ணுகிறானோ அவன் அழைக்கும் போது ஓடோடி வருவேன்“ என்கிறான் அந்த பரமாத்மா.

எம்பெருமானின் இப்படிப்பட்ட வாக்கு இந்த வராக அவதாரத்தில் வெளிப்பட்டதனாலே அது பெருமையும் சிறப்பு மிக்க அவதாரம் ஆயிற்று. கடவுளே மனிதனுக்காக அவனைத் தேடி வருவது என்பது எத்தனை சிறந்தது! நம்மை தேடி கடவுள் வருகிறார் என்றால் நாம் எத்தனை பாக்கியம் பெற்றவர்கள்! அந்த வாக்கை பூமி பிராட்டி மூன்று முடிச்சுகளாக முடிந்து வைத்துக் கொண்டாளாம். மறதி காரணமாக இந்த அருஞ்செயலை மறந்து விட்டால் என்ன செய்வது? எம்பெருமான் சொன்னதை மக்களிடம் எப்படிப் போய் சேர்ப்பது? என்ற நல்லெண்ணத்தில் பூமி பிராட்டி செய்ததுதான் அது. இதில் இன்னொரு அம்சம் என்னவெனில் நாராயணன் மறந்து விட்டாலும் அவனுக்கு இதை நினைவூட்டலாம். திருநாமம் சொல்லுதல், பூக்கள் சமர்ப்பித்தல், ஆத்ம சமர்ப்பணம் என்ற மூன்றுக்கும் மூன்று முடிச்சுகள். அந்த எம்பெருமானின் இந்த மூன்று கட்டளைகளை தான் அவள் தன்னுடைய ஆண்டாள் அவதாரத்தில் நடத்திக் காட்டினாள். நம் அனைவரிடமும் சிறப்பு பெற்றாள்.

ஆக கடவுளை அடைய வேண்டிய வழியை மக்களுக்கு எடுத்துச் சொல்ல கடவுளே நமக்காக அனுப்பியவர் தான் ஆண்டாள். இது பரமாத்மாவின் வாக்கு. இதை ஆண்டாள் வழியாக நமக்கெல்லாம் சொல்லியாயிற்று. இனி இதன் வழி நடக்க வேண்டியது தான் பாக்கி. ஆசிரியர் வழிகாட்டியபடி தேர்வில் எழுதினோமானால் அதிக மதிப்பெண்கள் கிடைக்கும் தானே!

அத்துடன் தன் பக்தியால் இலக்கியத்தையும் வளர்த்து வளப்படுத்தி இருக்கிறாள் ஆண்டாள். ஆழ்வார்களின் பாடல்கள் தமிழ் நாகரிகத்தின் வெளிப்பாடு என்பார்கள். இருண்ட காலம் எனப்படும் களப்பிரர்களின் காலத்துக்கு பிறகு மக்களிடையே தமிழையும் பக்தியையும் ஒருசேர வளர்த்ததில் ஆழ்வார்களின் பங்கு அதிகம். சங்கப் பாடல்களின் பொருள் நமக்கு புரியாது. அகநானுாறு, புறநானுாறு பாடல்களுக்கு ஆசிரியர் விளக்கமோ அல்லது கோனார் உரையோ நமக்கு அவசியம். ஆனால் ஆண்டாளின் பாசுரங்களை உன்னிப்பாக படித்துப் பார்த்தால் நமக்கே ஓரளவு அர்த்தம் விளங்கிவிடும். பக்தி இலக்கியங்கள் தமிழுக்கு கிடைத்த பரிசு. அதை எந்நாளும் நாம் போற்றி பாதுகாத்துக் கொண்டாட வேண்டும்.

நம்முடைய அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு திருக்குறளை போல திருப்பாவையையும் கொண்டு சேர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும். மார்கழியில் ஆங்காங்கே திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி நடக்கிறது. அது இன்னும் தீவிரமடையும் போது ஆண்டாள் பற்றி சமூகம் இன்னும் அறிந்து கொள்ளும். ஆண்டாளைப் பற்றிக் கொண்டு சிறப்பான முறையில் கடவுளை அடைவோம்... வாருங்கள்.

-தொடரும்

பவித்ரா நந்தகுமார்

82204 78043

arninpavi@gmail.com






      Dinamalar
      Follow us